Saturday, January 12, 2019

காமதகனன்

முருங்கை மரம் ஏறினால் தான் வேதாளம். முயற்சியில் தளராமல் அதைத் துரத்தினால் தான் விக்கிரமாதித்தியன்.

குழந்தைகளுக்கு விக்கிரமாதித்தியன் கதைகளைச் சொல்லிக்கொடுங்கள் அது இல்லாததால் ஹாரிபாட்டர் ஓடுகிறது. வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுச்சு எனும் தொடரைப் பயன் படுத்தவாயினும் இக்கதையைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இப்போ க.கொ.புரம் வேதாளம் தம் முருங்க மரம் ஏறப்போகுது.

தென்புற கோஷ்ட்டச்சிற்பங்களில் இன்னும் ஹரிஹரன் மட்டும் உள்ளது அதை நாளை பார்ப்போம்.

தென்புரம் ஞான ஆசிரியன் தென்முகக்கடவுள் ஆலமர்ச்செல்வனை நடுநாயகமாக வைத்தது போல் வடபுரத்தில் நான்முகனை தன் இருதேவியருடன் வைத்து தன் கோட்ப்பாடுகளை விரித்திருப்பான் இராசேந்திரன்.  
      
திருநன்னீராட்டல் நீர் வழிப்போக்கி கோமுகத்தின் மேல் நான்முகன் இருப்பது புதியது அல்ல.

ஆனால் வேறுஎங்கும் இல்லாதபடி தன் இருதேவியருடன் தாடிமீசையுடன் பிரம்மா இங்கு மட்டும் தான் உண்டு. தமிழகத்தில் வேறு இடத்தில் இருப்பதாக எம்மளவில் செய்தி இல்லை. 
   
வட பக்கத்தில் தான் இக்கோவிலின் முதல் கல்வெட்டே உள்ளது. கோவில் பீடத்தின் ஈசான்ய மூலையில் இது தொடங்குகிறது. அதன் மேல்பகுதியில் இருப்பவர் தான் காமதகனமூர்த்தி. காமத்தை அழித்தவர். காமனை அழித்தவர். அவர் common ஆக இருப்பதால் தான் காமன் என கிருபானந்தவாரியார் சொல்லுவார்.

சிறுவயதில் காமுட்டிக்கோவில் ரதிமன்மதன் பாட்டு, காமுட்டித்திருவிழாவில் மன்மதனைக் கொளுத்துதல் எல்லாம் பரபரப்பான விளையாட்டு. தமிழன் கொண்டாடிய காமன்பண்டிகை.  மாசிமாதம் அம்மாவாசை முடிந்து தொடங்கும் விழா, எரிந்தகட்சி எரியாதகட்சி பாடல் எல்லாம் போயேபோச்சு.. இன்று பெரும்பாலும் எம்பகுதியில் காமுட்டிக் கொளுத்துவது நின்றுவிட்டது.

சிற்பத்திற்கு வருவோம். சிவனின் தவத்தைக் கலைக்க வேண்டும் எனும் நோக்கத்திற்காக ஏவப்பட்டவன் மன்மதன். அம்முயற்சியில் அவர் எரிந்து போகிறான். இது கதை.

இக்கோவில் சிற்பங்களில் அழகானவைகளில் இதுவும் ஒன்று. இச்சிற்பத்தொகுப்பில் கீழே ரதி மன்மதனைத் தடுக்கின்றாள். தூண்டப்பட்ட மன்மதன் சிவனைத் தூண்டுகிறார். தவத்தில் தூண்டப்படும் சிவனை வடித்ததில் தான் அற்புதத்தை அட்டகாசத்தை  நிகழ்த்தியிருக்கிறான் சிற்பி.

உடலில் இடப்பாகம் சந்திரநாடியும் வலதுபாகம் சூரியநாடியும் ஓடும். இடபாகம் அம்மை வலப்பாகம் அப்பன். 

காமத்தின் ஈர்ப்பில் சந்திரநாடியில் முதற்சலனம் இருக்கும். இது இடது கண்துடித்தலில் வெளிப்படும். சங்கப்பாடல் கூறும் இடதுகண் துடிப்பை " நுண்ணேர் புருவத்த கண்ணும ஆடும்
மயிர்வார் முன்கை வளையும் செறூ உம்",

இப்பொழுது பாருங்கள் சிலையின் இடதுகண்ணை அம்மை பாகத்தை. வள்ளுவனும் இதை சொல்லுவான் கண்விதுப்பழித்தலில்  காமம் கொண்டக் கண்கள் என (குறள்: 1175) சிலையின் வலப்பாகக் கண்ணை விட இது சொருகிய நிலையில் இருக்கும்.

கூடவே தூண்பட்ட இடப்பாகத்தின் சந்திரநாடி மலர்ந்ததைக் காட்ட இதழின் இடபாகம் மயங்கியப் புன்னகைத் தெரிக்கும். முகம் பூரித்து மலர்ச்சியுற்றிருக்கும். சலனப்படாத சிவபாகத்தின் முகம் இருக்கத்துடனிருக்கும். சிரிப்பு அற்று இருக்கும். உடல் தளர்வற்று இருக்கும். சலனப்படாதது சிவம். காமத்தை அழி  எனச் சுட்டும்.

சிவனால் எரிக்கப்படாத மன்மதன் உண்டு அவன் இராசேந்திரன் எனச் செப்பேடு சொல்லுகிறது.   

PC: Ramesh Muthaiyan

#Gangaikondacholapuram
#Cholasculptures.

No comments:

Post a Comment