Friday, March 30, 2012

கலைடாஸ்கோப்பின் பிம்பங்களுக்குள்  கரையும் அனுமானத்தின் பிரமாணம்

கலைடாஸ்கோப்பின் பிம்பங்களுக்குள்  கரையும் அனுமானத்தின் பிரமாணம்

                           மரம்  சும்மா இருந்தாலும்  காற்று விடுவதாக  இல்லை தான்.  எவ்வளவு தான்  ஜெயமோகனை விட்டு விலகி  நின்று வாசிப்பை  தொடர்ந்தாலும்  மீண்டும் சுழற்சிக்குள்  வரவேண்டியுள்ளது.  விவாதத்தில் உள்ள  கட்டுரை பதிலில் ஜெயமோகன் பல முரண்பட்ட  நிலைகளை எடுத்து  அடுத்த அடுத்த பகுதிகளிலேயே தன்னை மறுத்தே நகருகின்றார்.  பல்வேறு அதிகாரங்களின் செயல் வெளியில் அரசியலும் ஒன்று. இதன் இழைகளுக்குள் ஒவ்வொரு உடலும் கட்டப்பட்டிருக்கும் நிலையில் இலக்கிய வாதி நான் தனித்தியங்குபவன் எந்த அரசியலிலும் சாராதவன் என்று  அந்தரத்தில் தொங்க முடியாது. அப்படிக் கூறுவதில் அரசியலும், அதிகாரமும் உள்ளீடானது. நிரூப்பிக்கப்பட்ட உண்மைகளை  கேள்விக்குள்ளாக்கி  நம்பிக்கை வறட்சியை ஏற்படுத்தும் முயற்சிகள் இப்படியாகவும்  தொடருகின்றன.  கலைடாஸ்கோப்பு பிம்பங்களாக  ஜெயமோகன் சமூகத்தில்  பரபரப்பாக பேசப்படும் எல்லாவிதத்திலும்  மறுப்பக்கம்,  மறுப்பக்கத்தின்  மறுபக்கம் உண்டு அவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பார்த்தால் மட்டுமே இலக்கிய வாதியாக  நான் பேச முடியும் எழுத்தாளானால் அவற்றின் எல்லா தருணத்திலும் பேசிக்கொண்டிருக்க முடியாது என்று நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறார்.  அது அவரது  நிலை என்று  விட்டுவிடலாம் ஆனால் ‘‘எல்லா தரப்பும் மௌனம் காக்கும் போது இலக்கிய வாதியின் குரல் எழுகிறது’’ என்று தான்  தன் திருவாய் மொழிக்கு கருத்தியல் நிலைப்பாடாக வியாக்கியானம் வரும் போது நாம் எழ வேண்டியுள்ளது. எந்த தரப்பு வேளச்சேரி சம்பவத்திற்கு மவுனம் காத்தது என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை.
              ‘‘மக்களின் கூட்டின் தார்மீகமே சமூகத்தின் தண்டிக்கும் சக்தியாக இருக்க வேண்டும் என்பதை தொடர்ச்சியாக நிறுவிக்கொண்டிருக்கம் செயல்பாடு’’ இதில் எவ்வகையான அதிகாரம் நிலைக் கொண்டிருக்கிறது என்பது விளங்காத செய்தி. மக்களின் கூட்டான தார்மீகம் சமூக இயங்கியல் விதியில் இரு எதிலிகள் எல்லாவற்றிலும் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. மக்களின் கூட்டான தார்மீகம் என ‘ஜெயமோகன்’  கற்பனாவாதம் ஒரு நிழல் யுத்தம்.
                   ஒரு உடலோ அல்லது ஒரு அலகோ உடமை என்று  (பொருள், கருத்து, நுட்பம், கலை)  அறிவித்ததை  உணர்ந்ததை  பெற்றதை வேறு ஒரு உடலோ அலகோ  அவைகளுக்குள் அங்கீகரித்துக் கொண்ட  பரிவர்த்தனை உறவுகளைத் தாண்டி உடமையாக்கி கொள்வது  களவாக, திருட்டாக குறைந்தபட்சம் வரையறைப் படுத்த முடியும்.
                         அது உடமை அதிகாரத்தின் மீதான பிரிதென்றின் அத்துமீறல் அதிகாரமே. அரசு என்ற அலகின் அதிகாரங்கள் உடமை அதிகார பாதுகாப்பு என்ற அடிப்படையில் இவ்வகை அத்துமீறல் அதிகாரங்களை அனுமதிப்பதில்லை. அந்த அலகிற்குள்ளே நிகழும் அளவு  திருட்டு, ஊழல், லஞ்சம் போன்ற நிலை பொருளாதார அத்துமீறல்கள் அவ்வமைப்பு அதிகாரத்தை  சிதைக்காதவரை  ஆட்படும் அதிகாரங்கள்  அனுமதி பெறுகின்றன ஊக்கப்படுத்தப்படுகின்றன. இவை ஒழுக்க விதிக்கட்கு  உட்பட்டு சில மரபெழுக்கமாகி  அறமாக கற்பிக்கப்படுகின்றன. அரசு என்ற அலகு அனைத்துக்கும் பொதுவானதாக  சார்பற்றதாக கற்பிக்கப்பட்டு பொது புத்தியில் நிறுவப்படுகின்றது. ஜெயமோகன் ஏற்றுக்கொண்டது போல் ‘‘பிரமாண்டமான உள்பிரிவு உள்ள  ஒரு ஜனநாயகம் நம்முடையது’’ என்று          
                       பொருளியல் ரீதியாக அனைத்து உறவுகளும்  நிறுவப்பட்டு நிலைப்படும் அதிகாரச் சூழலில் அதற்கு எதிரான ஒழுங்கமைக்கப்படாத  கலகங்களலாக  அத்துமீறல்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.  உடமை அதிகாரப் பண்புகளை  சுவைத்து அதுவே இன்பமாகவும், நிலைத்து மகிழ்வாகவும், பாதுகாப்பாகவும் உணரும் உடல்கள் ஆசையாக அதையே விழைகின்றன. இறந்த காலப் பண்புகளான  நிகழ்காலத்தில் நிறுவி அப்படியே எதிர்காலத்தை  விழையும்  ஆசைகளோடு  திரிகின்றன. அதற்கு பங்கம் வருகின்ற போது பதைபதைத்து  எதிர்வினையாற்றுகின்றன. தனித்தோ, கூட்டாகவே  தங்களின்  அதிகாரங்களை  நிகழ்த்துகின்றன.  இங்கு எதிலிகள்  பிரத்யட்சனமாகின்றன. இந்த மோதலில்  எந்த அலகு பிரிதொன்றின்  மீது அச்சத்தை  நிறுவி நிலைப்படுத்துகின்றதோ  அந்த அதிகாரமே  நீடிக்கின்றன.  இவை சலனப்படும்  போது, சிதைவு  கொள்ளும் போது  அவை புத்திப் பதிவில்   நினைவூட்ட  அவ்வப்போது  இது போன்ற  ‘என்கவுண்டர்’ ரீதியான உடல் சிதைவுகள்,  சிறையடைப்புகள்  பிரத்யட்சனம்.
                     இதில் ஜெயமோகன் விழையும் ‘‘மக்களின்  கூட்டான தார்மீகம்’’  என்பது  நிழலை  மோகிப்பது  தான்.
                     ‘‘எலியின்  உயிர்வதையை  மட்டுமே சொல்வது  அல்ல,  பூனையின்  பசியையும்  கணக்கில் கொண்டு  பேசுவது  இலக்கியம். ஜெயமோகன் இதில்  செயல்படும்  அதிகாரங்களை  கணக்கில் எடுத்துக் கொள்ளாதது  ஜெயமோகன் இலக்கியம் பூனை பசிக்கு  எலியை மட்டுமே வதை செய்வதை  விழையும்  அதிகாரங்களுக்கு   ஆதரவானது  தான் ஜெயமோகன் இலக்கிய கோட்பாடு.
குற்றங்களை ஒழுக்கம்/ அறம்  நிலைநின்று  பேசும் உடல்கள்  குற்றத்திற்கான காரணங்களை  பேசுவதில்லை.  போர் குற்றங்களை மட்டுமே  பேசும் போது  போருக்கான காரணங்களை  வசதியாக மறந்து  மறைக்கப்படுவது போன்று  அதை  பேசினால்  நிரூவி  பாதுகாக்கப்படும்  பிரமாணங்களுக்கு எதிரான  பிரமாணம் தோன்றும் என்பதால்
                            ‘‘களவு திருட்டு  போன்றவற்றை அறம் சார்ந்து  பார்க்கமுடியாது.  தனிமனிதர்களை அடிப்படை அலகாகக் கொண்ட நமது  சமூகத்தில் அது  ஒழுக்கம் சார்ந்த ஒன்றே அதனால்   ஒழுக்கத்தை கற்க  சீர்த்திருத்த  சிறைக் கூட்டம்  நீதிமன்றம், பள்ளிக்கூடம் எல்லாம் உள்ளன. அதை மீறி அதை ஒரு அறப் பிரச்சனையாக  மாற்றுவதன் மூலம்  அதிகார நிறுவனங்களின் கொலையை  நியாயப்படுத்துவதன்  மூலம், அதற்கு உடந்தையாக  பொதுப்புத்தியில் உருவாகியுள்ள  கருத்தை மீட்டுருவாக்கம் செய்வது தான் மூலம்  ஒரு கொலை  மனநிலையை  கொலைக்கான மனசாட்சியை  உருவாக்கும் செயலையே  செய்கின்றனர்.   வரலாற்றால்  உள்ளிருத்தப்பட்ட மனித மனதின் வன்முறையாய்  இப்படி ‘அறம்’ பேசி  நியாயப்படுத்துவதன் மூலம்  பாசிச மன கட்டமைப்பில் கட்டும் பணியை இந்த இலக்கிய  எழுத்தாளர்கள்  மிகச் சிறப்பாக நிறைவேற்றுகின்றார்கள். இப்படித்தான்  எழுத்து எந்திரம் வன்முறை  எந்திரத்தைவிட கொடூரமானதாக  மாறுவிடுகின்றது.’’ என்ற ஜமாலனது  கருத்து பிரமாணம்  மிகப் பொருத்தமான  ஏற்க கூடியதே.
                             பொருளியல் அமைப்பில்  சமச்சீரற்ற  வளர்ச்சியில்  இந்தியாவில்    உழைக்கும் கூட்டம்  புலம் பெயர்ந்தே  பல  மாநிலங்களின்  வாழவேண்டிய  சூழலில் இந்தியா   பெருமைக்குரியதாகி  நிற்கிறது.  இதில் பீகாரிகள்  நேரடி உடல் உழைப்பு செலுத்தப்படும் பல்வேறு அலகுகளில்   அவர்கள் புலம் பெயர்ந்து  வாழ்கின்றனர்.  அவர்களை குற்றப்  பரம்பரை  போல்   கட்ட முயல்வது  தான்   இலக்கிய ஆக்கமாக  ஜெயமோகன் தெரிகிறது. குறைந்த கூலிக்கு அவர்களின் உழைப்பு  அபகரிக்கப்படுவதும்,  அடிப்படை  வசதிகள் கூட உத்தரவாதம்  செய்யப்படாத  வாழ்க்கைச் சூழலைப் பற்றி  பேசாமல் பிகாரில் பல கிராமங்கள்  திருடர்கள்  கிராமம்  என  பிரதானப்  படுத்துவது  எந்த கணக்கில் கொள்வது.
                                                     அனுமானம், பிரத்யட்சனம், பிரமாணம் என்பதில் உடலின் பௌதீகவேதிவினைச்  செயல்பாட்டில்  அனுமானத்திறன் செயல்வழியை  நிர்ணயம் செய்வதில்  இயற்கை மூலப்பொருள்  சேர்க்கை அதன்  பௌதீக வேதிவினை  மற்றும் உடற்கூறு நுண்அமைப்பு செயல்பாடுகள், தீவிர பங்காற்றுகின்றன. இது உடலுக்கு உடல் வேறுபடும். ஜெயமோகன் கூறுகள் தீவிர தன்மையற்று, அவ்வகையான  அனுமானங்களுக்கும் பிரமாணங்களுக்கும்  செயல்வழி  கொள்கின்றன.
                            அரச  பயங்கரவாதம்  மோதல்களை  ‘‘ அவர்கள்  தாக்குவார்கள் என்பதை அனுமானித்து  தாக்கினோம்’’ அவர்கள் தாக்கினார்கள்   தாக்கினோம்  என்ற  வாதத்தை வைக்கின்றனர்.  இரு எதிலிகளும் முரண்களை  சமரசப்படுத்தி  கொள்ள ஏற்றுக்கொண்ட  அமைப்பின் அலகுகள்  அதன்  தன்மை இழந்து  மாற்றம் கொண்டு  விடுவதால் பரஸ்பரம்  நம்பிக்கையின்மையால்,   அவற்றில் முரண்கள்  சமரசம்  கொள்ள முடியாது  எனும்  பிரமாணங்களால்   மோதல்   தீவிரமடைகின்றன.  எதிலிகளை  பேரச்சம்  கொள்ள வைக்கும்  பயங்கர  வாதங்கள்  நிகழ்த்தப்படுகின்றன.  தமிழ் மண்ணில்   பரமக்குடி,   வேளச்சேரி,   திண்டுக்கல் இன்றயை நிகழ்வு நாளை  இழந்தகரை  இந்த பட்டியலில்   இடம்பெறக்கூடும்.

                              ‘கைது செய்தும்  மேலிட உத்தரவு   வேறு விதமாய்  வந்ததும்’ சுட்டு விட்டார்கள்’ என்பது ஜெயமோகன்  வாக்குமூலம்  அந்த  மேலிடத்தை  பூடகமாக  சொல்லியிருந்தால்   கூட ஜெயமோகன்  கூறும் ‘பிரமாண்டமான  உள்விரிவுள்ள  ஜனநாயகம்   நம்முடையது’’ என்று  ஏற்றுக்  கொள்ளலாம்.  அதை வெளிப்படையாக  கூற இயலா  பேரச்சத்தை நிறுவிய அதிகாரச்  சூழலுள்  வாழ்ந்து கொண்டிருப்பதை  ஜெயமோகன்  உணர்வாரா?   இதையெல்லாம்  உணரும்போது  அவரது  எழுத்துக்கள்  விரத்தியை  விரிவாக  பேசும்.