Monday, February 20, 2023

History of Veeranam lake ( veeranarayanappereri/ Paranthagappereri) - வீராணம் ஏரி வரலாறு : இரா.கோமகன்.

 

                                                             வீராணம் ஏரி வரலாறு

                                                                                            இரா. கோமகன்.

வீராணம் ஏரி என அழைக்கப்படும். வீரநாராயணன் ஏரி மற்றும்  அதோடு தொடர்புடைய நீர் ஆதார கட்டமைப்புகளின் வரலாற்றை அறிவதற்காக முதலில் வீரநாராயணன், மதுராந்தகன் என்னும் பெயர் கொண்ட சோழ வேந்தனைப் பற்றிய செய்தி உறுதி செய்யப்பட வேண்டும். பராந்தக சோழன் தனது மூன்றாம் ஆட்சி ஆண்டில் கி.பி.907-ல் மதுரையை வெல்கிறார். அதனால் மதுராந்தகன் என்ற பெயரை பெறுகிறார். இதுப்பற்றி பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரிகள் தனது   நூலில் (The Colas-Page.122)The first stage in the account of the Mahavamsa corresponds, doubtless, to the raid on Madura in the first years of Parantaka’s rule which leads his adopting the title Madurantaka, the destroyer of Madura”எனக் குறிப்பிடுகின்றார்.

சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் தனது பிற்கால சோழர் வரலாறு என்ற நூலில் இவ்வேந்தனுக்கு வேறு சில பெயர்களும் அந்நாளில் வழங்கியுள்ளன என்பது கல்வெட்டால் அறியப்படுகிறது. என்கிறார்.(பிற்காலச் சோழர் வரலாறு-2000) அவை வீரநாராயணன், வீரசோழன், பண்டிதவற்சலன், குஞ்சரமல்லன், சங்கிராமராகவன், இருமடிசோழன் என்பன. திருவாங்கூர் ஆர்க்கியாலிஜிகல் சீரிஸ் இவற்றோடு சிங்களாந்தகன் எனும் பெயரையும் சுட்டுகிறது.(Travancore Archaeological series-vol-III)

பராந்தக சோழன் தனது பெயரா வீரநாராயணன் என்ற பெயரில் வீரநாராயணசதுர்வேதிமங்கலம் என்ற ஒன்றை உருவாக்கினார்.(Travancore Archaeological series vol-III) இதன் புவி எல்லைகள் வீரநாராயணன் ஏரிக்கு கிழக்கு கொள்ளிடத்தின் வடகரைக்கு வடக்கு பகுதியில் கட்டுப்பட்ட. சிதம்பரம் வட்டத்தின் தென்மேற்குப் பகுதி காட்டுமன்னார்குடி வட்டத்தின் தென் மேற்கு பகுதியை உள்ளடக்கியது. இந்த சதுர்வேதிமங்கலம் உருவான காலத்தை துல்லியமாக அறிவிக்கப்படவில்லை எனினும் கி.பி.910-க்கும் 950-க்கும் இடைப்பட்டகாலத்தில் அமைந்திருக்கலாம். வீரநாராயணப்பேரேரியும் இக்காலத்தியது எனலாம். வீரநாராயண சதுர்வேதிமங்கலம் பெருங்குறிப் பெருமக்களுக்கு இராசராசோழன் கி.பி.988- ல் எழுதிய ஶ்ரீமுகம் ஆதித்தகரிகாலனைக் கொன்ற துரோகிகள் பற்றிக் குறிப்பிடுகிறது.( ARE-1920, EI-Vol-XXI)

வீரநாராயணசதுர்வேதிமங்கலம் பகுதியில் வீரநாராயணப்பேரேரி அமையப்பெற்றிருக்கிறது. தற்பொழுது வீராணம் என  அழைக்கப்படுகிறது. இந்த ஏரியை பராந்தக பெரிய ஏரி என ஒரு கல்வெட்டு கூறுகிறது. சிதம்பரம் வட்டத்தில். திருச்சின்னபுரம் என்னும் ஊரில் உள்ள. அகத்திஸ்வரர் கோயில் முன்புள்ள ரிஷப மண்டபத்தின் உள்ள கூரையில் உள்ளக் கல்வெட்டில் பராந்தகஏரியை குறிப்பிட்டு அதற்கு செய்யப்பட்ட பராமரிப்பு பற்றியும் இக்கல்வெட்டு கூறுகிறது. இது விக்கிரம சோழன் காலத்தை காலத்தியது என்று தெரியவருகிறது. வீராணம் ஏரி அதை உருவாக்கிய பராந்தகச்சோழன் பெயரால் பராந்தகப்பேரேரி என்றும் அழைக்கப்பட்டது தெரியவருகிறது. ( ARE-1845-46)

வீராணம் ஏரிக்கு வீரநாராயணன்பேரேரி என்று குறிப்பிடுகிற செய்தி பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் உள்ள சு .ஆடுதுறை என அழைக்கப்படும்  திருக்குரங்காடுதுறை  னும்  ஊரின் குற்றம் பொறுத்த ஈஸ்வரர் கோயில் முன்மண்டப கிழக்கு சுவர் பீடத்தில் உள்ள கல்வெட்டு. முதலாம் மாறவர்மன் பராக்கிரம பாண்டியன காலமான கி.பி. 1339-ம் ஆண்டுக்கானது கல்வெட்டின் ஒன்பதாவது வரியில், “ த குறுகையில் காணி உடைய பள்ளிகளில் மரகத சோழன் முத்தரையன் உள்ளிட்டோர் திருநாள்தோறும் குறைவறுத்து வீரநாராயணன் பேரேரிக்கு மேற்கு பச்சைமலைக்கு கிழக்கு, 10-ம் வரியில் - காவிரி ஆற்றுக்கு வடக்கு பெண்ணையாற்றுக்கு தெற்கு உள்ளிட்ட பள்ளிகள் திருநாள்தோறும் என அக்கல்வெட்டு தொடர்கிறது, இக்கல்வெட்டின் மூலம் வீரநாராயணப்பேரி என்ற செய்தி அறிய வருகிறது.( ARE- 1913, SII-Vol: XXVIII)

 இந்த பேரேரிக்கு ராஜேந்திரசோழப்பேராறு என அழைக்கப்பட்ட கொள்ளிடத்தின் வடகரையிலிருந்து மதுராந்தக வடவாறு என வழங்கப்பட்ட வடவாறு நீரேற்றும் நீராதாரமாக பயன்பட்டு இருக்கிறது. கொள்ளிடம் ஆற்றுக்கு ராஜேந்திரசோழபேராறு என்ன வழங்கப்பட்டதற்கான சான்று கீழப்பழூர் ஆலந்துறையார் கோயில் இரண்டாம் பிரகாரம் வடக்கு சுவரில் உள்ள கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது. க்கல்வெட்டு விக்கிரமசோழன் காலமான கி.பி.1124-ல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. (ARE-1926 ) அக் கல்வெட்டின் ஐந்தாம் வரியில், “தெற்கு ஊருக்கு மேற்கு குழலுடையாந் பற்று உட்பட்ட நிலம் அரை வேலியும் தெற்கில் கீழக்கரை நிலத்தில் கீழ் ஆரிவாக்காலுக்கு கிழக்கு வாரமடைக்கு மேற்கு நாலாம் கண்ணுற்றுக்கு தெற்கு ராஜேந்திரசோழ பேராற்றுக்கு வடக்கு நிலம் என்ற செய்தி உள்ளது. அதே கோயிலின்  இரண்டாம் பிரகாரத்து  தெற்கு சுவர் கல்வெட்டானது இரண்டாம் ராஜாதிராஜன் காலமான        கி,பி, 1177 -இல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டின் மூன்றாம் வரி, “த்து வருகிறவர்களைத் தவிர ராசகுவராதல் ராசேந்திரசோழபேராற்றுக்கு தெற்குட்பட்ட நாடுகளில் உள்ளாராதல் ஆழ்வாநுக்கு பத்தொந்பதாவது…..”என்றும் அதே கல்வெட்டின் ஐந்தாம் வரி நுபவிக்க பெறாதார்களாவும் ராசேந்திரசோழபேராற்றுக்கு தெற்கு உள்ளார் பிந்பு விலைகொள்ளவும் பெறாதவர்களாகவும் குடிநீக்கித் தேவதானம் பள்ளிச்சந்தம்…..” என அந்த செய்தி தொடருகிறது. (ARE.1926) க் கல்வெட்டுகளின் மூலம் கொள்ளிடம் ராஜேந்திரசோழப்பேராறு என வழங்கப்பட்ட செய்தி தெரியவருகிறது. கொள்ளிடம் அக்காலத்தில் இராசேந்திரசோழப்பேராறு  என  அழைக்கப்பட்டிருக்கிறது.

கொள்ளிட வடகரையிலிருந்து மதுராந்தக வடவாறு என்று வழங்கப்பட்ட வடவாறு நீர்வரத்து ஆதாரமாக பயன்பட்டு இருக்கிறது. மதுராந்தகன் என்பது பராந்தகனின் விருது பெயர் என முன்பு சுட்டப்பட்டுள்ளது.  மதுராந்தக வடவாறு என்ற குறிப்பு கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் கருவறை தெற்குச் சுவர் கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது.(ARE-1892) இக் கல்வெட்டு. ஐந்தாம் மாறவர்மன் விக்கிரம பாண்டியன் காலமான கி. பி. 1329 - இல் எழுதப்பட்டிருக்கிறது. இக்கல்வெட்டின் ஆறாம் வரி ஆர்க்கு வடக்கு ராஜேந்திரசோழநல்லூரில் மதுராந்தக வடவாற்றுக்கு மேற்கு அதிகை நாயகன் வாய்க்காலுக்கு கிழக்கு ராசராசன் பெருவழிக்கு….” எனத் தொடருகிறது.( ARE-1892: SII-Vol-IV) இக்கல்வெட்டின் மூலம் தற்போதைய வடவாறு அக்காலத்தில் மதுராந்தக வடவாறு என வழங்கப்பட்டுள்ள செய்தி தெரியவருகிறது.

மேலும் கொள்ளிடத்தின் தென்கரை கடல் முகத்துவாரம் வரை கரிகாலக்கரை என வழங்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. கங்கைகொண்டசோழபுரத்தில் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் கருவறை வடக்கு மேற்கு விருத்த குமுத பகுதியில் உள்ள கல்வெட்டானது வீரராசேந்திரனின் காலமான கி,பி.1068 - இல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.(ARE-1892:SII.Vol-IV) இக்கல்வெட்டு வாசகத்தின் நூற்றி ஐம்பத்தியிரண்டாவதுரியில் முக்காணிக் கீழ் முக்காலே ஒருமாவும் கரிகாலகரைக்கு தெற்கு அகையாறு புந்செய்நிலம்…”என செய்தி தொடர்கிறது. இதில் குறிப்பிடப்படும் நிலம் நாகை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள ஓலயாம்புத்தூரில் உள்ளது எனவே கொள்ளிடத்தின் தென்கரை கரிகாலகரை என வழங்கப்பட்டது இக் கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது.

சோழவேந்தன்  ராஜேந்திரசோழனால் ஏற்படுத்தப்பட்ட சோழகங்கம் என்னும் பொன்னேரினுடைய மிகுநீர் துராந்தக வடவாற்றின் மூலம் வீர நாராயணப் பேரேரியை அடைகிறது. ராஜேந்திர சோழனின் காலமான கி.பி.1018-ல் ஏற்படுத்தப்பட் திருவாலங்காட்டுச்செப்பேட்டின் வடமொழி பகுதியின் நூற்றுஇருபத்திநாலாவது வரி இப்படி கூறுகிறது. தன்னுடைய மண்டலத்தில் சோழகங்கம் என்ற பெயருடையவும் கங்கை நீரால் ஆனதுமான வெற்றித் தூணை நிறுவினான் என்று கூறுவதன் முலம் பொன்னேரிக்கு சோழகங்கம் என பெயர் உள்ளது தெரிய வருகிறது.(ARE-1903-04: SII.Vol-III; MER-1916) மேலும் கங்கைகொண்ட சோழபுரத்தின் பிரகதீஸ்வரர் கோயில் கருவறைக்கு மேற்கு சுவர்த்தில் உள்ள விஜய நகர பேரரசு மன்னர் விருப்பண்ண உடையாரின் காலமான கி பி. 1397- இல் ஏற்படுத்தப்பட்ட கல்வெட்டின் ஏழாம்ரி நயினார் திருநாமத்துகாணியான பிடா….. திருவாசல் நாராசத்துக்கு மேற்கு பொன்னேரிக்கு கிழக்கு….” (ARE-1892; SII.Vol-IV) என எல்லை இடுவதன் மூலம் பொன்னேரி பெயர் வரலாற்றில் தெரியவருகிறது.

பொன்னேரியின் மிகுநீர் ஓடும் வாய்க்கால் தற்பொழுது கருவாட்டு ஓடை என்று அழைக்கப்படுகிறது. கருவாட்டு ஓடைக்கு னைவெட்டுவான் கால் என அழைக்கப்பட்டது. கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கருவறை தெற்குச் சுவர்  கல்வெட்டு  ஐந்தாம் மாறவர்மன் விக்கிரம சோழன் விக்கிரம பாண்டியன் காலமான கி பி.1329-ல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அக் கல்வெட்டின் நாலாம் ரி உடலாக இவ்வூர் வீரபோகங்களில் குலோத்துங்கசோழநல்லூரில் மதுராந்தக வடவாற்றுக்கு மேற்கு னைவெட்டுவான் காலுக்கு கிழக்கு வல்லபநல்லூருர்  எல்லைக்கு வடக்கு கொல்லாபுரத்து  எல்லைக்கு தெற்கு நடுவுட்பட்ட செல்கால் கார்மறு நிலமும்” என  எல்லை இடுவதன் மூலம் இன்றைய கருவாட்டு ஓடைக்கு அன்றைய தினம் அன்றைய நாளில் னைவெட்டுவான் கால் எனப்  பெயர்  விளங்கியது தெரியவருகிறது. (ARE-1892; SII.Vol-IV). இக்காலத்தில் கொல்லாபுரம் அதே பெயரிலும் குலோத்துங்கசோழநல்லூர் புளியந்தோப்பு குலோத்துங்கநல்லூர் எனவும் வல்லபநல்லூர் வளவநேரி எனவும் வழங்கப்பெறுகிறது.

தற்பொழுது வீரணம் பதினாறு கீலோமீட்டர் நீளம் கொண்ட கிழக்கு கரையில் இருபத்திஎட்டு மதகுகளுடனும் மேற்குகரை முப்பத்தி ஒன்பது கிலோமீட்டருடன் ஆறு மதகுகளுடன் பாசன ஏரியாகவும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியாகவும் உள்ளது. இதற்கு நீர் வழங்கும் வடவாறு கொள்ளிடம் ஆற்றின் வடகரையிலிருந்து பிரிகிறது. இக் கொள்ளித்தின் குறுக்கே கி.பி.1836-ல் கதவணை ஆங்கிலேயர்களால் கட்டப்படுகிறது. (Madras District Manual. Tanjore. Vol-I), இந்த கதவணை கட்டுவதற்கு கங்கைகொண்ட சோழபுரத்தின் முதல் இரண்டு திருவாயில்கள் முதல் மற்றும் இரண்டாம் சுற்று திருமதில்கள் பிரித்தெடுக்கப்பட்டு அக் கற்கள் பயன்பட்டிருக்கிறது, இதற்கு சான்றாக கி.பி.1885-ல் பரோஸ் நிறுவனம் ஆங்கில அரசுக்கு தயாரித்த அறிக்கை ஒன்றில் இத்தொடர்  உள்ளது “ கங்கைகொண்டபுரத்திலுள்ள ஒப்பற்ற கோவிலை சொல்லும் பொழுது கொள்ளிடம் ஆற்றில் கீழ் அணைகட்டு கட்டும் பொழுது இந்த கோவிலின் அழகான சிற்பங்கள் மண்டபங்கள் சுற்றுசுவர் முழுவதும் அடியோடு அழிக்கப்பட்டது. இந்த ஊரைச் சேர்ந்த ஏழை எளிய மக்கள் இந்த அழிவைத் தடுக்க கடுமையாக போராடினார்கள். அரசாங்க அதிகாரிகள் இதற்கான உரிமைப்பத்திரம் யாரிடமும் இல்லை எனக் கூறி இடித்ததோடு தடுத்தவர்கள் மீது அரசு அதிகாரிகளை வேலை செய்யாமல் தடுத்து குந்தகம் செய்தார்கள் எனவும் தண்டிக்கப்பட்டனர். இடிக்கப்பட்ட கட்டுமானங்கள் கருங்கற்களுக்கு பதில் செங்கல்லால் கட்டிக்கொடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அந்த உறுதி மொழி இன்னும் அப்படியே உள்ளது.” (Pharoah’s Gazetteer of South India-Madras., Indian Antiquary- IV and The Colas;2000) எந்த ஆற்றின் மீது ஆதிக்கம் செலுத்தி தன் பேரால் இராசேந்திரசோழப்பேராறு என வழங்கப்பெற்றதோ அந்த ஆறு அவர் கலைப்படைப்பை தன்னுள் பேரணையாக கொண்டு அவரின் பெயர் சொல்லிக் கொண்டிருக்கிறது.

உதவிய நூல்கள், செய்திகள்.

1.        The Colas- by K.A.Neelakandasastri.p.122 in year 2000, published by Madras University.

2.        Travancore Archaeological Series -Vol-III.p.34 verse 58-60.

3.        Annual Report on Epigraphy. ARE; 12 of 1945-46.

4.        Annual Report on Epigraphy. ARE: 35 of 1913

5.        South Indian Inscriptions, SII.Vol-XXVIII.No.35.

6.        Annual Report on Epigraphy. ARE; 112 of 1985.

7.        South Indian Inscriptions.SII-Vol.V.no-673.

8.        Annual Report on Epigraphy.ARE.259 of 1926

9.        Annual Report on Epigraphy.ARE.76 of 1892.

10.     South Indian Inscriptions, SII: Vol- IV; 523.

11.     Annual Report on Epigraphy. ARE: 82 of 1892.

12.     South Indian Inscriptions. SII. Vol -IV. No: 529

13.     Annual Report on Epigraphy. ARE: 233-35 of 1903-4.

14.     Madras Epigraphical Report.p.11-20 of 1916.

15.     South Indian Inscriptions. SII. Vol- III. No: 205.

16.     Annual Report on Epigraphy. ARE.320 of 1964-65

17.     Annual Report on Epigraphy. ARE.76 of 1892.

18.     South Indian Inscription. SII. Vol - IV.No.523.

19.     Madras District Manual. Tanjore. Vol-I.p.106 of 1906.

20.     Pharoah’s Gazetteer of South India, Madras.p.338-39 0f 1855

21.     Indian Antiquary. Vol-IV.p.274

22.     The Colas-Note.B-p.234 in the year 2000.