Thursday, April 5, 2012

கூடங்குளம் கற்க கசடற...

கூடங்குளம் கற்க கசடற...


                     பிரபஞ்ச பேரியக்கத்தில் எதிர்மறைகளின் போராட்டம்  சமூகமாக  தகவமைத்துக் கொண்ட  உடல்களின்  தொகுப்புக்குள்ளும்  விரிவடைகின்றது. எதிர்மறைகளின்  போராட்டத்தின் ஒன்றின்  மீதான  பிரிதொன்றின்  அதிகாரங்கள் கட்டமைக்கப்பட்டு இயங்கு தளத்தை சாத்தியப்படுத்திக் கொண்டே இயங்கியல்  தொடர்புகின்றது.   உடல்கள் இயக்கங்களுக்கு  ஆதாரமான  அக, புறக் காரணிகளை  தகவமைக்கும் வெவ்வேறான அலகுகள் உற்பத்தியாகி அவைகள்  மீதான அதிகாரங்களும், அவைகளுக்குள்ளேயா  அதிகாரங்களும்  உருவாகின்றன. இயங்கும் அனைத்துக்கும் பொதுவானதாக இது நிகழ்கின்றது. அவ்வகையில் இயங்கும் உடல்கள் எதிர்மறைகளாக பிளவுபட்டு அவைகளுக்கான அதிகாரங்களுடன் தனது போராட்டங்களை  அவை இயங்கும் பல்வேறு  அலகுகள் மீது நிகழ்த்தி வாழ்வியலை தொடருகின்றன. உடல்களின் வாழ்வியல்  தன்மையை  தீர்மானிக்கும் சுதந்திரத்தை, அது சார்ந்து இயங்கும்  புறநிலைக் காரணிகள்  பெற்றிருக்கின்றன.  புறநிலைக்  காரணிகளின்  எதிர்மறை  இயக்கம்  உடல்களின் தொகுப்பிலும்  நேர்முரண்களை  தோற்றுவிக்கும்  தன்மையோடு  நிகழ்கின்றது.   மனுட வரலாறு  முழுக்க  இதன் பதிவுகள்  தொடருகின்றன. 

                                  இயற்கையின்  புதிர்களை  விடுத்துக் கொண்டே அதன்  நிரூபணங்களோடு  மேலும் மேலும்  புதிர்களை  விடுவிக்கும்  முயற்சியில் நிரூபணங்களை  கண்டடையும்  முயற்சியில் உடல்களின்  இயங்கியல்  தொடருகின்றன.  இதன் அடிப்படை  அச்சமே.  அச்சம்  தவிர்க்க  அச்சமூட்டிய  நிகழ்வின் காரணிகளை  தேடுவதும்,  நிரூபணம்  கொள்வதும் தொடர்கின்றது. வாழ்வியலை உறுதிப்படுத்தும் புறநிலைக்  காரணிகளுக்கு  தடைகளான  அச்சமூட்டும்  புதிர்களை விடுவிக்க  வேண்டிய நிர்பந்தம் உடல்களுக்கு  ஏற்படுகின்றது. இது அரசியல், பொருளாதார புறகாரணிகளில் வெளிப்பட்டு  வெவ்வேறான அதிகாரங்களையும், அதன் தீவிர- மிதவாத தன்மைகளை  நிர்ணயிக்கிறது.  

                        இவ்வகையில்  கூடங்குளம்  போராட்டத்தையும் அணுகலாம்.   கூடங்குளம் பிரச்சனை  இரண்டு பிரிவுகளில்  விவாதிக்க  வேண்டியவை. 
              1)அணு விஞ்ஞானம்  2)  அதன் மீதான வினைகள் 
                          விஞ்ஞானம்,   மெய்ஞானம்  இருபிரிவுகளிலும்  அணுவைப்  பற்றிய புரிதல்  மனித உடல்களின்  ஒரு பெரும் பாய்ச்சல்  என்ற குறிப்பிடலாம்.   உடல்களின்  இயங்கு தளத்தை  உத்திரவாதம்  செய்யும் புறநிலைக் காரணிகளின்  பல்வேறு அலகுகளில்  மிகப் பெரிய  மாற்றங்களை  நிகழ்த்திய  வல்லமையைக்  கொண்டது.   அணு விஞ்ஞானம் உடல்களில்  நிகழும்  பல்வேறு அணுசேர்க்கையை  ஒழுங்குபடுத்துவதன் மூலம்  அவைகளின்  வினைகள் உடல் தன்மையில்  தோற்றுவிக்கும்  விளைவுகளை  விளங்கிக் கொண்டதன் மூலம் மெய்ஞானமும் விரிவடைந்தது.  புறநிலை காரணிகளின்  இயக்கத்தில் அறிவியல்  தொழில்நுட்ப  வளர்ச்சியில்  அணு விஞ்ஞானம் தவிர்க்க இயலாத  இடத்தைப் பிடித்துக் கொண்டுவிட்டது.   எந்த ஒரு நிகழ்விலும்  ஊடாடும்  எதிர்மறைகளின் வினைவிளைவு அணு விஞ்ஞானத்தில் செயல்பட்டது.   எதிர்மறைகளின்  போராட்டத்தில் பேரச்சம் கொள்ள வைக்கும் அணு ஆயுதங்கள்  குவித்துக் கொள்ளும் பண்பு வளர்ந்து விட்டது.  அணு அதிகாரமற்ற  அரசியல் அதிகாரம்  செயலற்றதாக  அறிய வேண்டிய  நிர்பந்தத்திற்குள்  உடல்கள் தங்களை  திணித்துக்  கொண்டுவிட்டன.   அச்சத்தை  தவிர்க்க அணுவை  அறிந்து  அணுப் பேராற்றலின்  எதிர்மறை  விளைவுகளின் மீதான அச்சத்துடனான  அதிகார அரசியலை  உடல்கள்  மேற்கொள்ள வேண்டிய  நிர்பந்தத்திற்கு  தள்ளப்பட்டுள்ளன. அச்சம் கொள்ளவைப்பவை  அணு உலைகள்  மட்டுமல்ல  அணு ஆயுதங்களும்  கூட. 
                      உடல்களின்  தொகுப்பில் எதிர்மறைகளின்  உராய்வில்  பேரழிவு  ஆயுத வளர்ச்சி  நிலையில் அதிகார  நிலைப்படுத்தல் போராட்டத்தில்  பேரச்சத்தை நிறுவ   அணு ஆயுதங்கள்  குவிக்கப்படுகின்றன.  அணு ஆயுதம்  மூலமான அழிவு  எதிர் இரு பிரிவுக்கும் உண்டு என்பதால்  பேரச்சத்தை  நிறுவதோடு  மிதவாத  போக்கையும்  ஆளும் அதிகாரங்கள்  மேற்கொள்கின்றன. அணு தொழில்நுட்பம்  முற்றாக வளர்ச்சியடையாத  நிலையில் உள்ளது.   அதன் பரிமாணங்கள் வளர்ச்சி  நிலையில் தான்  உள்ளன. அச்சம்  தொடர்ந்த வண்ணம்  இருக்க  புறநிலை கூறுகள் மீதான  பாதுகாப்பு  கேள்வியாக  தொடருகின்றன. 
                      இந்நிலையில்  முரண்களின்  உராய்வில்  எதிர்வினைகள்  தொடர்ந்த வண்ணம்  இருக்கின்றது. அணு தொழில்நுட்பத்தின்  மீதான அச்சத்தால்  பேரழிவு  ஆயுதமாக  பரிணமிக்கும்  இயல்பு கருதி  அதை புறக்கணிக்க  எத்தனிக்கும்  உடல்களின்  தொகுப்பிற்கும்,  அவ்வகை ஆயுதங்களை  நிறுவி பேரச்சத்தின்  மூலம் அதிகாரங்களை  நிலைப்படுத்தும் தொகுப்பிற்குமான உரசல்கள் தொடர்கின்றன. அதிகார  நிலைப்படுத்துவதில்  ஆளும் அதிகாரத்தின்  செயல் தந்திரத்தில்  ஊசலாட்டங்கள், பலாத்கார வழிமுறைகளிலிருந்து தோற்ற அளவிலான  சலுகைகள்  வழங்கும் வழிமுறைகளுக்குச்  செல்வதற்கான  மாறுதல்கள்  கடந்த அரை நூற்றாண்டின்  சமூக வரலாற்றுக்குரிய  குண விசேஷம்.  
                       சமூக தளத்தில் உடல்களின்  தொகுப்புகளின்  இயக்கத்தை  புறகாரணிகளான  பொருளியல்  உறவுகள்  செயல்வழிபடுத்துகின்றன.  இவை அவைகளுக்குள் அடுக்கு  பிரிவிணைகளை ஏற்படுத்தி எதிர்மறை முரணியக்கத்திற்கான களத்தை  நிறுவுகின்றன.  இந்த அடுக்கில் நடுத்தர  பொருளியல்  உறவு அதிகாரங்களைக்  கொண்ட  உடல் தொகுப்புகளின்  அதிகாரம்  ஊசலாட்டத்  தன்மை கொண்டுள்ளன.  எல்லா வகை  எதிர்மறை  முரணியக்கத்திலும்  நிலைத்த  அதிகாரத்தை  நோக்கிய  செயல்வழியை  பின்பற்றாமல்  குருங்குழுக்களாக  தகவமைந்து  அதிகாரத்துவம், வம்சாவழி  தலைமை,   தண்டனை விதிக்கும் தன்மை,   கட்டளை வாதம்,   தனி உடல்  வீரசாகசம், தாரளவாதம், அதீத சனநாயகம், வணிகக்குழு  மனோநிலை,  பகுதிசார்ந்த  உடல்கள், நட்பு உடல்கள்  குழு சார்ந்த உடல்களுக்கு  சலுகை காட்டும் ரசிக மனோநிலை என்ற அளவில் தொகுப்பு கொள்கின்றன. அணு  தொழில் நுட்பத்திற்கெதிரான  போராட்டத்திலும்  இத்தகைய போக்குகள்  நீடிக்க  பொருளியல்  உறவுகளில் நடுத்தர  தன்மையுடைய  தலைமைச் சக்திகளின்  ஊசலாட்டமே  பிரதான  பின்னடைவுகளை  தோற்றுவிக்கின்றன. 
                   சமூக  தளத்தில் உடல்களின்  எதிர்மறை  முரணியக்கத்தின் மோதல்  போக்கில்  வரலாற்று அனுபவங்களைக் கொண்டு ஆளும் அதிகாரங்கள் தங்களை  நிலைப்படுத்திக்  கொள்ள பலாத்கார வழியை மட்டும் நம்பவில்லை  சலுகைகள்  வழங்கும் மிதவாதத்தையும்  கொண்டிருக்கிறது.   அவ்வகையில்  சலுகைகள்  வழங்கும் புறகாரணிகளான  அலகுகளை தன்னார்வ  தொண்டில்   ஈடுபட்டு  உடல்களின்  வாழ்வியல்  மேம்பாட்டிற்கு உதவுபவைகளாக  கட்டமைக்கப்பட்டு  மோதல்,  கலக நிகழ்வுகள் தீவிர  பலாத்கார தன்மை  உடையதாக  இல்லாமல்  இருக்கும்படி  பார்த்துக் கொள்ளும்  பொறுப்பை  ஆளும் அதிகாரங்கள்  இவ்வகை  அலகுகளுக்கு  அளித்துள்ளன.  காந்தியியமும்  அதன்  கட்டமைப்பும்  இதற்கு  உதவுகின்றன.  அதிகாரப்  போட்டிகளின்  செயல்வழிகளில்  இவ்வகை அலகுகளின்  பங்கு இன்று தீவிர  பரிசீலணைக்  குள்ளாக வேண்டிய  ஒன்றாகி உள்ளது.  
                               உடல் தொகுப்புகளின் எதிர்மறை முரண் இயக்கத்தில் அறங்கள்  கற்பிக்கப்படுகின்றன.  கற்பிக்கப்படும்  அறம் வழி நடக்க  உடல்கள்  வற்புறுத்தப் படுகின்றன. முரண் இயக்கத்தின்  ஆட்படும் உடல்கள்  ஆளும்  உடல்களுக்கு  எதிரான எதிர் வினைகளை  அறவழி  நின்று நடத்த  ஊக்கப்படுத்தப்படுகின்றன.  கற்பிக்கப் பட்ட  அறவழி  தவிர்த்து  எதிர்வினையாற்றும்  உடல்கள் மீது  பேரச்சம்  கொள்ள வைக்கும்  பலவந்தம்  பிரயோகமாகின்றது. இது அச்சம்  கொள்ள வைக்கும்  ஆயுதங்களின்  அதிகாரங்களாக  நிர்மாணிக்கப்  படுகின்றது. அறவழி  எதிர்வினைகள்  பலவந்த நிலைக்கு  பரிணமிக்காமல்  இருக்க இலக்கியங்களும்  ஒற்று உணர்த்தி  நிழல்யுத்தம்  செய்யும் அலகுகளும்  உருவாக்கப்படுகின்றன. 
மேற்கண்ட  விஷயங்களின்  அடிப்படையில்  கூடங்குளம்  போராட்டம்  இங்கு  நிலவும்  வாழ்வியல்  நெடுக்கடிகளின்  மீது உடல்  தொகுப்புகளின் முரணியக்க  போராட்டமாகவும்  அதன் மீதான ஆளும் அதிகாரத்தின் மிதவாத அணுமுறை  அடிப்படையிலான ஒடுக்கு முறையாகவும்  அனுமானிக்கலாம்.  இப்போராட்டத்தின்  தலைமை  பொருளியியல்  தளத்தில்  பெரும் மூலதன  திரட்சி  அதிகாரங்களுக்கு  ஆட்படும்  சிறு மூலதன  அதிகாரங்கள்  அவற்றின்  காயலாங்கடை  சரக்குகளைக் கூட புதியனவாகவும் புனிதமானதாகவும்  கொண்டாடும்  நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன.  அணு உலைகளும்  அப்படித்தான். 
                    பெரும் மூலதன திரட்சி  அதிகாரங்கள் நெருக்கடிக்குள்ளாகின்றன.  அவ்வகை  நெருக்கடிகளை  ஆட்படும்  அதிகாரம் கொண்ட  தளங்களுக்கு  நகர்த்தி  தற்காலிக  தீர்வு  நோக்கும் போது  பொருளியியல் ஆதாயத்திற்கான  செயல்வழியாக  இவ்வகை  சந்தையை  நிர்ணயித்து அதனோடு உடல்களின் புறநிலைக் காரணிகளை  இணைக்கின்றன. உடல்கள் வணிக மனோ நிலைக்கு மாற்றப்பட்டு சந்தை பொருளாதாரத்தோடு உருவாக்கம்  கொள்கின்றன. நெருக்கடிகளை  தீர்த்துக் கொள்ள  உதவும்  லாபம் மட்டும் இவ்வகை  சந்தையின்  நோக்கம்.   அதற்கான  ஆளும்  அதிகாரங்கள்  நிறுவப்படுகின்றன.  உடலின் உணர்வு  தளத்தில்  பேரச்சத்தை  நிறுவும் மனநிலையை உற்பத்தி செய்யும்  வகையான  ஊடக,  இலக்கிய தயாரிப்புகளை  ஆளும் அதிகாரங்கள்  ஊக்குவித்து உற்பத்தி செய்கின்றன.  இவை கூடங்குளம்  போராட்ட காலகட்டத்திலும் நடந்தேரியுள்ளது. இதன்மூலம்காயலாங்கடை  தொழில்நுட்பத்தையும், சரக்கையும்  சந்தைப்படுத்தி  லாபம் பார்க்கின்றன மூலதன  திரட்சி கொண்ட  அதிகாரங்கள்.  
                         கூடங்குளம்  போராட்டம்  வழங்கிய அனுபவங்களாக  உணரக்கூடியவை.

1)  அணு ஆயுத  பேரழிவுக்கு  எதிரான போராட்டத்தின்  தொடர்ச்சியாகவும்,   பாதுகாப்பாற்ற  தொழில்நுட்ப ரீதியாக  முழுமை  பெறாத  தொழில்நுட்பத்தின்  அடிப்படையிலான  அணு உலைக்கெதிரான போராட்டமாகவும்  வளர்க்கப்படாதது.  
2)  பெரும் மூலதன  திரட்சியின்  அதிகாரங்கள்  தங்களின்  கட்டுப்பாட்டில்  கொண்டுவரப்பட்ட  ஆட்படும்  அதிகாரங்களின்  உடல் தொகுப்புகள் மீது தங்கள்  நெருக்கடிகளை  சுமத்தும்  தீர்வுகளுக்கு  எதிராக  உலக தாராள மயமாக்களின்  அடிப்படையில்  அணு தொழில்நுட்பத்தை  திணிப்பதற்கு  எதிராக நிறுவிக்  கொள்ளாதது. 
3)  குறுகிய வரம்புகளுக்குட்பட்ட  தனிமனித உடல்களின்  அனுபவங்களைக்  கொண்டும்,   சர்வதேச  போராட்ட  அனுபவங்களை  கொண்ட  உறுதியான அமைப்பு  வழி செயல் தந்திரங்களை  கணக்கில் கொண்டு  ஆளும் அதிகாரங்களுக்குள்ளேயான  முரண்பாடுகளை  கையாண்டு போராட்டத்திற்கான  நட்பு சக்திகளை திரட்டாதது.  
4)  காலம் கடந்த  நிலைப் போராட்டமாக  பகுதிப் போராட்டமாக  குறுக்கப்படக்கூடிய  கொள்கைகளையும்  முழக்கங்களையும்  பிரதானப்படுத்தியதும்,   சமூக தளத்தில் தற்போதைய  முதன்மையாக  அலை இறக்க  உணர்வெழுச்சிகளைக் கொண்டுள்ள  உடல் தொகுப்புகளின்  பிற்போக்கு  தனங்களை  கணக்கிடாமை.
5)   ஆளும் அதிகாரங்களுக்கு  எதிரான எழுச்சிகளை  பலவந்தமாக  ஒடுக்குவதற்கு  மாற்றாக  முன்மொழிவு  கொள்ளும் சலுகை  வழங்கும் மிதவாத போக்கின்  அலகுகளாக  செயல்படும்  தன்னார்வ தொண்டு  நிறுவனங்கள்  காட்டிய முனைப்பு  மற்றும் அதன்  நிர்ணயிக்கப்பட்ட  எல்லைகளுக்குள்ளே நின்று போராடியது. 
6)   பெரும் மூலதன திரட்சி அதிகாரங்களுக்கிடையேயான  சந்தைப் போட்டியில்,   ஒரு சார்பாக  மறைமுகமாக  அதன் நலன்களுக்கு  சேவை செய்யும்  போக்கு கொண்டதாக  அமைந்தது. 
7) அணு தொழில்நுட்பத்தை  முற்றிலுமாக  மறுதலித்து  விட்டதோடு,   அதன் பாதுகாப்பையும், இழப்பீட்டையும்  முன்னிருத்தாமையும்,  போராட்டத்தின் போக்கு  ஏற்ப கள வியூகங்களை  வகுக்காதது. 
போன்றவை  பிரதானமாகவும்  உடனடியாக  அனுமானித்து  உணரமுடிகின்றது.   பரபரப்பாக  பேசப்பட்டு  எவ்வித கோரிக்கைகளை  பூர்த்தி செய்து  கொள்ளாமல் ஓய்ந்து போன  போராட்டம்  கோரிக்கை விழையும்  உடல்களில்  விரக்தியடையும்  நம்பிக்கை  வறட்சியையும்  தான் தோற்றுவித்திருக்கின்றது.  ஆனால் இது வரலாற்றுக்கு புதிதல்ல. 
# kudangulam # atomic power station