Wednesday, January 16, 2019

சண்டேசுவர ஆட்கொண்டார்

கங்கைகொண்டசோழீஸ்வரத்தின் அடையாளம் எனக் கூறும் அளவிற்கு பரந்துபட்டக் கவனத்தைப் பெற்றிருக்கும் இச்சிலைத் தொகுப்பு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும்.  

சண்டேச்வர அனுகிரகமூர்த்தி எனப்படும் சண்டேஸ்வர ஆட்கொண்டார் அம்மையோடு சண்டேசனுக்கு கொன்றை மாலைச் சூடுகிறார்.  தன் மீது கொண்ட குலையாத பக்தியால் தந்தையையே கொன்றவனை இனி நான் உனக்கு அப்பன் என மகனாக வரித்துக் கொண்டு சடையிலிருந்த கொன்றை மாலையைச் சூடுகிறார் சிவன். அதை வணங்கி மெய்யடக்கத்துடன் ஏற்கிறார் சண்டேசன்.

இது பலர் அறிந்த புராணக் கதை.    
                             
அறியாத செய்தியும் இதுவரைப் பதிவுறாதத் செய்தியும் ஒன்று உண்டு.  
                            
இந்த சிலைக்கு இராசேந்திரச்சோழன் மிகுந்த தனிக் கவனமும் அக்கரையும் கொண்டிருந்திருந்தார் என்பது தான் அது.  
                              
என்ன கோமகன் உடனிருந்து பார்த்தது போல் சொல்கிறாய்? எனும் வினாவிற்கு நான் கூறுவது இச்சோழீஸ்வரத்தில் அவர் கூட இருந்து பார்த்தாலும் விளங்காது அவரின் உயிர் உடல் கொண்டு பார்த்தால் விளங்கும்.  
                                     
ஆம்.

கொஞ்சம் மற்றக் கோவில் அமைப்பை நினைவில் கொண்டு வாருங்கள். செவிட்டுசாமி எனும் சண்டேஸ்வர் சன்னதி இருக்கும் இடத்தை நினைத்துப் பாருங்கள். அது கோமுகம் எனும் அபிஷேகநீர்ச் சாளவத்திற்கு வலது பக்கமாகவும் அர்த்தமண்டபத்தின் வடபுற நுழைவு வாசலுக்கு இடப்பக்கமாகவும் அமைந்திருக்கும். இந்த அமைப்பு தான் எல்லாக் கோவிலிலும் இருக்கும் அது தான் அமைப்பு விதி.  
                           
ஆனால் கங்கைகொண்டசோழீஸ்வரத்தில் அப்படி இருக்காது. மற்றக் கோவிலுக்கு மாறாக அர்த்த மண்டபத்தின் வடபுறத்தின் நுழைவு வாயிலின் வலதுபுறம் அமைந்திருக்கும். அதாவது மூலவரை வணங்கி வடக்குப் பக்கவாசல் வழி வெளியே வந்தால் எல்லாக் கோவிலிலும் இடதுகைப் பக்கம் அதாவது  தஞ்சாவூரில் உள்ளது போல் இருக்க வேண்டிய சண்டேசுவரர் சன்னதி மாறி க.கொ.சோ.புரத்தில் வலது கைப்பக்கம் இருக்கும்.

இந்த கோவிலுக்கு வருபவர்கள் இந்த அரிதான வேறுபாட்டை மாற்றத்தைக் காண்பதில்லை. 
                
ஏன் அப்படி மாற்றி இப்படிக் கட்டவேண்டும்.   
                          
அது தான் இராசேந்திரன்.
                                
இந்த சிலையின் சூட்சமம், மறைபொருளே அதில் தான் இருக்கிறது.ஈர்ப்பின் மையமே அதனால் தான்.                     

ஏனெனில் அவர் சிவசரணசேகரன். சிவனைச் சரணடைந்தவரைக்காப்பவர். சிவசரணரை வணங்குபவரை வணங்குபவர்.   

அந்த மறைபொருளை அடுத்துப் பார்போம்.                                                  
               

Saturday, January 12, 2019

காமதகனன்

முருங்கை மரம் ஏறினால் தான் வேதாளம். முயற்சியில் தளராமல் அதைத் துரத்தினால் தான் விக்கிரமாதித்தியன்.

குழந்தைகளுக்கு விக்கிரமாதித்தியன் கதைகளைச் சொல்லிக்கொடுங்கள் அது இல்லாததால் ஹாரிபாட்டர் ஓடுகிறது. வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுச்சு எனும் தொடரைப் பயன் படுத்தவாயினும் இக்கதையைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இப்போ க.கொ.புரம் வேதாளம் தம் முருங்க மரம் ஏறப்போகுது.

தென்புற கோஷ்ட்டச்சிற்பங்களில் இன்னும் ஹரிஹரன் மட்டும் உள்ளது அதை நாளை பார்ப்போம்.

தென்புரம் ஞான ஆசிரியன் தென்முகக்கடவுள் ஆலமர்ச்செல்வனை நடுநாயகமாக வைத்தது போல் வடபுரத்தில் நான்முகனை தன் இருதேவியருடன் வைத்து தன் கோட்ப்பாடுகளை விரித்திருப்பான் இராசேந்திரன்.  
      
திருநன்னீராட்டல் நீர் வழிப்போக்கி கோமுகத்தின் மேல் நான்முகன் இருப்பது புதியது அல்ல.

ஆனால் வேறுஎங்கும் இல்லாதபடி தன் இருதேவியருடன் தாடிமீசையுடன் பிரம்மா இங்கு மட்டும் தான் உண்டு. தமிழகத்தில் வேறு இடத்தில் இருப்பதாக எம்மளவில் செய்தி இல்லை. 
   
வட பக்கத்தில் தான் இக்கோவிலின் முதல் கல்வெட்டே உள்ளது. கோவில் பீடத்தின் ஈசான்ய மூலையில் இது தொடங்குகிறது. அதன் மேல்பகுதியில் இருப்பவர் தான் காமதகனமூர்த்தி. காமத்தை அழித்தவர். காமனை அழித்தவர். அவர் common ஆக இருப்பதால் தான் காமன் என கிருபானந்தவாரியார் சொல்லுவார்.

சிறுவயதில் காமுட்டிக்கோவில் ரதிமன்மதன் பாட்டு, காமுட்டித்திருவிழாவில் மன்மதனைக் கொளுத்துதல் எல்லாம் பரபரப்பான விளையாட்டு. தமிழன் கொண்டாடிய காமன்பண்டிகை.  மாசிமாதம் அம்மாவாசை முடிந்து தொடங்கும் விழா, எரிந்தகட்சி எரியாதகட்சி பாடல் எல்லாம் போயேபோச்சு.. இன்று பெரும்பாலும் எம்பகுதியில் காமுட்டிக் கொளுத்துவது நின்றுவிட்டது.

சிற்பத்திற்கு வருவோம். சிவனின் தவத்தைக் கலைக்க வேண்டும் எனும் நோக்கத்திற்காக ஏவப்பட்டவன் மன்மதன். அம்முயற்சியில் அவர் எரிந்து போகிறான். இது கதை.

இக்கோவில் சிற்பங்களில் அழகானவைகளில் இதுவும் ஒன்று. இச்சிற்பத்தொகுப்பில் கீழே ரதி மன்மதனைத் தடுக்கின்றாள். தூண்டப்பட்ட மன்மதன் சிவனைத் தூண்டுகிறார். தவத்தில் தூண்டப்படும் சிவனை வடித்ததில் தான் அற்புதத்தை அட்டகாசத்தை  நிகழ்த்தியிருக்கிறான் சிற்பி.

உடலில் இடப்பாகம் சந்திரநாடியும் வலதுபாகம் சூரியநாடியும் ஓடும். இடபாகம் அம்மை வலப்பாகம் அப்பன். 

காமத்தின் ஈர்ப்பில் சந்திரநாடியில் முதற்சலனம் இருக்கும். இது இடது கண்துடித்தலில் வெளிப்படும். சங்கப்பாடல் கூறும் இடதுகண் துடிப்பை " நுண்ணேர் புருவத்த கண்ணும ஆடும்
மயிர்வார் முன்கை வளையும் செறூ உம்",

இப்பொழுது பாருங்கள் சிலையின் இடதுகண்ணை அம்மை பாகத்தை. வள்ளுவனும் இதை சொல்லுவான் கண்விதுப்பழித்தலில்  காமம் கொண்டக் கண்கள் என (குறள்: 1175) சிலையின் வலப்பாகக் கண்ணை விட இது சொருகிய நிலையில் இருக்கும்.

கூடவே தூண்பட்ட இடப்பாகத்தின் சந்திரநாடி மலர்ந்ததைக் காட்ட இதழின் இடபாகம் மயங்கியப் புன்னகைத் தெரிக்கும். முகம் பூரித்து மலர்ச்சியுற்றிருக்கும். சலனப்படாத சிவபாகத்தின் முகம் இருக்கத்துடனிருக்கும். சிரிப்பு அற்று இருக்கும். உடல் தளர்வற்று இருக்கும். சலனப்படாதது சிவம். காமத்தை அழி  எனச் சுட்டும்.

சிவனால் எரிக்கப்படாத மன்மதன் உண்டு அவன் இராசேந்திரன் எனச் செப்பேடு சொல்லுகிறது.   

PC: Ramesh Muthaiyan

#Gangaikondacholapuram
#Cholasculptures.

Sunday, January 6, 2019

உமையொருபாகனில் கட்டுடையும் கோட்பாடு


இப்படியெல்லாம் கூடவா இருக்கும்?
எல்லாவற்றிலும் இப்படி இருக்குமா?
மதிப்பிற்குரிய விஷயத்தைப் போற்றி காலம் கடந்தும் நிற்கும் வகையில் இருக்க இப்படி  செய்வாங்களோ?

எனும் மாதிரியான வினாக்கள் வரலாம் படித்த பிறகு, பார்த்துவிட்டு நகர்ந்தால் வராது. 
படிக்க அலுப்பு படுபவர்கள் நகர்வது நலம்.

எங்கே விஞ்ஞானம் பதில் அளிக்க முடியாமல் நின்று விடுகிறதோ அங்கே மெய்ஞானம் தொடங்குகிறது என்பார் விவேகானந்தர்.

உமையொருபகன்.
அர்த்தநாரீஸ்வரர்.
அம்மையப்பன்.
சிவசக்தி.

சிவனும் பார்வதியும் ஓருடலில் சமபாகமாக இணைந்துள்ள ஒரு படிமத்தின் பெயர் தான் இது.     அம்மை இடமாகவும் அப்பன் வலமாகவும் உள்ள சிலை.

அம்மையை வலமாக ஏன் வைக்கக் கூடாதா?

முடியாது.

ஏனெனில் இது ஒரு பேருண்மையின் ஆவணம்.

யோக சாஸ்திரத்தில், மரபு மருத்துவத்தில்  உடலில் இடா என இடது நாடியையும் பிங்கல என வலது நாடியையும் குறிப்பர். இதை சூரியநாடி சந்திரநாடி எனவும்  சூரியகலை, சந்திரக் கலை எனவும் ஆண்நாடி பெண்நாடி எனவும் அழைப்பதுண்டு.

என் பார்வையில் சூரியநாடி(ஆண்நாடி) அப்பன், சந்திரநாடி(பெண்நாடி)அம்மை.காளை விழிப்புணர்வுள்ளப் பயிற்சி.

இந்த நாடிகள் சுவாசத் தொடர்புடையன. ஒரு மனிதன் நிமிடத்திற்கு 15 சுவாசம் வீதம் ஒரு நாளைக்கு 21600 சுவாசங்களை விடுகிறான்.

இதை வடலூர்  சத்தியஞான சபையைச் சுற்றி கிடக்கும் சங்கிலி மூலம் வள்ளலார் அறிவுருத்துகிறார்.சங்கிலிச் சரடுகளை மூக்குத் துவாரத்தின் குறுக்குவெட்டு போல் செய்திருப்பார்  அதன் எண்ணிக்கை 21600

சுவாசம் இடது பக்கம் அதாவது சந்திரநாடியில் 12 அங்குல சுவாசமும் வலது பக்கம் சூரிய நாடியில் 16 அங்குல சுவாசமும் நடைபெறுகிறது. இரு நாசியிலும் சமமான சுவாசம் 64அங்குலமுடையது இது சுழி முனையோடானது.

இடது,வலது நாடிகளை சமன் படுத்தி நடு நாடி ஓட்டம் சுழி முனைப் பயிற்சியால் குண்டலிணியம் வெளிப்படும்.அது விரிந்து சகஸ்தரதாராவாக ஆகும். அதுவே சிவம்.

இந்த நாடி ஓட்டத்தை பாம்பைக் கொண்டு விளக்குவது மரபு.

அரசமரத்தடியில் குளத்துக்கரை பிள்ளையார் பக்கத்தில் இருக்கும் சிலையில் இரு நாகங்கள் வளைந்து பின்னி நின்று  படமெடுக்கும் பார்த்திருப்பீர்கள்  அதன் தலைப் பாகங்களுக்கு நடுவே லிங்கம் இருக்கும் அந்த  சிலை இதைத் தான் சொல்கிறது.

இது என் பார்வை.

இதை தான் அற்புதமான கலைவடிவமான அர்தநாரீஸ்வர் சொல்லுகிறது.

ஆணுக்கு பெண் சமம் என்பதற்காக இது என்பதெல்லாம் திருவிளையாடல் வசனத்திற்கே பயன்படும்.

சரி, கங்கைகொண்டசோழீசர் உமையொருபாகனுக்கு வருவோம். இந்த கோவிலில் நின்னு நிதானமாக ஒவ்வொரு பாகமாக பார்க்க வேண்டிய சிலையில் இதுவும் ஒன்று.  

நீங்கள் கலை ஆர்வலராய் இருந்தால் உங்கள் தலையில் ஊமத்தங்காய் தேய்க்க வேண்டிய அவசியம் ஏற்படும்.

இந்த சிலை நான் பார்த்த உமையொருபாகன் சிலையில் என்னை அதிகம் கவர்ந்தது இது.

இதில் செய்யப் பட்ட முயற்சிகள் அற்புதம்.

அம்மையின் உடை, மேகலை,குரங்குசெரி, தோல்வளை,அங்கம்,பங்கம் எல்லாமே அப்பனிடம் மாறுபடும்.ஆனால் வேறுபாடு தெரியாமல் ஒன்று போல் தெரியும்

இது கூட எளிமையானதே.

ஆனால் ஒன்று போல் தெரியும் முகத்தில் ஆண் பெண் வேறுபாட்டை காட்ட முடியுமா?

முடியும் எனச் சொன்ன முயற்சியின் வெற்றியை இச் சிற்பம் சுமக்கிறது.

அப்பனின் முகபாகத்தில் கன்னம் சற்று பருத்து இருக்கும் அம்மை முகபாகத்தில் கன்னம் சற்று வடிந்து ஒடுங்கி இருக்கும்.சிற்ப மரபில் சொல்லும் முக அமைப்புகளில் அப்பனின் முகபாகம்"வ" வகையிலும் அம்மையின் முகபாகம் மாங்காய் வடிவ வகையிலும் வடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேறுபாட்டை உணரமுடியாமல் முகத்தில் தெரியும் சிரிப்பு மயக்கி விடுகிறது.

அம்மையின் காதில் தாடகம் அப்பனின் காதில் குழை.

தலைக்கோலத்தில் ஜடாமகுடம் அதில் கேசபந்தத்தில் அப்பனின் பாகத்தில் உள்ள தலைமுடிக்கோதலும் அம்மையின் தலைமுடிக்கோதலில் காட்டப்படும் வேறுபாடு அதீத நுணுக்கம். கவனமெடுப்பில் உச்சம்.

அர்த்தநாரிஸ்வரரான இச்சிலையின் அற்புதத்தை எத்தனை உணர்ந்து பார்த்திருப்பார்கள் எனத் தெரியவில்லை.இனி பார்ப்பார்கள் என்பதற்கு உத்திரவதமும் இல்லை.அப்புறம் ஏன் மாய்ந்து மாய்ந்து எழுதனும்.

வாழும் காலத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும் அடுத்த தலைமுறையின் தோளுக்கு பரிமாற்றம் செய்யவேண்டுமே, எல்லோருமே ஹெர்குலஸாக இருக்கிறார்கள்.அட்லஸாக கூவிக்கொண்டிருக்கிறோம்.

சிலகளின் அளவுகள் தளமானங்களில் உறுதிசெய்யப்படும்.இதில் பல வகை உண்டு.பெரும்பாலும் ஆண் தெய்வ உருவங்கள் உத்தம தஸதாளத்திலும் பெண் தெய்வ உருக்குள் மத்திம தஸதாளத்திலும் அமைக்கப்படுவது வழக்கம்.

சிலைகள் ஏதாவது ஒருவகையில் தான் அமைக்கப்படும்.என் பார்வையில் இச்சிலை உத்தமதஸதாளத்தில் சிவபாகமும் மத்திம தஸதாளத்தில் சக்தி பாகம் அமைக்கப் பட்டிருக்கிறது. இரண்டிற்கும் 4 விரல் வித்தியாசம் உண்டு.

இந்த வேறுபாட்டைச் சரிசெய்யத் தான் (மத்திய சூத்திரம்) சிவபாகத்தை அதாவது அப்பனை காளை மீது ஒய்யாரமாக சாய்ந்திருப்பதாக காட்டியுள்ளனர்.

வலது நாசியில் 12 அங்குலம் சுவாசமும் இடதுநாசியில் 16 அங்குலமும் நடைபெறுகிறது.நம் சித்தர்களின் நிலைப்பாட்டின்படி சுவாசச்சுற்றில் 12 அங்குல சுவாசம் செய்து 4 அங்குல சுவாசத்தை வெளியேற்றி 8 அங்குல சுவாசக்காற்றை உள்ளே உலாவவிட்டால் 120 ஆண்டுகள் வாழலாம் என நம்பப்படுகிறது.

இந்த மூச்சுப் பயிற்சி பல ஆண்டுகளாக முன்னோர்கள் வழக்கத்தில் இருந்திருக்கிறது. இச்சிலைக்கும் இந்த கணக்கு வழக்கிற்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்பது இதன் தளமானத்தால் உணரமுடிகிறது.

இது தான் மரபுமாறாப் புதுமை. நித்தவிநோதகனின் படைப்பாக்கம் . இராசேந்திரனின் எண்ணக் கிடக்கை. கங்கைகொண்டசோழீசுரத்தின் தனித்தன்மை.