தொல்காப்பியர் தேவையும் பிறந்தநாள் கொண்டாட்டமும்……..
பொறி.இரா.கோமகன், கங்கைகொண்டசோழபுரம்.
தொல்காப்பியம் என்றால்
அது தமிழ் இலக்கணநூல் என்று மட்டுமே அறியப்பட்டு புகட்டப்படுகிறது.அது அப்படித்தான்
உள்ளதா? எனில் அப்படி இல்லை என்பது தான் அப்பட்டமான உண்மை. தொல்காப்பியத்தை தமிழ் வரலாற்றப்
பனுவல், தமிழ் மரபு நூல் எனும் வரையறைக்குள் நிறுத்த வேண்டும்.
மொழியின் விளைவா சமூகம் அல்லது சமூகத்தின்
விளைவா மொழி என்றால் மொழிதான் சமூகத்தைக் கட்டமைக்கிறது. மொழி ஒன்றிர்க்கும் மேற்பட்ட
உடல்களை இணைத்துகூட்டித் தொகுப்பாக்கி மனிதர்களைச் சமூகமாக்குகின்றது.
மொழியில்லாவிட்டாலும் மனிதக் கூட்டம் வாழும், ஆனால் சமூகம் இருக்காது. வாழும் நிலபுலத்தோடான உறவிற்கு மொழிதான் அடிப்படை, மக்கள் தொகுப்பாகிய
சமூகம் அது வாழும் நிலபுலனோடு வேர்விட்டு விரிவாக மொழியே முதன்மைக் காரணியாகிறது. சமூக
அமைப்புகளின் வளர்ச்சியோடு மொழியும் வளர்ச்சிதை மாற்றம் கொள்கிறது.
மனிதர்கள் தான் வரலாற்றை உருவாக்குகிறார்கள். அந்த மனிதர்களைக்/ கட்டமைப்பது மொழி, மனிதர்களின் நினைவாக இருக்கும் மொழி அதை அனுபவ மாக்கி செய்தியாகப்
பதிவு செய்து தன் செயலியக்கத்தைத் தொடர்வதால் வரலாறு எனும் காலத்தின் அசைவியக்கத் தொகுப்பு நிலத்தோடு ஊன்றப்பட்டு, நிலத்தின் உறுப்பாக மனிதர்கள் மாற்றப்படுகின்றனர். புறயமான நிலத்தை மனிதருக்குள் அகவயப்படுத்தும்
முறையில் தோன்றிய மொழி அதன் தொடர் வினையாற்றலால் நிலத்தின் அகவயமாக மனிதனை மாற்றி விட்டது.
"மொழி என்பது சமூக
மேல்கட்டுமானங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. மொழி என்பது பழைய அல்லது புதிய
சமூகத்தின் விளைபொருள் அல்ல. மாறாக வரலாற்று ரீதியாக பல நூற்றாண்டுகள் கடந்து வந்த
சமூகத்தின் அடிப்படை விளைவாகும்.இது ஒரு சிலரால் அன்றி ஒட்டுமொத்தச் சமூகத்தால்
நூற்றுக்கணக்கானத் தலைமுறையினரால் உருவாக்கப்பட்டது. தனித்தொரு பிரிவால் மட்டுமின்றி
ஒட்டுமொத்த மக்களின் தேவைகளுக்காகனது.எனவே மொழியின் செயல்பாடு மனிதர்களுக்கு
இடையில் உறவை ஏற்படுத்தி ஒரு வர்க்கத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்திற்கு
பொதுவானதாக மொழி அமைந்துள்ளது.உண்மையில் மொழி பழைய,
புதிய சமூகஅமைப்பின்
கட்டுமானங்களும் மேற்கட்டுமானங்களும் பொதுவானதாக சுரண்டப்படுவோர், சுரண்டுபவர்களுக்குப்
பொதுவானதாக அமைந்துள்ளது".(ஜே.வி.ஸ்டாலின்:1950)
காலத்தின்
அசைவியக்க தொகுப்புதான் வரலாறு. அது நிலத்தோடுடு ஊன்றி
நின்று நிலம்
மனிதனில் அகவயப்படும் நிலையில் பண்பாடு அமைகின்றது. பரம்பரை, தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் கருத்தமைவுகளின் விரிவாக்க வினையே மன அமைப்புகளைத் தோற்றுவித்து பண்பாடோகிறது. பண்பாட்டைச் சொல்லாடல்கள்
கட்டமைக்கின்றன. சொல்லாடல்களுக்கு மொழிதான் முதன்மையானது.
தமிழ்ச்சமூக உருவாக்கம் தமிழ் மொழி வழிதான் நிகழ்த்தப்படுகிறது. அச்சமூக அமைப்பை
மாறிவரும் பொருளாதார உறவுகள் மாற்றி வருகிறது. தமிழ் மொழிதான் தமிழ் சமூகத்திற்கு அடிப்படை எனும்
பொழுது, அம்மொழியின் இலக்கண, மரபு நூல் தொல்காப்பியம் அச்சமூகத்தின் முதன்மை நூலாகிறது.
"ஒரு மொழியின் இறுதி இலக்கு மனிதனை நிலத்துடன் பிணைப்பதே. மொழியின் முதல் வினையே வெளியே
(புறத்தை-இயற்கையை) மனிதவயமாக்குவதே (அக வயமாக்குதல்- மனம்). அதாவது புறவெளியை அகவெளியாக்குவதன் மூலம் மனத்தையும், அதன் மூலம் மனிதனையும் கட்டமைத்தல், பின் மனிதனை
இடப் டுத்துவதும் (spatial-being) தனது மொழி
அலகுகளால் வரலாறு என்கின்ற காலம் பற்றிய நினைவுகளால் அடையாளப்படுத்துவதன்
மூலம் காலத்திற்குள் நிறுத்துவதும் (Temporal-being) இடம் காலம் பற்றிய நினைவுகளின் வழியாகத் தனக்கான் நிலம் பற்றிய வரைபடங்களை நினைவுத் தளத்தில் வரைவதும் பின் அந்த வெல்வதும்
நிலத்துடன் பிணைப்பதுவே ஆகும்". (ஜமாலன்:2013: மொழியும் நிலமும் ).
அரசியல் பொருளியல்
மாற்றங்களுடே தமிழ்ப்பெரு நிலத்தைக்கட்டமைக்கும் நோக்கத்தின் வெளிப்பாடு தான் தொல்காப்பியம்.
வேந்தர்களின் எழுச்சியால் தமிழ்ப்பெருநிலம் கட்டமைகிறது. அப்பெருநிலத்தை தமிழ்ச்சமூகத்தோடு
இணைக்கும் பணியைச்செய்தது தொல்காப்பியம். தொல்காப்பியம் வழிதான் தமிழ்ப்பெருநிலம் அறியப்படுகிறது.
தன்மொழியின் சொற்களை வகைப்படுத்திப் பிறமொழிச்சொற்கள் கலப்பால் தமிழ்மொழியைச் சிதைவிலிருந்து
காத்தது தொல்காப்பியம். அதனாலேயே தொல்காப்பியர் தான் முதல் மொழிப்போராளி எனலாம். தொல்காப்பியத்தை
தமிழ்காப்பு நூல் எனலாம். எனவே தொல்காப்பியமும் தொல்காப்பியரும் தமிழர்கள் கொண்டாட
வேண்டிய முதல் நூலாகும்.
கரந்தைப்புலவர் கல்லூரி, தஞ்சாவூர் / திருவள்ளுவர்கல்லூரி, பாவநாசம், மேனாள் முதல்வரும்; செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆய்வறிஞர். திருமிகு.கு.சிவமணி அவர்களின் “ தொல்காப்பியர் திருநாள் – நினைவலைகள்”
எனும் கட்டுரையின் ஒரு பகுதியை இங்கு நோக்கத்த்ருவது சிறப்பாகும்:
"தொல்காப்பியரின் நாளும் காலமும் குறித்துக்
கடந்த ஒரு நூற்றாண்டு வரலாற்றில் சிலவற்றை நினைவுகூர்ந்து தொல்காப்பியர் திருநாளை நிலையுறுத்துவதே
இக்கட்டுரையின் நோக்கம்.
இற்றைக்கு 110
ஆண்டுகளுக்கு முன் நீலகிரி- குன்னூரில் நூலகக் காதலரான தஞ்சை மாவட்டத்துப்
பெருநிலக்கிழார் ஒருவர் ஒரு நூலகத்தை நிறுவி அதற்குப் பத்தாயிரம் ரூபாய் நன்கொடை
அளித்தார் –அத்துடன், அந்நூலக வளாகத்தில் தொல்காப்பியர்
சிலையை 10.9.1911 அன்று நிறுவி அந்தநாளைத்
தொல்காப்பியர் திருநாள் எனக் கொண்டாடினார். அவர் - தமிழ், ஆங்கிலம், சமற்கிருத
மொழிகளில் வல்லவர்; இசை, சித்த மருத்துவம், யோகம்
முதலாய பலகலைகள் பயின்றவர். அவர்காலத்திய சென்னை மாகாண ஆளுநர் சர். ஆர்தர் லாலி, மாவட்டத்
துணையாட்சியர் ஆஸ்டின் போன்ற ஆங்கில ஆட்சியாளர்களின் நெருங்கிய நண்பர்; புதுதில்லியில்
12.12.1911 அன்று ஐந்தாம் ஜார்ஜ் மன்னர்
முடிசூட்டிக்கொண்டபோது சிறப்பு விருந்தினராகக் குடும்பத்தோடு அழைக்கப்பெற்றவர்; தமது
இனத்தைக் குற்றப்பரம்பரைச் சட்டத்திலிருந்து விடுவிக்க வேண்டி மன்னரிடம்
நேரடியாக வாதுரைத்து வெற்றிக்கு
வித்திட்டவர்; தமது சிற்றூரில் காரனேசன் நூலகம் என்ற ஒரு பெரிய
நூலகத்தை உருவாக்கி, அரிய நூல்களையும் ஓலைச் சுவடிகளையும் திரட்டிக்
காத்துப் பின்னாளில் சங்கநூல் பதிப்பித்த டாக்டர்.உ.வே.சாமிநாதையர், ஔவை துரைசாமிப்பிள்ளை, பின்னத்தூர்
நாராயணசாமிஐயர் போன்ற பலருக்கும் அவற்றைக் கொடுத்துதவியவர்; சுற்றுப்புறத்துள்ள
50 சிற்றூர்களின் நலம் கருதி ஔடதசாலை அமைத்தவர்; பெரும்புலவர்
சோழவந்தான் அரசஞ்சண்முகனார் பிணிநீக்கி உயிர்காத்து அவரது தொல்காப்பியப்
பாயிரவிருத்தி நூலைத் தாமே பார்வையிட்டு வெளிட்ட புலமைநலஞ்சான்ற புரவலர். அவரே அரித்துவாரமங்கலம் கோபாலசாமி இரகுநாத
இராசாளியார் எனும் மாநிதிக் கிழவர். (சிதைந்துள்ள அச்சிலையையும் நூலகத்தையும்
தமிழக அரசு பேணிக் காக்கவேண்டும் எனும் தீர்மானத்தைத் திருவள்ளுவர் இலக்குவனார்
அரசுக்கு அனுப்பினார்.)
1902இல் தொல்காப்பியம் பற்றிய முதல்
கட்டுரையை மதுரைத் தமிழ்ச் சங்கத்துத் செந்தமிழ் இதழில் ரா.இராகவையங்கார்
எழுதினார். பின்னர் பி.சா. சுப்பிரமணிய சாத்திரியாரின் தொல்காப்பியச் சொல்லதிகார
ஆய்வுக் குறிப்புகள் என்ற ஓர் ஆய்வேட்டுக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் முனைவர்
பட்டம் வழங்கியது. இவற்றினுடைய நோக்கம் தொல்காப்பியம் சமற்கிருதத்துக்குக்
கடன்பட்டது என்பதை நிறுவுவது ஆகும். புலமைப்போர் தொடங்கியது. டாக்டர்
சாத்திரியாரின் ஆய்வை வரிக்கு வரி
மறுத்துத் தொல்காப்பியத்தின் தமிழியல் வேர்களைக் கண்டறிந்து கரந்தைத் தமிழ்ச்சங்கத்துத்
தமிழ்ப்பொழில் – 21 இதழ்களில் தொடர்கட்டுரைகளை எழுதியவர், தொழில்முறையில்
பேராசிரியர் அல்லர், காவல் உதவி ஆய்வாளர், மன்னார்குடி நா. சோமசுந்தரம்
பிள்ளை. இது இடைக் காலநிலை; தொல்காப்பியர் காலம் பற்றிக் கருத்து மோதல்கள் இருப்பினும்
அவரது நாள் பற்றி இராசாளியாரைத் தவிர, யாரும்அக்கறை கொண்டதாகத்
தெரியவில்லை. 20ஆம் நூற்றாண்டு இறுதியில், அதாவது-
1975க்குப் பின், தொல்காப்பியம்-
சங்க இலக்கிய ஆய்வுகள் வெறும் ஐந்து விழுக்காட்டுக்குக் கீழ் இருந்தன.
இந்நிலையில் 21ஆம்
நூற்றாண்டுத் தொடக்கத்தில் அதாவது 2004ஆம்
ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தோற்றம் பெற்றது. அப்பொழுது தமிழ்
முதுகலை மாணவர்கள், ஆய்வியல்நிறைஞர், முனைவர்பட்ட
ஆய்வாளர்களிடம் சங்க இலக்கியம் - தொல்காப்பியம் பற்றிய ஆர்வம் பெரிதாக இல்லை.
செம்மொழி நிறுவனத்தின் அன்றைய முதல் பொறுப்பலுவலர் பேராசிரியர் க.இராமசாமி அவர்கள்
தலைமையில் ஒரு திட்டம் வகுக்கப்பெற்றது. அதற்கிணங்க, ஓர்
ஐந்தாண்டுகளில் ஒரு (3-நாள்), பயிலரங்கம்(10-நாள்)
என்ற அளவில் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட தமிழியல் நிகழ்வுகள் நடந்தன. நாளொன்றுக்குக் குறைந்தது 5
அறிஞர்கள்.ஏறத்தாழ 1800 நாட்கள், 9000 ஆய்வுரைகள் நிகழ்ந்தன. ஓர்
அரங்கத்திற்குத் தொடக்கத்தில் ஆய்வாளர்
எண்ணிக்கை 60,
காலப்போக்கில் 100 என
உயர்ந்து 25000 ஆய்வுமாணவர்கள் பயன்பெற்றனர். பயிலரங்க
நிறைவுநாளில் ஆய்வாளர் ஒவ்வொரு வருக்கும் 3000 ரூபாய் விலைமதிப்புள்ள சங்க
இலக்கியத் தொகுதி அன்பளிப்பாக வழங்கப்பெற்றது. தமிழகம் மட்டுமன்றிக் கேரளம், ஆந்திரம், கர்நாடகம்
ஆகிய அண்டை மாநிலங்களிலுள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில், இந்த
நிகழ்ச்சிகள் நடைபெற்றன செம்மொழி நிறுவன ஆய்வறிஞர் எனும் நிலையில் கட்டுரையாளர் 60க்கும்
மேற்பட்ட நிகழ்வுகளுக்க ஒருங்கிணைப்பாளராக அமைந்து திறம்பட நடத்தினார். இதன்
விளைவாக இளம் ஆய்வாளர்களிடையே ஒரு மாபெரும் விழிப்புணர்வுப் புரட்சி ஏற்பட்டு, 2010இல் தொல்காப்பியம் - சங்க இலக்கிய ஆய்வுகள்
வியக்கத்தக்க வகையில் 85 விழுக்காட்டை எட்டிப் பிடித்தன .
செம்மொழி நிறுவனம் தொல்காப்பியர்
கருத்தரங்கம்/பயிலரங்கம் என்ற வகையில் 40 நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தது
அப்போதெல்லாம் அறிஞர்கள் தொல்காப்பியரின் காலத்தையும் நாளையும் வரையறுக்க வேண்டும்
என்ற வேண்டுகோளை முன்வைத்தனர். 2009இல் இவ்வேண்டுகோள் மிகவும்
வலுப்பெற்ற நிலையில், கோவிலூர்த் திருமடத்தின்
ஆதீனகர்த்தர் சீர்வளர்சீர் நாச்சியப்ப தேசிகர் அவர்கள் அதனை முன்மொழியவே, செம்மொழித்
தமிழாய்வு நிறுவனம் கோவிலூர்த் திருமடத்துடன் இணைந்து 26, 27, 28 செப்டம்பர் 2009 ஆகிய நாட்களில் தொல்காப்பியர் கருத்தரங்கைக்
கோவிலூரில் நடத்தியது. சென்னைத் தலைநகர்த் தமிழ்ச்சங்கம் முதல் குமரி மாவட்டத்
தமிழ் அமைப்புக்கள் வரை பல்வேறு நிறுவனங்களும், பல்கலைக்கழகம், கல்லூரிகளில்
பணியாற்றிய பேராசிரியர்களும் தனிநிலையில் தொல்காப்பிய அறிஞர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்; 28 பேர் கட்டுரை வழங்கினர்; ஏனையோர் உரை நிகழ்த்தினர்; வேனிற்காலத்தில்
புலவர்கள் கூடல் மாநகரில் ஒருங்கிணைந்து
தமிழாய்ந்தனர் என்று கலித்தொகை சுட்டிய மரபுவழக்கத்தை ஒட்டித் தொல்காப்பியர் நாள்
சித்திரை முழுமதி நாள் என்பதில்
கருத்தொருமை கொண்டனர்; ஆனால் தொல்காப்பியர் காலத்தில்
அன்று. கிமு ஏழாயிரம் முதல் கிமு நூறு வரை எனக் கருத்து வேறுபாடு இருந்தது.
பொதுக்கருத்து அடிப்படையில் தீர்மானத்துக்கு அறுதி வடிவம் கொடுக்க இரவு 9மணிக்கு
அமர்ந்த தமிழண்ணலும் கட்டுரையாளரும் அவ்விளக்கத்தை எழுதிமுடித்தபோது விடியல் கோழி
கூவிற்று. 8 பக்கம் கொண்ட அந்தத் தீர்மானம்(ப.1) + விளக்கம்(ப.7) ஆகியவற்றைத் தமிழண்ணல் 20 மணித்துளிகள்
படித்து முன்மொழிந்தார்; கட்டுரையாளர் அதனை வழிமொழிகையில்
நிறைய வினாக்கணைகள் தொடுக்கப்பட்டதால் அவற்றிற்கெல்லாம் விடைகூறுதற்கு ஒன்றரை மணிநேரம் பிடித்தது. நிறைவாக, ஆய்வாளர்கள்
தொல்காப்பியர் காலத்தைப் பொறுத்து அவரவர் கருத்தையே கொண்டாலும், கீழ்எல்லை
711 என்றும், தொல்காப்பியர் நாள் சித்திரை முழுநிலவுநாள் என்றும் ஒப்புகை செய்தனர்.”
இந்நிகழ்வில் தொல்காப்பியர் நாளாக சித்திரை முழுநிலவு நாளை தேர்வுசெய்தமைக்கு அடிப்படையாக
அந்நாள் இளங்கோவடிகள் முன்னிருத்திய இந்திரவிழாவின் இறுதிநாள் என்பதாலும், உலகமுழுவதும்
அன்றைய நாள் “புத்தபூர்ணிமா” என புத்தர் பிறந்தநாளாக கொண்டாடப்படுவதாலும், தமிழகத்தில்
அந்நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது என விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக
சித்திரை முதல் நாளை அவரது பிறந்த நாளாகக் கொண்டாட வேண்டும் என பெரும்பாலானத் தமிழறிஞர்கள்
கூறும் கருத்தும் உண்டு.
தமிழறிஞர் தமிழண்ணல் அவர்கள் 2012-ம் ஆண்டு தினமணி நாளேட்டில் சித்திரை முதல்நாளை
தொல்காப்பியர் பிறந்தநாளாக அறிவிக்க வேண்டும் என கட்டுரை எழுதினார். அதை வழிமொழிந்தார். பேரா.சே.வை.சண்முகம், அறிஞர்.கு.சிவமணி, யாழ்பாணம் பேரா.ஆ.வேலுப்பிள்ளை,
பேரா.கு.நாச்சிமுத்து, முனைவர், நாசா.கணேசன் ஆவார்.
2019-2020 ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை எண்-46-ன் போது மாண்புமிகு
அமைச்சர் திரு.மஃபா.பாண்டியராசன் அவர்கள் தொல்காப்பியர் பிறந்தநாளாக சித்திரை முழுநிலவுநாளை
அறிவித்து அதைக் கொண்டாட வழி செய்தார். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை,
தனது அரசாணை எண்: 148, நாள்:15.11.2019, விகாரி, ஐப்பசி-29, திருவள்ளுவர் ஆண்டு-2050-ன்
படி சித்திரை முழுநிலவு நாளை தொல்காப்பியர் பிறந்தநாளாகக் கொண்டாட அரசு ஆணை வழங்கியது.
அவ்வாணையின் படி, சித்திரை முழுநிலவு நாளில் சென்னைப் பல்கலைக்கழக மெரினா
வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தொல்காப்பியர் சிலைக்கும் மற்றும் கன்னியாக்குமரி மாவட்டத்தில்
காப்பியக்காட்டில் நிறுவப்பட்டுள்ள தொல்காப்பியர்
சிலைக்கும் மலர்தூவி மாலை அணிவித்து சிறப்பு செய்ய சிலை ஒவ்வொன்றிர்க்கும்
ரூபாய் 3000-/- என இருசிலைகளுக்கும் தொடர் செலவினமாக ரூ.60000-/- வழங்கி ஆணையிட்டுள்ளது.
ஆனால் இந்நிகழ்வு
“பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று” என முடிந்துவிடுகிறது. ஊடகங்கள் இதை
முதன்மைப்படுத்தி செய்தியாக ஆக்கின்றனவா? என
கேள்வி எழுகிறது.
இராசராசசோழனுக்கும்
இராசேந்திரசோழனுக்கும் அகவைநாளில் அரசுவிழா எடுப்பதை விட மிக கூடுதல் கவனத்துடன் சிறப்பாகக்
கொண்டாட வேண்டிய நாள் தொல்காப்பியர் பிறந்தநாளாகும். உலகு அதிரக்கொண்டாட வேண்டிய நாளை
“இராண்டாம் பேருக்குத் தெரியாமல்” முடிந்து போகிறது. இன்றைய காலம் தமிழையும் தமிழ்நிலத்தையும்
அதன் தொல்காப்பியர் நிலைநின்று அவர் வழியில் காக்க வேண்டிய அவசரநிலை நிலவுகிறது.
·
தமிழக அரசு
தொல்காப்பியத்தை மிகப்பரவலாக்க வேண்டும்.
·
தொல்காப்பியம்
கற்றலை ஊக்குவிக்க வேண்டும்.
·
தொல்காப்பியத்தையும்
அதன் உரைகளையும் மலிவுவிலைப் பதிப்பாக்க வேண்டும்.
· தொல்காப்பியர்
பிறந்தநாள் முக்கியமற்ற வகையில் முடிந்து போவதைத் தவிர்த்து அதை அரசுவிழாவாக அறிக்க
வேண்டும்.அதை பொதுவிழாவாக்க வேண்டும்.
சித்திரை முழுநிலவு நாள் சிறக்குமா?
தமிழுக்கு தொண்டு செய்தோர் சாவதில்லை. என பாவேந்தர் சொல்லியது இதனால் தான் என கருதுகிறேன்.
ReplyDeleteஎவ்வளவோ மனிதருக்குள் பழக்கம் ஏற்படுகிறது.ஆனால்மொழிக்காக, இன உணர்வுள்ள பழக்கம் இறந்த பின்னரும் சந்ததி வ ழி தொடரும்.45 வருட உங்களுடனான உறவும் மேற்கண்ட தே.
ReplyDeleteஆம் வேலு, தொடர்ச்சி என்பது அறிவு வழிப்பட்டதாக அமையும் பொழுது அது அறுந்து போவதில்லை. உடல் x மனம் எனும் அமைப்பிற்குள் உணர்வு என்பது வாழும் சமூகம் கட்டமைப்பது.சமூக-அரசியல்-பொருளியல் காரணிகள் சார்பு நிலைகளைத் தோற்றுவிக்கின்றன.நிழ்கால தளைகளாக அவற்றை விரிக்க முடியும்.அவற்றிலிருந்து விலகி நின்று வரலாற்றை நோக்குவது சிக்கலான சவால்.அதை எதிர்கொண்டு நாம் நகர்கின்றோம்.வாழ்த்துகள்.
ReplyDelete