Tuesday, March 5, 2024

கோவில் திருக்குளங்கள் நோக்கம் புனிதம் பேணுவது மட்டுமா?

 

                                                                   திருக்குளம்

                                                    (இரா.கோமகன்)                                                  

பெரும்பாலான பெரிய கோவில்களில் திருக்கும் இருப்பது தமிழகத்தில் மட்டுமின்றி பரவலாக நாடு முழுவதும் உள்ளது. திருகுளங்கள் புனிதமானவைகளாக் கருதப்படுகின்றன. இதில் தெப்ப உற்சவம், தீர்த்தவாரி, புனித நீராடல் நடைபெறுகின்றன. இதனால் இதன் புனிதம் மேலும் உறுதிப்படுகின்றது, திருக்குளங்கள் கோவிலின் நீர் ஆதாரமாக விளங்குகின்றன.சுற்றுச்சூழல் பாதுகாப்பு பல்லுயிர் பாதுகாப்பாகவும் உள்ளன.

திருக்குளங்கள் புனிதம் என்ற நோக்கங்களுக்காக மட்டும் கட்டப்பட்டதா? அல்லது இதற்கு வேறு காரணங்களும் உள்ளதா? எனும் நோக்கில் இதுவரை அவை அணுகப்படவில்லை. திருக்குளங்கள் பெரும்பாலும் கோயிலின் வடகிழக்குப் பகுதியில்தான் அமைக்கப்பட்டிருக்கும். இதில் தேங்கும் நீர் சுற்றியுள்ள நீர் ஆதார அமைப்புகளான கிணறுகளின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த பயன்படுவதாக பரவலாக கூறப்பட்டாலும் இதன் முதன்மையான நோக்கம் அதுவல்ல.  

பெரியகோவில்கள் செங்கல் மற்றும் கருங்கல்லால் கட்டப்பட்டிருக்கின்றன. அதிக பாரமுள்ள பெரும் கட்டுமான அமைப்புகளைக் கொண்டு இருக்கின்றன. இந்த பெரும் கட்டுமானங்கள் அதிக எடையை பூமிக்கு கடத்துகின்றன. இதனால் அதிக பாரம் தாங்கும் கடைக்கால் எனும் அஸ்திவாரங்கள் தேவைப்படுகின்றன. நல்ல தாங்குதிறன் கொண்ட மண்ணடுக்குகளில் மீது இந்த கடைக்கால் அமைக்கப்பட வேண்டும். இந்த கடைக்கால்களை தாங்கும் பூமி அதாவது மண்ணடுக்குகள் கோயில் கட்டும் பொழுது இருந்த அதே தன்மையுடன் எப்பொழுதும் பராமரிக்கப்பட வேண்டும்.

பூமி மண்டுக்குகள் மயிரிழை நீர்வழிதடங்கள் (capillaries) கொண்டன. இந்த மயிரிழைத்தடம் வழியா கசியும் (seepage) நீரானது மண்ணின் தாங்குதிறனை ( safe bearing capacity ) தீர்மானிப்பதாக உள்ளது. மண்டுக்குகளில் உள்ள ஈரப்பதம்                  (moisture) மண்ணின் உறுதியை (stability) தாங்குதிறனை நிலைப்படுத்தவும்  பாதிக்கவும் செய்யும் திறன் கொண்டவை. குறிப்பாக களிமண் அடுக்குகளின் ஈரப்பதம்  அதன் தாங்குதிறனை தீர்மானிக்கிறது.

                                                       


                                              

இதை எளிதாக விளங்கிக் கொள்ள வெயில் காலங்களில் காய்ந்து போன வயல்வெளிகளில் மேல் மண் அடுக்குகள் பாலம் பாலமாக வெடித்துக்கிடப்பதன் மூலம் அறியலாம். காரணம் மண்ணின் ஈரம் உலர்ந்து போனதால் சுருங்குகின்றன. மறுபடியும் இவற்றில் நீர் ஏறும் பொழுது அதன் ஈரத்தன்மை மீளப்பெற்று விம்மி வீங்குகின்றன.மண்ணின் ஈரப்பதம் அதைச் சுருங்கி விரியச்செய்கிறது காரணம் அதில் உள்ள மயிரிழைத் தடங்கள். பல கட்டிடங்களின் அஸ்திவாரம் பாதிப்புகள் தனால் நிகழ்கின்றன. சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு கட்டடத்தின் உறுதித்தன்மையும் கடைக்கால் தாங்கு திறனும் பாதிக்கப்பட்டு வடிவமைப்பு சிதைகின்றது.

கோவில் திருக்குளங்களில் தேங்கும் நீர் மூலம் மண்ணாடுக்குகளில் ஏற்படும் நீர்க்கசிவு மண்ணின் ஈரப்பதத்தை சமப்படுத்தி சீர்படுத்துகிறது.கோவில் கடைக்கால் (அஸ்திவாரம்) அமையப்பெற்ற மண்ணடுக்கின் ஈரப்பதம் சீராகப் பராமரிக்கப்படுகின்றது. இதனால் தான் சில கட்டடங்களைச் சுற்றிக் கோடை காலத்தில் தண்ணீர் ஊற்ற சொல்லப்படுகிறது. பெரிய கோவில்களின் கட்டமைப்புகளில் அஸ்திவாரம் எனப்படும் கடைக்காலைப் பாதுகாக்க  திருகுளங்கள் அவசியமாகின்றன. அவை அமைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் இதுவே. இதுபற்றி விரிவான கள ஆய்வுகள் செய்யப்படவேண்டும்.

ஒவ்வொரு ஊரிலும் நீர் ஆதாரமாக அமைக்கப்படும் குளங்கள் ப்பணியைச் செய்கின்றன. வீட்டுக்கு வீடு குழாய் தண்ணீர் வந்தவுடன் ஏரி குளங்கள் மீது அக்கரை அழிந்துவிட்டது. ஆனால் ஒவ்வொரு வீட்டுக்கும் அஸ்திவாரம் உண்டு அந்த அஸ்திவாரம் உட்கார்ந்திருக்கும் ண்ணடுக்குகளின் ஈரப்பத்தை சீராக பராமரிக்க நிலத்தடிநீர்க்கசிவு தேவையை ஊர் பொதுக்குளங்கள் நிறைவேற்றுகின்றன என்பதை சற்று நினைவில் நிறுத்துவோம்.