Tuesday, February 14, 2012

கல்வி எந்திரங்களும்..


தகவல் குப்பையள்ளும் கல்வி எந்திரங்களும்....

                                 தகவல் குப்பையள்ளும்  கல்வி எந்திரங்களும்....
                                அவையில் முந்தியிருப்ப  ....  அதிகாரங்கள்.
                                             பொறியாளர் இரா.கோமகன்.

 ஆசிரியருக்கும் மாணவனுக்கும், மாணவருக்கும் பெற்றோருக்கும்  பெற்றோருக்கும்  ஆசிரியருக்கும்  இடையே  நிலவும் உறவுகள்  குறிப்பிட்ட அதிகாரத்தில் கட்டமைகின்றது. கற்றல் என்பது சந்தைப் போட்டியில் விலைபோகும் அறிவை ஈட்டல்  என்பதாகவும்,   பொருளியியல்  திரட்சி நிலைப்படுத்தும் சந்தைக்கான உடல்களை தயாரிக்கும்  பணியை மேற்கொள்வதே  கல்வி நிறுவனங்களின்  பணி என்றும்,  அங்கு நிலைப்படும்  அதிகாரத்தை ஏற்று, அதற்கு  உட்பட்டு  இயங்க  உடல்  ‘அறம்’ படுத்தப்பட்ட  உடல்களாக  மாற்றும்  வேலையை  கூடவே செய்கிறது.  கற்றல் என்பது  தன்னையறிதல்,   தன் சூழலறிதல்,   சுந்திர  அறிவியக்கத்தை  அறிதல், தன்னை ஆளும் அதிகாரமறிதல்  இன்னும் விரிவு  கொள்ளும் அறிதல்  போக்குகளின்றி  உடல்களை  அந்நியமாக்கும்  ஆளுதல்,   ஆட்படுதல்  என்ற அதிகாரப் போட்டிக்கு  தயாராக்குகின்றன.  உடல் இறந்த காலத்தில் வாழ்வதற்கான  கல்வியை தருவதற்காகவே கல்வி கூடங்கள் இயங்குகின்றன. ஒவ்வொரு உயிரும்  உடலும்  தனித்தன்மையுடன்  தான் விளங்குகின்றன.  இத்தனித்தன்மைகளை  களைந்து  அல்லது அவற்றை  ஒரு பொது அதிகாரத்தின் கீழ் கட்டமைக்கப் படுவதே கல்வியின்  நோக்கமாக  திகழ்கின்றது. உடல், மனம், உணர்வு  சக்தி நிலைகளில்  இளமையால்  இயல் பூக்கத்தில் நிகழும் பௌதீக வினைகளின் மையத்தை ஆளும் அதிகாரத்திற்கான பண்புகளை கொண்டதாக மாற்றியமைக்க,  கற்பிக்கப்படும் கல்வியும், திட்டமும், செயல்முறைகளும் குறிப்பிட்ட அதிகாரமாக கட்டமைக்கப்படுகின்றது. இந்நிறுவனத்தில் அறிவுருவாக்கும்  ஆசிரியர்  உடல்கள் ஆளும்  அதிகாரப் பண்பையும், கற்கும் மாணவ உடல்கள் அதற்கு  ஆட்படும் பண்பையும்  ‘குருசிஷ்ய’ உறவாக கற்பிக்கப்படுகின்றது.   மாணவ உடலுக்கிடையே ஆளும் அதிகாரத்திற்கு ஆட்படும் பண்புகள்  சிறந்ததெனவும், கலகம் செய்யும் உடல்கள் அறம் அறுத்து அந்நியமாகும் உடல்களாக  அறியப் படுகின்றது. சந்தைப் பொருளியியல் சூழலில்  வணிகப்  பொருளாக  மாற்றப்பட்ட கல்வியைக் கொண்டு உபரியை  உற்பத்தி செய்யும் உடல்களாக  ஆசிரிய  உடல்கள் தயாரிக்கப்பட்டு  அதிகாரமளிக்கப்படுகின்றது. கல்வித் துறையில்  பன்னாட்டு ஏகபோக பொருளியல் திரட்சி செயல்படுவதால் நிறுவனமாக்கப்பட்ட வணிகச்  செயல்பாட்டுக்குள் ‘குரு’ எந்த உடல் திணிக்கப்பட்டு  வார்ப்புகளாக  ஆசிரிய உடல்கள் தகவமைகின்றன.  சந்தை மதிப்புக்குரிய  அறிவை,  ஆளுமையை  தயாரிக்கும் பணியில்,  போட்டியில் சிக்கிய  ஆசிரிய உடல்கள்  உடல் தொகுப்புகள்  இயங்கும் சமூகத் தளத்திலும்  இயங்குவதால்  ஆளும் அதிகாரத்திற்குட்பட்டு  சுதந்திர மற்ற  இருக்கமான வெளியில்  உலவும் உடல்களாகவும் அதன்  வினை எதிர்வினைகளுக்கு  ஆட்படும் உடல்களாகவும் உள்ளன. கற்றல், கற்பித்தல்  என்பன ஆளப்படும்  பண்பாக முன்னதும்  ஆளும் பண்பாக பின்னதும்  ஆக்கப்பட்டு  நிலையில்  இவைகளில்  தொடர்புரும்  உடல்களும்  இதன் தன்மைக்கு ஏதுவாகின்றன.
‘இவன் தந்தை என் நோற்றான்  கொல்’  எனும்  இறந்தகால  நிகழ்வின்பத்தின்  மீது வேட்கை கொண்ட  பெற்றோர்  உடல்கள், இறந்த காலத்திலேயே  வாழ்வதால் எதிர்காலத்தின்  மீது கொண்ட  அச்சத்தால்  தன் இருப்பு நீடிக்க  வேண்டும் என்ற  அச்சத்தினூடாக பிள்ளைகள்  உறவை பேணுகின்றன. அதற்கு  சந்தை மதிப்பு பெற்ற அறிவுப்பண்பை  பெற்ற உடலை  உருவாக்க உழைத்து  ‘அவையில் முந்தியிருப்ப’ செயலையாற்றுகின்றன.  உடமை உரிமை அடிப்படையில் ஆளும், ஆளப்படும் பண்புகள் தான் பெற்றோர் மாணவ உடல்களில் ஊடாடுகின்றது. ஆசிரிய உடல்கள் சந்தை நுகர்வுத் தன்மை பெற்றபின்  பெற்றோர்கள்  ஆசிரியரிடையான உறவும்  அந்நிலை எய்தியது. கொடுக்கல் - வாங்கல், உபகாரம் - பிரதி, உபகாரம், உழைப்பிலிருந்து  அந்நியப்பட்ட  உறவு, உற்பத்தியில் உரிமை கோராமையாக  இவ்வுறவு  நீடிக்கின்றது.  பருண்மையான  மூலதன  திரட்சியின்  அதிகாரம்  இருக்கமான  மனம் கொண்ட உடல்களை  உருவாக்குவதோடு  நுண்ணிய (micro level) மாற்றும் பருண்மையன(macro level) அதிகாரச்  செயல்பாடுகளில்  அவற்றிற்குள்ளேயும், அவைகளுக்குள்ளேயும் நிலவும், போட்டி, முட்டல், மோதல்  உறவுகளால் உடல்கள் அழைக்கழிக்கப் படுகின்றன. இங்கு தருவது / பெறுவது, ஆளுவது/ ஆளப்படுவது  என்றபடி ஆசிரிய மாணவ  உறவு இல்லாமல்,   கற்றல்- கற்பித்தல் என்பது பரிமாற்றப் பண்பு கொண்ட உறவாக மாறல் வேண்டும்.
                      "பொய்யான கல்விகற்று பொருண்மயக்கங் கொள்ளமல்
                      மெய்யான ஞானக்கல்வி விரும்புவாய் கன்மனமே" .
                                                    இடைக்காட்டு சித்தர்.

கல்வியை பொருத்தவரை நீண்டகாலமாகவே எது மெய்யான கல்வி, எது பொய்யான கல்வி என்ற வாதங்கள் தொடர்ந்து வந்துள்ளமை காணக்கிடைக்கின்றன.கல்வி தேடலுக்கானதாக அமையாமல் தகவல்களை திணைக்கும் முறையாகவே அமைந்துள்ளது.தேடலில் தோழாமையுறவும், திணித்தலில் ஆளும்-ஆட்படும் உறவும் நிடிக்கும்.தற்போது நிலவும் உற்வு மாறாத வரை, இவ்வதிகாரத்திற்குள்ளேயான  மோதல்கள் நீடித்து  ஆசிரியர்கள் கொலை, மாணவிகள்  கற்பழிப்பு  தொடரும் அமைப்பை  உறுதிப்படுத்தும்.