Sunday, January 6, 2019

உமையொருபாகனில் கட்டுடையும் கோட்பாடு


இப்படியெல்லாம் கூடவா இருக்கும்?
எல்லாவற்றிலும் இப்படி இருக்குமா?
மதிப்பிற்குரிய விஷயத்தைப் போற்றி காலம் கடந்தும் நிற்கும் வகையில் இருக்க இப்படி  செய்வாங்களோ?

எனும் மாதிரியான வினாக்கள் வரலாம் படித்த பிறகு, பார்த்துவிட்டு நகர்ந்தால் வராது. 
படிக்க அலுப்பு படுபவர்கள் நகர்வது நலம்.

எங்கே விஞ்ஞானம் பதில் அளிக்க முடியாமல் நின்று விடுகிறதோ அங்கே மெய்ஞானம் தொடங்குகிறது என்பார் விவேகானந்தர்.

உமையொருபகன்.
அர்த்தநாரீஸ்வரர்.
அம்மையப்பன்.
சிவசக்தி.

சிவனும் பார்வதியும் ஓருடலில் சமபாகமாக இணைந்துள்ள ஒரு படிமத்தின் பெயர் தான் இது.     அம்மை இடமாகவும் அப்பன் வலமாகவும் உள்ள சிலை.

அம்மையை வலமாக ஏன் வைக்கக் கூடாதா?

முடியாது.

ஏனெனில் இது ஒரு பேருண்மையின் ஆவணம்.

யோக சாஸ்திரத்தில், மரபு மருத்துவத்தில்  உடலில் இடா என இடது நாடியையும் பிங்கல என வலது நாடியையும் குறிப்பர். இதை சூரியநாடி சந்திரநாடி எனவும்  சூரியகலை, சந்திரக் கலை எனவும் ஆண்நாடி பெண்நாடி எனவும் அழைப்பதுண்டு.

என் பார்வையில் சூரியநாடி(ஆண்நாடி) அப்பன், சந்திரநாடி(பெண்நாடி)அம்மை.காளை விழிப்புணர்வுள்ளப் பயிற்சி.

இந்த நாடிகள் சுவாசத் தொடர்புடையன. ஒரு மனிதன் நிமிடத்திற்கு 15 சுவாசம் வீதம் ஒரு நாளைக்கு 21600 சுவாசங்களை விடுகிறான்.

இதை வடலூர்  சத்தியஞான சபையைச் சுற்றி கிடக்கும் சங்கிலி மூலம் வள்ளலார் அறிவுருத்துகிறார்.சங்கிலிச் சரடுகளை மூக்குத் துவாரத்தின் குறுக்குவெட்டு போல் செய்திருப்பார்  அதன் எண்ணிக்கை 21600

சுவாசம் இடது பக்கம் அதாவது சந்திரநாடியில் 12 அங்குல சுவாசமும் வலது பக்கம் சூரிய நாடியில் 16 அங்குல சுவாசமும் நடைபெறுகிறது. இரு நாசியிலும் சமமான சுவாசம் 64அங்குலமுடையது இது சுழி முனையோடானது.

இடது,வலது நாடிகளை சமன் படுத்தி நடு நாடி ஓட்டம் சுழி முனைப் பயிற்சியால் குண்டலிணியம் வெளிப்படும்.அது விரிந்து சகஸ்தரதாராவாக ஆகும். அதுவே சிவம்.

இந்த நாடி ஓட்டத்தை பாம்பைக் கொண்டு விளக்குவது மரபு.

அரசமரத்தடியில் குளத்துக்கரை பிள்ளையார் பக்கத்தில் இருக்கும் சிலையில் இரு நாகங்கள் வளைந்து பின்னி நின்று  படமெடுக்கும் பார்த்திருப்பீர்கள்  அதன் தலைப் பாகங்களுக்கு நடுவே லிங்கம் இருக்கும் அந்த  சிலை இதைத் தான் சொல்கிறது.

இது என் பார்வை.

இதை தான் அற்புதமான கலைவடிவமான அர்தநாரீஸ்வர் சொல்லுகிறது.

ஆணுக்கு பெண் சமம் என்பதற்காக இது என்பதெல்லாம் திருவிளையாடல் வசனத்திற்கே பயன்படும்.

சரி, கங்கைகொண்டசோழீசர் உமையொருபாகனுக்கு வருவோம். இந்த கோவிலில் நின்னு நிதானமாக ஒவ்வொரு பாகமாக பார்க்க வேண்டிய சிலையில் இதுவும் ஒன்று.  

நீங்கள் கலை ஆர்வலராய் இருந்தால் உங்கள் தலையில் ஊமத்தங்காய் தேய்க்க வேண்டிய அவசியம் ஏற்படும்.

இந்த சிலை நான் பார்த்த உமையொருபாகன் சிலையில் என்னை அதிகம் கவர்ந்தது இது.

இதில் செய்யப் பட்ட முயற்சிகள் அற்புதம்.

அம்மையின் உடை, மேகலை,குரங்குசெரி, தோல்வளை,அங்கம்,பங்கம் எல்லாமே அப்பனிடம் மாறுபடும்.ஆனால் வேறுபாடு தெரியாமல் ஒன்று போல் தெரியும்

இது கூட எளிமையானதே.

ஆனால் ஒன்று போல் தெரியும் முகத்தில் ஆண் பெண் வேறுபாட்டை காட்ட முடியுமா?

முடியும் எனச் சொன்ன முயற்சியின் வெற்றியை இச் சிற்பம் சுமக்கிறது.

அப்பனின் முகபாகத்தில் கன்னம் சற்று பருத்து இருக்கும் அம்மை முகபாகத்தில் கன்னம் சற்று வடிந்து ஒடுங்கி இருக்கும்.சிற்ப மரபில் சொல்லும் முக அமைப்புகளில் அப்பனின் முகபாகம்"வ" வகையிலும் அம்மையின் முகபாகம் மாங்காய் வடிவ வகையிலும் வடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேறுபாட்டை உணரமுடியாமல் முகத்தில் தெரியும் சிரிப்பு மயக்கி விடுகிறது.

அம்மையின் காதில் தாடகம் அப்பனின் காதில் குழை.

தலைக்கோலத்தில் ஜடாமகுடம் அதில் கேசபந்தத்தில் அப்பனின் பாகத்தில் உள்ள தலைமுடிக்கோதலும் அம்மையின் தலைமுடிக்கோதலில் காட்டப்படும் வேறுபாடு அதீத நுணுக்கம். கவனமெடுப்பில் உச்சம்.

அர்த்தநாரிஸ்வரரான இச்சிலையின் அற்புதத்தை எத்தனை உணர்ந்து பார்த்திருப்பார்கள் எனத் தெரியவில்லை.இனி பார்ப்பார்கள் என்பதற்கு உத்திரவதமும் இல்லை.அப்புறம் ஏன் மாய்ந்து மாய்ந்து எழுதனும்.

வாழும் காலத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும் அடுத்த தலைமுறையின் தோளுக்கு பரிமாற்றம் செய்யவேண்டுமே, எல்லோருமே ஹெர்குலஸாக இருக்கிறார்கள்.அட்லஸாக கூவிக்கொண்டிருக்கிறோம்.

சிலகளின் அளவுகள் தளமானங்களில் உறுதிசெய்யப்படும்.இதில் பல வகை உண்டு.பெரும்பாலும் ஆண் தெய்வ உருவங்கள் உத்தம தஸதாளத்திலும் பெண் தெய்வ உருக்குள் மத்திம தஸதாளத்திலும் அமைக்கப்படுவது வழக்கம்.

சிலைகள் ஏதாவது ஒருவகையில் தான் அமைக்கப்படும்.என் பார்வையில் இச்சிலை உத்தமதஸதாளத்தில் சிவபாகமும் மத்திம தஸதாளத்தில் சக்தி பாகம் அமைக்கப் பட்டிருக்கிறது. இரண்டிற்கும் 4 விரல் வித்தியாசம் உண்டு.

இந்த வேறுபாட்டைச் சரிசெய்யத் தான் (மத்திய சூத்திரம்) சிவபாகத்தை அதாவது அப்பனை காளை மீது ஒய்யாரமாக சாய்ந்திருப்பதாக காட்டியுள்ளனர்.

வலது நாசியில் 12 அங்குலம் சுவாசமும் இடதுநாசியில் 16 அங்குலமும் நடைபெறுகிறது.நம் சித்தர்களின் நிலைப்பாட்டின்படி சுவாசச்சுற்றில் 12 அங்குல சுவாசம் செய்து 4 அங்குல சுவாசத்தை வெளியேற்றி 8 அங்குல சுவாசக்காற்றை உள்ளே உலாவவிட்டால் 120 ஆண்டுகள் வாழலாம் என நம்பப்படுகிறது.

இந்த மூச்சுப் பயிற்சி பல ஆண்டுகளாக முன்னோர்கள் வழக்கத்தில் இருந்திருக்கிறது. இச்சிலைக்கும் இந்த கணக்கு வழக்கிற்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்பது இதன் தளமானத்தால் உணரமுடிகிறது.

இது தான் மரபுமாறாப் புதுமை. நித்தவிநோதகனின் படைப்பாக்கம் . இராசேந்திரனின் எண்ணக் கிடக்கை. கங்கைகொண்டசோழீசுரத்தின் தனித்தன்மை.

1 comment: