Sunday, August 9, 2026

இராசேந்திரசோழனின் அயலகப்படையெடுப்பின் பின்னணியில் சைவ வைதீகச் சடங்கு இறையாண்மையும் வணிகுழுக்களின் ஆதிக்கமும்

 

இராசேந்திரசோழனின் அயலகப்படையெடுப்பின் பின்னணியில் சைவ வைதீகச் சடங்கு இறையாண்மையும் வணிகுழுக்களின் ஆதிக்கமும்.

இரா. கோமகன். தகைசால் பேராசிரியர், கடல்சார் வரலாறு & கடல்சார் தொல்லியல் துறை, தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்.

சுருக்கம்: இந்தியப் பெருங்கடல் வணிகம் (கிமு–கிபி 10-11-ஆம் நூற்றாண்டு) பொருளாதாரத்தைத் தாண்டி மத–அரசியல் வலையமைப்புகளை உருவாக்கியது. சோழ அரசு சைவ வைதீக சடங்கு கூறாக்க அரசியல் இறையாண்மை பெற்றிருந்தது. பௌத்த வலையமைப்புகள் வணிகத்தை கட்டுப்படுத்திய நிலையில், சோழர்கள் வைதீக சடங்கு இறையாண்மையை முன்வைத்து அவற்றை முறியடித்து, இந்தியப் பெருங்கடல் வணிக–அரசியல் மேலாதிக்கத்தை நிறுவினர்.இராசேந்திரசோழன் அயலகப் படையெடுப்புகள் இதைச் சாத்தியப்படுத்தியது.அதன் சின்னமாக கங்கைகொண்டசோழபுரம் நிறுவப்பட்டது.

இந்தியப் பெருங்கடல் – வணிகம் – புத்தமத அரசியல் வளையமைப்பு – சோழ அரசு -சைவ வைதீக சடங்கு - கூறாக்க அதிகாரம் – முறியடிப்பு – இறையாண்மை – இராசேந்திரசோழன் – அயலகப்படையெடுப்புகள்.

இராசேந்திரசோழன் அலைகடல் நடுவே பலகலம் செலுத்தி கடல் கடந்து தென்கிழக்காசிய நாடுகளை கி.பி.1025-ல் வென்ற செய்தி ஆசியப் பகுதில் குறிப்பிடக்கூடிய நிகழ்வு ஆகும். இப்படையெடுப்பைத் தனியாகப் பிரித்துப் பார்க்கக்கூடாது. ஈழம், கங்கை உள்ளிட்ட வடபுலம், கடாரம் எல்லாப் படையெடுப்புகளும் அடுத்தடுத்து நிகழந்துள்ளன. இதற்கு பெரிய அளவிலான மனித உழைப்பும் தலைமை ஏற்கும் படைத்தலைவர்களும் மன எழுச்சியும் தேவைப்பட்டிருக்கும் என்பதை எளிமையான உணரலாம்.

இராசேந்திரசோழன் முடிசூடிய பிறகு முதலாண்டான கி.பி.1015-ல் ஈழப் படையெடுப்புத் தொடங்கியதிலிருந்து இடையே சில ஆண்டுகள் தவிர்த்து கி.பி.1025 ஆண்டு வரை அம்மன்னன் தொடர்ச்சியான போரில் இருந்தான் எனலாம். இடையில் விடுபட்ட சில ஆண்டுகள் கூட போருக்கானத் ஏற்பாடுகளின் இருந்திருக்கலாம். தொடர்ச்சியான முதல் பத்தாண்டைப் போர்க் காலமாகவேக் கருதலாம்.

இப்படித் தொடர்ச்சியானப் போர்களில் ஈடுபடவேண்டிய சூழலும் காரணமும் என்ன என்பதற்கான விளக்கங்கள் பலத் தரப்பட்டாலும் அவை அந்த கேள்வியை நிறைவு செய்யவில்லை. பாண்டியர்களின் இந்திர ஆரத்தையும் சுந்தர முடியையும் கைப்பற்ற இலங்கைப் போரையும், சாளுக்கியரை வென்றடக்கவும் புனித கங்கை நீரைக் கொண்டு வருவதற்கு இந்திய வடபுலத்துப் போரையும் வணிகத்திற்காக ஶ்ரீவிஜயாவை அடக்கியாள கடாரப்போரையும் நிகழத்தினார் எனக் கூறப்படுகிறது. இவை ஒரளவிற்கான அரசியல் காரணங்கள் தான் ஆனால் முழுமையான அரசியல் சமூகப் பொருளாதார அடிப்படையிலான காரணங்கள் இல்லை.

தென்னிந்திய இடைக்கால சோழர் அரசின் இயல்புகளைப் புரிந்துகொள்வதில் பெர்ட்டன் ஸ்டெயின் வழங்கிய “சடங்கு இறையாண்மைத் தத்துவம்” (ritual sovereignty) முக்கிய இடம் பெறுகிறது. அவர் சோழ அரசின் ஆட்சி முறை வெறும் படை மற்றும் அரசியல் அதிகாரத்தில் மட்டுமே அடிப்படையில்லை; மாறாக, அது கோவில், சடங்கு, மதவிழா மற்றும் பிராமண ஊர் சபைகள் வழியாக ஆன்மீக அடித்தளத்தை உருவாக்கி சமூகத்தை கட்டுப்படுத்தியது என்று வலியுறுத்துகிறார் (Stein, 1980, p. 19)

சோழ ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் குறுநில மன்னர்களால் ஆளப்பட்டிருக்கின்றன. அவர்கள் தான் அப்பகுதியின் அதிகாரம் கொண்டவர்களாக விளங்கினர்.இவர்களை வேளிர் எனலாம். இவர்கள் பகுதி சார்ந்த பண்பாட்டின் வழி ஆட்சியதிகாரத்தைத் தக்கவைத்திருந்தனர். பின்னாளில் பக்தி வழி அமைப்பாக்கம் கொண்ட பெருஞ்சமய பண்பாடுகளோடு இணைந்தனர். அரசியல் அதிகாரத்திற்காக அமைப்பாக்கம் கொண்ட சமயத்தையும் அதன் சடங்குமுறைகளையும் உவந்து ஏற்றனர்.

இக்குறுநில அரசுகள் தோற்றத்தை அறிவது தேவை.“பெருங்கற்சின்னப் பண்பாட்டினர் பல்வேறு இயற்கை வளங்களைக் கண்டறிந்து பண்டங்களாக மாற்றக்கற்றிருந்தனர். அதனால் இரும்பு, பொன்மணிக்கற்கள், ஆகியவை கண்டறிந்தனர். இந்நிலையில் தலைமை வகுப்பு,  ணிவகுப்பு ஆகிய இரண்டு பிரிவுகள் தோன்றிவிட்டன. தலைமை வகுப்பினர் தங்கள் பகுதியில் இயற்கை வளங்களை ஆளும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். அதனால் அவர்களது மனைகள்  பொருள் வளத்தில் கொழித்தது. பொருள் வளத்தின் மூலம் பிற பகுதிகளை தன்பகுதிக்குள் இணைத்து தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்தனர். அவ்வாறு கொண்டு வந்தவர்களே பின்னாளில் வேளிராக மாறினர்”.(ர.பூங்குன்றன்: 2016)

தமிழக நிலவியலை தொல்காப்பியம் செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்/ தங்குறிப்பினவே திசைச்சொல் கிவி.( தொல். சொல்: 400) என பகிர்கின்றது. பண்டங்கள் உற்பத்திப் பண்பாட்டையும் மொழியையும் வளர்த்தது. அதோடு அதிகாரங்கள் நிலைபெற்றன.வ்வழியே மொழி சமூகத்தை வளர்த்தெடுத்தது. தொல்காப்பிய காலத்தில் வேந்தர் எழுச்சிப் பெறுதற்கு முன்பே வேளிர் நிலைத்திருந்தனர்.

தமிழ்ச்சமூக அமைப்பு குடிகளின் கூட்டிணைவைக் கொண்டு குமாக திரட்சி கொண்டது. பண்டைய தொல்சமூக அமைப்பு பன்னிரு நிலங்களில் விரவி இருந்ததை  மொழியடிப்படையில் “செந்தமிழ் சேர்ந்த எனும் எல்லையைத் தொல்காப்பியம் உறுதிப்படுத்தி ஐந்து நிலவியல் பகுதியாக பகுத்தது. இதன் மூலம் தமிழ்ப்பெருநில உருவாக்கம் நிகழ்ந்து. தொல்காப்பிய காலத்தில் பன்னிரு நிலத்தில் ஒவ்வொரு நிலத்துக்கும் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட வேளிர் இருந்திருக்க வேண்டும்.

குடித்தலைவனான வேள்’களின் கூட்டிணைவில் மேலாண்மை அதிகாரம் பெற்ற வேளிர் உருபெற்றான் எனலாம். வேள்’ ஒருமை அதன் பன்மை வேளிர் எனலாம். குடியில் குழுத்தலைவன் வேள் எனக்கருதலாம். நிலப்பெயர், குடிப்பெயர், குழுவின் பெயரே, (தொல்.சொல்.165) என்பது தைச் சுட்டுவதாகக் கொள்ளலாம். தொல்காப்பியம் பன்னிரு நிலமெ1) பொதுங்கா நாடு 2) பாண்டி நாடு 3) ஒளி நாடு 4) குட்டநாடு 5) பன்றி நாடு 6) கற்கா நாடு 7) சீத நாடு 8) ஒளி நாடு 9) மலைநாடு 10) அருவாநாடு 11) அருவா வடதலைநாடு 12) குட்டநாடு (தொல்.சொல்.இளம்பூரன்னர். நமசிவாயமுதலியார்:1927) இந்நாட்டு பட்டியலில் சில உரையாசிரியர்கள் வேறுபாடு கண்டாலும் எண்ணிக்கை உறுதிபட கூறப்படுகிறது.

தொல்காப்பியர் காலத்தில் பன்னிரு வேளிர்கள் இருந்தனர் எனக்கருத இடமுண்டு. கடைச்சங்க காலத்தில்  தென் முதிர் வேளிர்( அகம்:258)  தொன்றுமுதிர் வேளிர்                 (ற்றி:280)  ற்பத் தென்பது வழிமுறை வந்த வேளிர் (புறம்:201) என்பதிலிருந்து அக்காலகட்டத்திற்கு முந்தியவர்கள் என்பது உறுதிப்படுகிறது. இவ்வெண்ணிக்கை மாறியது பதிநான்கு வேளிர் (அகம்: 135) பதினொரு வேளிர் (அகம்:246) ஐம்பெரும் வேளிர் எனும் சொல்லாடல்கள்(அகம்: 146) மூலம் உணரலாம்.

தமிழகத்தில் வேந்தர் ஆட்சி உருவாகி நிலைபெறுவதற்கு முன்பே வேள் ஆட்சி உருவாக்கி நிலைபெற்றது. தொல்குடிகளின் ரத்த உறவினால் வேள் (குடித் தலைவன்) எழுச்சி பெற்றான். சங்ககாலத்திற்கு முன்பே வேளிர்  உருவாகி விட்டனர். ஒவ்வொரு தொல்குடிக்கும் ஒரு வேள் இருந்திருக்க வேண்டும். தொல்குடிகளில் இருந்த மக்களுக்கும் வேளுக்குமிடையிலான உறவு இரத்த உறவின் அடிப்படையில் உறுதிப்பட்டு நின்றது.கோல் பூசலில் தான் முதலில் வேள் உருவானான். காலப்போக்கில் பூசல் காலங்கள் மட்டுமின்றி அமைதிக் காலங்களிலும்  வேளாகவே  நிலை பெற்றான்”.(. பூங்குன்றன்: 2016)

தொல்காப்பிய காலத்திற்கு முன்பே தொல்குடியும், குடிகள் இணைந்த குழுவும் இருந்தன. நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே/ வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகொள் பெயரே/ பல்லோர் குறித்த முறை நிலைப் பெயரே/ பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே/ பல்லோர்க் குறித்த திணை நிலைப் பெயரே/ கூடி வரு வழக்கின் ஆடியற் பெயரே/ இன்றிவ ரென்னும் எண்ணியற் பெயரோடு/ அன்றி னைத்தும் அவற்றியல் பினவே /(தொல். சூத்தி: 165) எனும் நூற்பா சான்றாகிறது.தொல்காப்பியர் கூறும் குழுவின் பெயரே என்பது குலத்தின் பெயர் என கூறலாம்.

தொல்காப்பியம் தமிழ்நிலத்தின்  எல்லைகளை வரையறுப்பதும் அப்பெருநிலத்தை இயற்கைடிப்படையில் குப்பதும் அந்நிலத்தில் மொழியை இலக்கணப் படுத்துவதும் ஒரு பெருநிலத்துக்கான அதிகாரச் செயல்பாடு பொருட்டே எனலாம். மூவேந்தர்கள் எழுச்சியின் ஊடாக இது நிகழ்ந்தது எனலாம். மூவேந்தர்களுக்கான பெரும் நிலத்தை மொழிவழியாக கட்டமைப்பதே அதன் நோக்கங்களில் ஒன்றாகக் கருதமுடியும். சிறு குறுநில வேளிர் அரசுகளை மேலாதிக்கம் செய்வதற்கான வழிவகையாக தமிழ் பெருநிலத்தை வரையறுக்கிறது எனலாம்.சோழ அரசின் கூறக்க அதிகாரம் என்பதின் அடிப்படை இங்கிருந்து தான் தொடங்குகிறது.

தொல்காப்பிய உருவாக்க காலகட்டமாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் அவை காலத்தில் உடமைப் பெருக்கத்தினால், வர்க்கங்களின் முரண்பாடுகள் பெருகத் தொடங்கிவிட்டன எனக்கருதயிடமுண்டு. குழுவாக, குடியாக தகவமைந்த தமிழ்க் குத்தில் தொல்காப்பியக் காலத்தில் வேந்தர் எழுச்சி பெற்றத்தை உணர முடியும். தொல்காப்பியத்தில் பாட்டு உரைநூலே வாய்மொழி பிசியே/ அங்கதம் முதுசொல் அவ்வேழ் நிலத்தும் / வண்புகழ் மூவர் தன் பொழில் வரைப்பின்/ நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும் / யாப்பின் வழியது என்மனார் புலவர்/( தொல். பொருள்.: 75) எனும் தொல்காப்பிய வரிகள் அதைத்தான் சுட்டுகின்றது.

தமிழின் ஐந்து நிலவியல் பகுதிகளை ஒரு தொகுப்பிற்குள் வரையறுப்பதன் மூலம் தமிழைப் பெரும்மொழியாக்கி தொல்காப்பியம் ஒரு புதியசமூக அமைப்பையும் தமிழ் பெருநிலத்தையும் கட்டமைக்க முயல்கிறது எனக்கூற முடியும். அன்றைய ஆளும் அமைப்புகள் தமிழைப் படித்தரப்படுத்த முனைகின்றன எனக்கூறலாம்.

தமிழ்ப் பெருமொழி உருவாக்கம் என்பது மூவேந்தர்களது செல்வாக்குப் பெற்று சுற்றியுள்ள குறுநிலங்களை  இணைக்கும் போக்குடன் இணைத்துப் பார்க்கத்தக்கது (ஜமாலான்:2003)

வேந்துகுலமுடியாட்சி வேளிர்களின் குடியாட்சியை மேலாண்மை செய்யும் விரிவாக்கம் கடைச்சங்க காலத்தில் தீவிரம் கொண்டது எனலாம். வேந்தர்கள் பற்றி புறநானூற்றில் 132 பாடல்கள் உள்ளன. அவற்றில் சோழகுல வேந்தர்கள் பற்றி 66 பாடல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அடுத்த நிலையில் பாண்டியக்குல வேந்தர்கள் மிகுதியான பாடல் பெற்றிருக்கின்றனர். இது மருதத்திலிருந்து வேந்து உருவாகியிருக்கலாம் என்பதற்கு கூடுதல் வலுசேர்க்கின்றது.

 வேளிர்களுக்கு வேந்தர்கள் மேலாண்மையாட்சி சுமையாகவே இருந்திருக்கிறது என்பதற்கு "வம்ப வேந்தர்” (புறம்:345) என்னும் சொல்லாடல் உணர்த்துகின்றது. அவர்கட்க்கு மகள் மறுத்தலும் நிகழ்ந்திருக்கிறது. (தொல்.புறத்திணை: 77) வேளிர்குடியாட்சியும் வேந்தர்களுக்கு இடையூறாக பன்னெடுங்காலம் தொடர்ந்து இருக்கிறது என்பதை 'பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் / கொல்குறும்பு இல்லாத நாடு.( குறள்: 735) எனும் குறள் வெளிப்படுத்துகிறது.

கடைச்சங்க இலக்கியங்களில் வேளிரும் வேந்தரும் இணைத்தேப் பேசப்படுகின்றனர். வேந்தரும் வேளிரும் பின்னர் வந்து பணிய’( பதிற்று:88) இருபெரு வேந்தரோடு வேளிர் சாய’( மதுரை:55) “பதினோரு வேளிரொடு வேந்தர் சாய”(அகம்:246) வெல்போர் வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து (பதிற்று:49) பணைகெழு வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து”(பதிற்று: 30) சங்ககாலத்திய பாடல்களில் இருபது வேளிர்கள் குறிக்கப்படுகின்றனர்.” (வ. குருநாதன்: 2001)

கடைச்சங்க காலத்திய நாடுகளின் எல்லைகளை அறுதியிட்டு தெளிவாக்க இயலாததால் அந்த வேளிர்கள் எந்தெந்த வேந்தர்களின் மேலாண்மைக்கு உட்பட்டிருந்தனர் என்பதை விவரிக்க இயலாது. வேந்தர் ஆட்சிகளையும் அதன் எல்லைகளையும் வரையறை செய்ய பலமுயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அது தொல்லெச்சங்களின் மூலம் இறுதி வடிவம் கொள்ளவில்லை

குலம் தோன்றுவதற்கு நிலம் எனும் புலமே காரணம். நிலப்பரப்பு சார்ந்த குடிகளின் ஒருங்கிணைவாக ஒழுங்கமைந்த கும் திடமான குருதி உறவான குடியில்  ஏற்பட்ட முதல் நெகிழ்ச்சி எனலாம். குலம் குருதி உறவுகளினால் குடிகளை பேணிக்காக்கின் உறுப்பாகவே இருந்தன. முடியாட்சி அதிகாரத்தில் குருதிவழிப்பட்ட வலுவான அமைப்பிற்குள் குடிகளின் கணமாக குலம் திரட்சிகண்டது. குலப்பிரிவுகள் தோன்றின. குடிகளும் பல குடிகளாகப் பிரிந்தன. பெருநிலப்பகுதியைக் கட்டமைக்க அடுத்தடுத்து விரவிய குருதிவழி குடிகளின் ஒருங்கிணைவு குலமாக அறிவித்திக்கொண்டது. காவேரிப் படுகையிலிருந்த குருதிவழிப்பட்ட பத்துக் குடிகள் தங்களைச் சோழர்குலமாக அறிவித்துக்கொண்டது. வைகைப்படுகையில் இருந்த ஐந்து குடிகள் தங்களைப் பாண்டிய குலமாக அடையாளப்படுத்திக் கொண்டது. குறிப்பிட்ட நிலப்பரப்பிற்குள் தோன்றிய குலம் அதில் உள்ள முன்னோடி ல்லது அதிகாரம் மிக்க குடியின் பெயரால் வழங்கப்பட்டது எனலாம்.

காவேரிப்படுகையின் பத்து சோழச் சிற்றரசுகள் இருந்தன என்பது சிலப்பதிகாரத்தின் வழி அறியவருகிறது. "நேரிவாயில் நின்று நெடுங்கிள்ளி/ வேர் ஒன்பது சோழர் வேற்றரசு விலக்கி/ சேரன் செங்குட்டுவன் சேவடிச் சூட்டினான் (சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம், அம்பலக் கதையுரைத்த காட்சி. செய்யுள் எண் : 26–28 ) சோழக்குடிகள் பத்து இருந்திருக்கின்றன. இதில் முதுகுடி அல்லது பலம் கொண்டக்குடி வேந்தாக எழுச்சி பெற்றிருக்கலாம்.

ஒன்பதுகுடிகளின் வேளிர்த் தலைமையிடம் எது என இறுதியான ஆய்வு முடிவுகள் இதுவரை எட்டப்படவில்லை. ஆனால் சங்கப்பாடல்களின் மூலம் குடந்தை (பழையாறை) நீண்ட நெடுங்காலமாக சோழக்குடி தலைமையிடமாக இருந்ததை அறியலாம்.சங்கப்பாடல்களில் குடந்தை சோழர்களோடு இணைத்துப் பேசப்படுகிறது. “குடந்தையம் பெருஞ்சோற்று அட்டிளம்”(அகம்:60) ’சோழர் நாடு தரு நிதிய’(அகம்:277), ’குடந்தை நெடுமரத்து வண்டார்பு ஈயும்’(நற்றிணை:379), ’குடவாயிற் பிறந்தக் கோவே’(புறம்:39),’கமரக்குளர்க் கீண்டுநீர் காட்டும் குடந்தை நகர்’(பழமொழி:4)

எனவே குடந்தையை (பழையறையை) உறைவிடமாக் கொண்டு ஒரு சோழக்குடி சங்காலத்திலியிருந்தது எனக்கூறமுடியும். பின்னாளில் அக்குடியே மீண்டெழுந்து சோழப் பெருவேந்தர் வழியைத் தொடர்ந்தனர் எனலாம். அது விசயாலயச்சோழன் தொட்டுத் தொடர்ந்த இடைக்காலச் சோழர் வரலாற்றுக்கு அடிப்படையானது.

இந்தியாவின் இடைக்கால வரலாற்றில் தொடர்ச்சியாக 400 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த பெருமைக்குரிய வம்சம் சோழப் பேரரசு (பிற்காலச் சோழர்கள்) ஆகும். இவர்களது ஆட்சிக்காலம் கி.பி. 850 முதல் கி.பி. 1279 வரை மொத்த சுமார் 430 ஆண்டுகள். விசயாலய சோழன் தொடங்கி, முதலாம் ஆதித்தன், முதலாம் பராந்தகன் எனத் தொடர்ந்து, முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரன் காலத்தில் பேரரசின் உச்சத்தை அடைந்து, மூன்றாம் இராஜேந்திர சோழன் காலம் வரை (கி.பி. 1279) இந்த வம்சம் தொடர்ச்சியாக ஆட்சி செய்தது. அதற்கு சைவ வைதீகமும் கூற்றாக்க அதிகாரமும் அடிப்படியாகின.

சங்ககால வேள்விக்குடியிலிருந்து தொடங்கி, பல்லவர் காலத்தில் பிரமதேயம் உருவாகி, சோழர் காலத்தில் அது சைவ வைதீக சடங்கு அரசியலின் அடிப்படையாக உருமாறியது. பிராமணர்களுக்கும் திருக்கோவில்களுக்கும் கொடைகள் வழங்கி, தன் வழியாக சைவ சடங்கு அரசரின் சட்டபூர்வ ஆட்சியையும் உறுதிசெய்தது. அதுவே தொடர்ச்சியான ஆட்சியை செலுத்தும் அதிகாரத்தையும் வழங்கியது எனலாம்.

சைவசமயம், வைதீகச் சடங்கு அமைப்பாக திரள்வதற்கு ஆகமங்கள் அடிப்படையாகின. ஆகமங்கள் என்பது சைவம், வைணவம், சாக்தம் ஆகிய வழிபாட்டு முறைகளை விவரிக்கும் தந்திரகால நூல்கள். சைவ ஆகமங்கள் மொத்தம் 28 “சைவ ஆகமங்கள்” என பாரம்பரியத்தில் சொல்லப் படுகின்றன. இவற்றில் பல பழந்தமிழ் நாட்டில் (காஞ்சி, சோழநாடு) நடைமுறையில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. காமிகம், கரணாகமம் போன்ற சைவ ஆகமங்கள் பல்லவர்–சோழர் காலத்திலேயே (6–10 CE) உறுதியாகப் பயன்பாட்டில் இருந்தன. காமிகம் ஆரம்ப சடங்கு வழிகாட்டியாகவும், கரணாகமம் பின்னர் சோழர் கால சடங்கு அரசியலின் அடித்தளமாகவும் விளங்கியது. இவை பிராமண ஊர் உருவாக்கத்துடன் நிலைத்து வளர்ந்தன.

 

ஆசிரியர்

நூல் / கட்டுரை

மேற்கோள் வரி (தமிழாக்கம்)

பக்கம் எண்

பெர்ட்டன் ஸ்டெயின் (Burton Stein)

Peasant State and Society in Medieval South India (1980)

பல்லவர்களும் சோழர்களும், பிரமதேயக் கொடைகளின் மூலம் பிராமணர்களுடன் நிலையான கூட்டுறவை ஏற்படுத்தினர்… இதனால் அரசரின் அரசியல் அதிகாரம் புனிதமாக்கப்பட்டது.”

பக். 109–110

The State and Agrarian Order in Medieval South India (1996)

சோழ மன்னராட்சியின் சட்டப்பூர்வம் பிராமணிய சடங்குகள், குறிப்பாக ஆலயத்தை மையமாகக் கொண்ட சைவ ஒழுங்கு வழங்கிய புனித அதிகாரத்தின் மேல் தங்கியது.”

பக். 165

அலெக்சிஸ் சாண்டர்சன் (Alexis Sanderson)

The Śaiva Age — Genesis and Development of Tantrism (2009)

சைவத் துறையில் நிர்பீஜ தீட்சை அரசர்களை தினசரி சடங்கு கடமைகளிலிருந்து விடுவித்தது; மண்டல தீட்சை அவர்களை வர்ணாசிரம தர்மத்தின் காப்பாளர்களாக ஆக்கியது…”

பக். 255–256

Śaiva Religion among the Khmers (2012)

சைவ முறைப்படி நடந்த ராஜ்யாபிஷேகம், மன்னனை தர்மத்தின் உச்ச பாதுகாவலராக மாற்றியது; இதன் மூலம் அவரது ஆட்சிக்கு சடங்கு சட்டபூர்வம் கிடைத்தது.”

பக். 74

நொபுரு கரஷிமா (Noboru Karashima)

)

South Indian History and Society (1984)

பிரமதேயக் கிராமங்கள் சோழ அரசியலின் கட்டமைப்பின் அடிப்படையாக இருந்தன. சபை மூலமாக பிராமணர்கள் நிலம், நீர்வளங்கள், நீதித்துறை ஆகியவற்றை கட்டுப்படுத்தினர்…”

பக். 45–46

Towards a New Formation (1992)

சடங்கு, அரசியல், பொருளாதாரம் ஆகியவை பிரமதேயமும் ஆலயமும் வழியாக பிரிக்க முடியாதவாறு இணைக்கப்பட்டிருந்தன…”

பக். 31

பி. என். சுப்பிரமணியம் (B.N. Subrahmanyam)

Brahmadeyas in South India (1966)

சோழ மன்னர்கள் பல பிரமதேயங்களை சைவ ஆலயங்களுக்கு அளித்தனர். இதனால் பிராமணர்கள் சடங்கு மட்டுமல்லாமல் பொருளாதார அதிகாரங்களின் காவலர்களாகவும்

பக். 27

 

மேற்குறித்தவைகள் இராசேந்திரசோழனின் படையெடுப்புகளுக்கான அடிப்படை எவை என அறிய உதவும் காரணிகளாகும். சோழர் அரசு குடியாட்சிகளை மேலண்மை செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருந்ததே தவிர நேரடி அரசு நிர்வாகத்தைப் பகுதி சார்ந்த குறுநில ஆட்சியாளர்களே கொண்டிருந்தனர். அவர்கள் பகுதி சார்ந்த பண்பாடுகளில், குடிவழி சடங்குகளில் வேறுபட்டிருந்தாலும் சைவ சமயத்தால் இணைக்கப்பட்டிருந்தனர்.

இடைக்கால வரலாற்றில் சைவ சமயம், சந்தேகத்திற்கு இடமின்றி, இடைக்காலத்தின் ஆரம்ப காலகட்டத்தில் அரச ஆதரவைப் பெற்ற மத அமைப்புகளில் மிகவும் வெற்றிகரமான ஒன்றாக இருந்தது. இது மிகவும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பல சிறுதெய்வ வழிபாடுகள் சைவத்தால் உள்வாங்கப்பட்டன, மீதமுள்ளவை சைவத்துடன் சுதந்திரமாக செழித்து வளர்ந்தாலும், சைவ சமயத்தின் வழியில் தங்களை மாற்றியமைத்துக் கொண்டன.

“இந்தியாவில் இடைக்காலத் தொடக்கத்தில் (கி.பி. 5–13) சைவ மரபுகள் அரசியலுடன் இணைந்து “மைய அதிகாரம்” (authority of the centre) சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் ஊடுருவியது என்று அலக்ஸிஷ் சன்டர்சன் வாதிடுகிறார். இதன் அடித்தளம் பிராமணிய சமூக ஒழுங்கான வர்ணாசிரம தர்மம் அதனுடன் சைவ மந்திர மார்க்கம் (tantric saivism) ராஜதீட்சை, அரசமரபுக் கோவில்கள், ஆகமப் பொதுமைப்படுத்தல் மற்றும் நிலக்கொடை-பாசன–பிராமணக்குடியேற்ற ஏற்பாடுகள் வழியாகக் கைவசப்படுத்திக் கொண்டது.” (Sanderson 2009: pp. 252–280)

ஏழாம் நூற்றாண்டு முதல், சைவம் அரசர்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், தென்கிழக்கு ஆசியாவிலும் சைவ பிராமண குருக்கள் அரசர்களுக்கு ராஜகுருவாக நியமிக்கப் பட்டனர். இந்த குருக்கள் அரசர்களுக்கு சைவ தீட்சை (சிவமண்டல தீட்சை) அளித்து, அவர்களின் ஆட்சிக்கு மத அங்கீகாரத்தையும், சட்டபூர்வமான மதிப்பையும் கொடுத்தனர். மன்னர்கள் "வர்ணாஸ்ரமகுரு" அல்லது இராஜகுருவாக நியமிக்கப்பட்டனர். இதன்மூலம், மன்னர்களின் அதிகாரம் மேலும் பலப்படுத்தப்பட்டது. சிவனின் பெயரைத் தாங்கிய சிறப்புப் பெயர்களை வைத்துக்கொண்டனர்.

தீட்சை பெற்றாலும், மன்னர்கள் சைவதர்ம நூல்களில் உள்ளபடி சிவபெருமானின் பக்தராகச் சில அடிப்படைக் கடமைகளை மட்டுமே செய்ய வேண்டியிருந்தது. இந்தக் கடமைகள், சைவ மதத்தையும் அதன் நிறுவனங்களையும் ஆதரிப்பது, பொது இடங்களில் நடைபெறும் முக்கியமான மத விழாக்களில் கலந்துகொள்வது, மற்றும் அதற்குப் புரவலராக இருப்பது போன்றவை.

சைவ சமயம் வெற்றிகரமாக இருந்ததற்கான அடிப்படைக் காரணம், அரச ஆதரவாளர்களைக் கவரும் வகையில் அதன் சடங்குகள் மற்றும் கோட்பாடுகளை விரிவுபடுத்தி, மாற்றியமைத்துக் கொண்டதுதான். இதன் மூலம், ஆரம்ப இடைக்கால காலகட்டத்தில் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நடைமுறைகளின் முக்கிய அம்சங்களை சட்டப்பூர்வமாக்கி, வலுப்படுத்தி, ஊக்குவித்தது.

இந்த அம்சங்கள் பின்வருமாறு:

1.       குறுநில அரசுகள், நாடுப்பிரிவுகள். தனியூர் மற்றும் வளநாடு மட்டங்களில் பல புதிய அரச வம்சங்கள் தோன்றி, மன்னராட்சி அரசாங்க முறையின் கூறாக்க அதிகாரத்தை அதிகரித்தது.

2.       முக்கிய மையப் பகுதிகளில் அரச கோயில்களும், சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ளூர் தலைவர்களால் நிறுவப்பட்ட சிறிய கோயில்களும் என நில உடைமை கொண்ட கோயில்களின் பெருக்கம் அதிகரித்தது. இது கிராமப்புற பொருளாதாரத்தையும், சோழஅரசின் சடங்கு அதிகாரம் புதிய பகுதிகளுக்குப் பரவுவதையும் ஊக்குவித்தது.

3.       வணிக மையங்கள் மற்றும் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நிறுவப்பட்ட குடியேற்றங்கள் என புதிய நகர்ப்புற மையங்களின் பெருக்கம் ஏற்பட்டது.

4.       கிராமங்களை உருவாக்குதல், நிலங்களை மீட்டெடுத்தல், நீர் தேக்கங்கள், கிணறுகள் மற்றும் பிற பாசன வசதிகளை அமைத்தல் மூலம் வேளாண்மைத் தளம் விரிவடைந்தது. இதன் விளைவாக, மக்கள் தொகையும் சீராக அதிகரித்தது.

5.       இந்த விரிவாக்கத்தால் சமூகத்தில் கலாச்சார மற்றும் மத ஒருங்கிணைப்பு சாத்தியமானது.

மேற்கண்டவாறு அரசும் சமயமும் ஆட்சியாளர்களும் இடைக்கால வரலாற்றில் இருந்தனர் என்பதை சண்டர்சன் விளக்குகிறார்.( Alexis Sanderson:2009),

தென்னிந்தியாவின் இடைக்கால அரசியல் வரலாறு, மையப்படுத்தப்பட்ட ஒரே ஆட்சி முறை என்று மட்டும் பார்க்க முடியாது. பல்வேறு கல்வெட்டுகள், வரலாற்றாசிரியர்களின் ஆய்வுகள், மற்றும் சமய ஆதாரங்கள் காட்டுவது, இந்த அரசுகள் கூறாக்க இறையாண்மை (segmentary sovereignty) மற்றும் சடங்கு இறையாண்மை (ritual sovereignty) ஆகிய இரு அம்சங்களின் அடிப்படையில் இயங்கின.( Burton Stein:1980), Alexis Sanderson:2009, Noboru Karashima :1984)

தென்னிந்திய இடைக்காலத்தில் பல்லவர், சோழர், சேரர், பாண்டியர், கங்கை, ஹோய்சாளர் ஆகிய அரசுகள் அனைத்தும் கூறாக்க அரசியல் மற்றும் சடங்கு இறையாண்மை அடிப்படையில் இயங்கின.மன்னன் தான் சடங்கு மையம்; உள்ளூர் சபைகள், வணிகச் சங்கங்கள், குறுநில மன்னர்கள் நிர்வாக மையம்;சைவ ஆகமச் சடங்குகள் அரசை புனிதமாக்கிய கருவி. இதனால், தென்னிந்திய இடைக்கால அரசுகளை ஒருங்கிணைக்கப் பயன்படுத்திய மிகப் பெரிய கருவி சடங்கு என்பதையும், ஆட்சியின் இயல்பு கூறாக்கத்தன்மை கொண்டது என்பதையும் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.

தென்னிந்திய இடைக்காலத்தில் கூறாக்க / சடங்கு இறையாண்மை அரசுகள்

அரசு

காலம்

கூறாக்க (Segmentary) அமைப்பு

சடங்கு இறையாண்மை பங்கு

சான்றுகள் / மேற்கோள்கள்

பல்லவர்

6–9ம் நூற்றாண்டு

காஞ்சி மையம்; நாடு–ஊர்–சபை சுயாட்சியுடன்

சைவ–வைணவ ஆலயங்களுக்கு நிலத் தானம்; ஆகம சடங்கு வழியாக அரசர் அதிகாரம்

SII Vol. II; Stein 1980, p.98

சோழர்

9–13ம் நூற்றாண்டு

மன்னன் மையத்தில் சடங்கு மன்னன்; புறப்பகுதிகளில் நாட்டார், ஊரார், வணிகச் சங்கங்கள்

சைவ ஆகமச் சடங்கு ஆலய நன்கொடைகள், பிரமதேயங்கள்

SII Vol. VI, XII; Stein 1980, pp.115–120; Sanderson 2009

சேரர்

9–11ம் நூற்றாண்டு

கடலோர வணிகம் சார்ந்து; உள்ளூர் தேசங்கள் சுயாட்சியுடன்

சைவ–ஜைன ஆலயங்களுக்கு நன்கொடை; வணிகச் சடங்குகள்

TAS Vol. IV; Karashima 1984, p.71

பாண்டியர்

13–16ம் நூற்றாண்டு

வளநாடுகள் மற்றும் சபைகள் சுயாட்சியுடன்; அடிக்கடி கிளர்ச்சி

மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயக் கொடைகள்; சைவ சடங்கு மையம்

ARE 1911–12 Nos.45, 67; K.A. Nilakanta Sastri, The Pandyan Kingdom

கங்கை அரசுகள் (கொங்குநாடு)

9–11ம் நூற்றாண்டு

சோழரின் கீழ் இருந்தும், சுயமாக நிலத் தானங்கள் செய்தனர்

சைவ–ஜைன ஆலயங்களை மையமாகக் கொண்டு சடங்கு பங்கு

SII Vol. XII; ARE 1926–27 No.156

ஹோய்சாளர்

12–14ம் நூற்றாண்டு

நாடு–நாடு சுயாட்சியுடன்; சோழ–கங்கை மரபின் தொடர்ச்சி

சைவ, வைணவ, ஜைன ஆலயங்களுக்கு நன்கொடைகள்; தர்மசக்தி அரசியல்

Epigraphia Carnatica Vol. V; Stein 1980, p.131

சாளுக்கியர் (மேல்சாளுக்கியர்)

6–8ம் நூற்றாண்டு

பாட்டடக்கல், ஐஹோல், பதாமி மையம்; உள்ளூர் மண்டல தலைவர்கள் சுயாட்சியுடன்

சைவ–வைணவ ஆலய கட்டுமானம்; அரசர் சடங்கு மூலம் அதிகாரம்

Epigraphia Indica, Vol. XII; D.C. Sircar 1966

சாளுக்கியர் (கீழ்சாளுக்கியர்)

10–12ம் நூற்றாண்டு

சோழ–சாளுக்கியர் எல்லைப் பிரதேசங்களில் அதிகாரப் போட்டி; பகுதிநிலைத் தலைவர்கள் சுயமாக செயல்பட்டனர்

சைவம்–ஜைனம் இரண்டுக்கும் ஆதரவு; கோயில்–சடங்கு வழியாக ஆட்சியை நிலைநிறுத்தினர்

South Indian Inscriptions Vol. XV; Burton Stein 1980

இராஷ்டகூடர்

8–10ம் நூற்றாண்டு

பெரிய பேரரசு; பல்லவர்–சாளுக்கியரை அடக்கி, ஆனால் உள்ளூர் நாட்டு–தேசங்கள் சுயாட்சியுடன்

எலோரா கைலாசநாதர் ஆலயம்; சைவ–ஜைன–பௌத்தம் ஆகிய அனைத்துக்கும் நன்கொடை

Epigraphia Indica Vol. XX; K.A. Nilakanta Sastri 1955

மேற்கு கங்கை (மைசூர் பகுதி)

9–11ம் நூற்றாண்டு

சோழர் கீழ் இருந்தும் சுயாட்சியுடன்

சைவ–ஜைனக் கோயில்கள்; கல்வெட்டுகள் சடங்கு பங்கு உறுதிப்படுத்துகின்றன

SII Vol. XII; ARE 1926–27

கிழக்கு கங்கை (கலிங்கம்)

11–13ம் நூற்றாண்டு

சோழர் தாக்கத்துடன், ஆனால் சுயமாகப் போராடினர்

சைவ ஆலயங்கள் (ஜகந்நாதர் கோவில் முன்னோடி நிலை); சடங்கு அடையாளம்

South Indian Inscriptions Vol. XVIII; Hermann Kulke 1997

 

இந்த நிலையில் இராசராசசோழன் காலத்தில் நடுநாயக இறையண்மை அதிகாரத்தை நோக்கி நகர்ந்தது எனலாம். “கூறாக்க இறையாண்மை”யை தூக்கியெறிந்து நேரடி இறையாண்மைக்கான முயற்சி இராசராசன் காலத்தில் தொடங்கியது. இதற்கு சைவசமய வைதீக சடங்கு அரசியல் தீவிரப் படுத்தப்பட்டது. பெருங்கோவில் தோற்றுவிக்கப் பட்டது. நிலம் அளக்கப்பட்டது. வலங்கை இடங்கைப் பிரிவுகள் உறுதியான நிலையை எட்டின. வணிசங்கள் ஒழுங் குறுத்தப்பட்டு, திருக்கோவிலுக்கு தீவிரக் கொடையாளராகப்பட்டனர்.

ராஜராஜன் மற்றும் ராஜேந்திரனின் கல்வெட்டுகள், இடங்கை (கைவினைஞர் குழுக்கள்) மற்றும் வலங்கை (விவசாயிகள்) கோவில்களுக்கு நன்கொடைகள் அளித்ததைக் காட்டுகின்றன, இது அவர்கள் தனித்துவமான சமூக-பொருளாதாரப் பிரிவுகளாக ஒருங்கிணைந்ததைக் குறிக்கிறது.(நெபுரு கரிஷ்மா:1984.ப.67) குறுநில அரசுகளை ஒன்றடக்கிய வளநாடுகள் தோற்றுவிக்கப் பட்டன. அதுவரை இருந்த மேலாண்மை அதிகாரம் புதுவடிவம் எடுத்தது. புதியதாகத் தோற்றுவிக்கப்பட்ட பிரமதேயங்களும் சமய ஆட்சியதிகாரத்தை முன்னிலைப் படுத்துவதாக அமைந்தது. சமய அரசியல் அதிகாரம் பிராமண ஒழுங்கிற்குள் நிறுவப்பட்டது.

ஆய்வாளர்

காலச் சட்டம் / பரப்பு

அளவீட்டு கூற்று (எண்ணிக்கை/அளவு)

பிரதேசம்

மூலம் / குறிப்பு

கவனக் குறிப்புகள்

ஒய். சுப்பராயலு

இராஜராஜன்-I (985–1014)  காவிரிப் படுகை

காவிரி ப்படுகை ப்ராமதேயங்கள்-250; 13ம் நூற்றாண்டு இருந்த கூடுதலில் இது பாதியாகும்

காவிரிப் படுகை (சோழநாடு)

Subbarayalu – Review of Agrarian Studies (கரஷிமா தரவு சுருக்கம்)

இணைய நேர்காணல் சுருக்க வாக்கியம்; பகுதி/காலப் பரவல் மதிப்பீடு

நோபொரு கரஷிமா

10–12-ம் நூற்றாண்டு  சோழநாடு

கிராமப் பெயர்களில் 1,300;அதில் ப்ராமதேயம்  250; தேவதானம்-50; நகரம் -25

சோழநாடு (காவிரி டெல்டா, தொண்டைநாடு)

Karashima – epigraphic datasets; Subbarayalu வழி சுருக்கம்

தரவுத் தொகுப்பின் உறுப்பெண்ணில்; முழு நாட்டுக்கான 'மொத்தம்' அல்ல

பர்டன் ஸ்டெயின்

c.1300 வரை விநியோகம் தமிழ்நாடு

எண்ணிக்கையை விட 'விநியோகம்' மீது கவனம் – Map IV-1; Table VII-1

தமிழ்நாடு (மண்டலம்/தாலுகா பரவல்)

Stein – Peasant State and Society in Medieval South India (OUP)

ராஜேந்திரர் காலத்திற்கான 'மொத்த கணக்கு' தரப்படவில்லை;

 

“இராசராசன் காலத்தில் 250க்கும் மேற்பட்ட பிரமதேயங்கள் இருந்தன. அவை அதிக அளவில் சோழமண்டலத்தில் அதாவது காவேரிப்படுகையில் இருந்தன. ஒவ்வொரு பிரமதேயத்திலோ அல்லது அதற்கு அருகிலோ ஒரு பாடல் பெற்ற கோவில் இருந்தது”. (ஓய்.எஸ்.சுப்ராயலு:2024)

இந்த சைவசமய பிராமண ஒழுங்கமைவு ஆன்மீக அதிகார அரசியல் வலைப்பின்னலில் சோழ அரசின் இறையாண்மை அதிகாரத்திரட்சி இராசராச சோழன் காலத்தில் வளர்ச்சிக் கண்டது. இடைக்கால வரலாற்றில் இந்தியா முழுவதும் தெய்வீக அரசியல் அதிகார ஆட்சி தான் நடைபெற்றது.

பிரமதேயங்கள் துணையுடன் வளநாடுகள் தோற்றுவிக்கப்பட்டு, கூறாக்க அதிகாரம் கொண்ட சிற்றரசுகளின் எல்லைகள் மறுவரையக்குள்ளானது. அந்த வளநாடு களுக்குள் கட்டுண்ட சிற்றரசுகளின் அதிகாரத்தைக் குலைப்பதற்காகவே தோற்று விக்கப்பட்டன. வளநாடுகளின் பெயர் சோழ அரசரின் பெயர், விருதுப் பெயராலேயே அழைக்கப்பட்டது.

 குலம்-குடி, பிராந்தியம் வேறாக இருந்தாலும் அங்கு நிலைகொண்ட அரசதிகாரம் சமயச்சடங்கு அரசியலதிகார வலைப்பின்னலுக்குளிருந்தது. இது குறுநில அரசர்களையும் உள்ளிழுத்துக் கொண்டது. மேலும் இது வளநாடுப்பிரிவுகளை இராசராசன் தோற்றுவிக்க ஆதரமாகவும் அடிப்படையும் அளித்தது. பல குறுநில அரசுகள் இருந்தன என்பதற்கு சங்க காலம் முதல் சான்றுகள் உண்டு.

வேந்தர்களுக்கும் வேளிருக்குமான நெடுங்கால முரண்கள் சைவ சமய வைதீக சடங்கு அரசியல் அதிகாரகத்தால் நீர்த்துப்போனதோடு சடங்கு இறையாண்மையை தோற்றுவித்து வேந்தர்கள் வளர்க்கப்பட்டனர். குறிப்பாக சோழர்கள் அதில் முன்னோடிகளானார்கள் என்பதற்கு இராசராசன் காலம் சான்று. அது சாத்தியப் பட்டதற்கு பிரமதேயங்களே அடிப்படையாகின. சைவசமய வைதீக அரசியல் அப்படியே நீடித்தது. கூறாக்கத்தில் நிர்வாகப்பகுதிக்காக அரசுகளுக்கிடையேப் போர்கள் நிகழ்ந்தாலும் சடங்கு இறையாண்மையை தக்கவைக்கப்பட்டது. ஆனால் எதனால் அந்த சடங்கு இறையாண்மை தோற்றவிக்கப்ப்ட்டதோ அந்த சைவசமய வைதீக சடங்குமுறை எவ்வித மாற்றமோ இடையூரோ இல்லாமல் தொடர்ந்திருந்தது.

நிர்வாக இறையாண்மையில் நெருக்கடியும் இடையூறும் தோன்றும் போதெல்லாம் புதிய வளநாடுகள் தோன்றலாயின, இதனால் வளநாடு எண்ணிக்கைக் கூடுதலானது. இராசராசன் காலத்தில் 10 ஆக இருந்த எண்ணிக்கை இராசேந்திரன் காலத்தில் வளர்ச்சியடைந்து பிற்காலத்தில் 50 வளநாடுகளாகின.

சைவசமய ஆகம சடங்கு இறையாண்மையை தக்க வைப்பதில் அரசரால் தோற்று விக்கப்பட்ட திருக்கோவில்களுக்காக கொடைகள் வழங்குவதில் பெரும் பங்காற்றியவை வணிகக்குழுக்களாகும். சோழர்காலத்தில் செல்வாக்குடன் வணிகக் குழுக்கள் இருந்தன. இவை வணிகநோக்கத்தில் இந்த வகையான இறையாண்மை மீது வணிகக்குழுக்கள் ஆர்வம் காட்டின என்பதை அவைகளின் கொடைகளின் வழி அறிய முடிகிறது.இதில் போட்டிகளும் நிலவின, அதன் விளைவாக முரண்பாடுகளும் தோன்றின.

சோழ பேரரசு (கிபி 9–13ம் நூற்றாண்டு) இந்தியப் பெருங்கடல் வணிக வலையமைப்பின் மையமாக இருந்தது. குறிப்பாக 10-ம் நூற்றாண்டு (ராஜராஜ சோழன் எழுச்சிக்கு முன்பட்ட காலம்) வணிகக் குழுக்கள் பல்வேறு சமயச் சார்புகளுடன் இணைந்து செயல்பட்டன. வணிகக்குழுக்களின் சமய அடையாளம் அவர்களின் பொருளாதார நடவடிக்கைகளுடன் நெருக்கமாகக் கலந்திருந்தது. ஆலயங்கள், மடங்கள், விகாரைகள் ஆகியவை வணிகக் குழுக்களுக்கு நன்கொடை வழங்கும் இடங்களாகவும், வணிகர்களின் சமூகச் சட்டப்பூர்வத்தை உறுதிப்படுத்தும் மையங்களாகவும் இருந்தன

    சோழர்கால வணிகக் குழுக்கள் – மதச்சார்பு & சச்சரவுகள்

 

வணிகக் குழு / பிரிவு

முக்கிய மதச்சார்பு

சச்சரவின் தன்மை

கல்வெட்டு / வரலாற்றாசிரியர் ஆதாரம்

ஐநூற்றுருவர்

சைவ ஆலய நன்கொடைகள்

புத்த/சமண வணிகர்களோடு போட்டி; ஆலய நன்கொடை சாசன உரிமைகள்

ARE 111/1931–32; SII XII, no. 20

அஞ்சவண்ணம்

சைவம் + புத்த ஆதரவு

நாகப்பட்டினம் புத்தவிகார நன்கொடைகள் சோழ அரசின் சைவ முன்னுரிமையோடு முரண்பட்டன

Nagapattinam Buddhist Inscription (ARE 92/1933–34); Gunawardana (1971, p.201)

நானாதேசி

வெளிநாடுகளில் உள்ள மதங்களுக்கு ஏற்ப (சிறப்பாக புத்தம்)

இலங்கை/தென்கிழக்காசிய புத்த விகார ஆதரவு – சோழ அரசின் சைவ ஆட்சியோடு முரண்பாடு

Karashima (1984, p.71)

வலங்கை–இடங்கை கூட்டு சந்தை சச்சரவுகள்

சைவம் vs வைணவம் / புத்தம்

சந்தை நிறுத்தம், வன்முறை, ஊர்வலத் தடைகள்

திருவாரூர், காஞ்சிபுரம் கல்வெட்டுகள்; Mahāvamsa (Ch. LIV)

 

வணிகக் குழுக்கள் ஒருங்கிணைந்த வலையமைப்புடன் இருந்தாலும் இடையே போட்டியும் சச்சரவுகளும் நிலைத்திருந்தன (கே.ஏ.நீலகண்ட சாஸ்த்திரி:1955, p. 518). இந்தப் போட்டிச் சச்சரவுகளுக்கு பொருளியல் தன்னலமே அடிப்படையாகும். அது சமய வழியாக வெளிப்பட்டது எனலாம். இலங்கையிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் வணிகக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடுகள், சோழர் படையெடுப்புகளுக்கே அரசியல்–பொருளாதார காரணமாக அமைந்தன (Hall, 1980, p. 60). அன்றைய முடியாட்சியில் நிலவிய சமய சடங்கு இறையாண்மையே அரசியல் காரணங்களுக்கு அடிப்படை. அயலக வணிகத்தில் தமிழ் வணிகக் குழுக்கள் பெற்ற செல்வாக்கு, அவர்களுக்கிடையே தொடர்ந்த போட்டியையும் முரண்பாடுகளையும் தவிர்க்க முடியாத ஒன்றாக்கியது. சுங்க உரிமை, அரசியல் ஆதரவு, மத ஆதரவு போன்ற காரணிகள் இந்தப் போட்டியைத் தூண்டின.

அயலகப் பகுதிகளில் சில குழுக்கள் புத்தமதக் காப்பகங்களை ஆதரித்தனர்; மற்றவர்கள் சைவ ஆலயங்களுக்கு நிதி வழங்கினர். உதாரணமாக, நாகப்பட்டினத்தில் மணிகிராமம் புத்தவிகாரத்திற்கு நிதி அளித்த போதும், அஞ்சு வண்ணம் சைவ ஆலயங்களுக்கு கொடைகள் அளித்தது. இது வணிக–மத போட்டியை உருவாக்கியது (Gunawardana, 1979, p. 180). சில கல்வெட்டுகள் அஞ்சு வண்ணம் மற்றும் மணிகிராமம் ஒரே துறையில் சுங்க உரிமைக்காக மோதியதை காட்டுகின்றன. சோழ அரசின் ஆதரவைப் பெற்ற குழுக்கள் முன்னுரிமை பெற்றனர் (Karashima, 2009, p. 142).

வணிகக் குழுக்கள் பெரும்பாலும் கடற்பாதை சுங்கங்களையும் துறைமுகக் கட்டுப் பாட்டையும் பெறப் போட்டியிட்டன. நாகப்பட்டினம், இலங்கைத் துறைமுகங்கள், மேலும் சுமத்ரா மற்றும் மலாய் தீபகற்பம் போன்ற பகுதிகளில் இந்த போட்டி தென்பட்டது (Hall, 1980, p. 55).

இதைக்கீழ் கண்டவாறு அட்டவணைப்படுத்தலாம்:

வணிகச் சங்கங்கள்

போட்டி நடந்த இடம்

போட்டியின் தன்மை

கல்வெட்டு / ஆவணம்

ஆய்வாளர் கருத்து

அஞ்சுவண்ணம் – மணிகிராமம்

நாகப்பட்டினம் துறைமுகம்

சுங்க உரிமை, வருவாய் பகிர்வு

தென்னிந்திய கல்வெட்டுகள் (SII), தொகுதி 12, எண் 20 & 34

நோபுரு கரஷிமா (2009, பக். 142) – சுங்க உரிமைக்காக மோதல் ஏற்பட்டது

மணிகிராமம் – அஞ்சுவண்ணம்

நாகப்பட்டினம்

மத ஆதரவு வேறுபாடு – மணிகிராமம் புத்தவிகாரத்திற்கு நிதி, அஞ்சுவண்ணம் சைவ ஆலயங்களுக்கு நிதி

ஆண்டு கல்வெட்டு அறிக்கை (ARE) 1931–32, எண் 111

குணவர்தனா (1979, பக். 180) – வணிக–மத முரண்பாடு தென்பட்டது

அஞ்சுவண்ணம் – நானாதேசி

சுமத்ரா & மலாய் தீபகற்பம்

கடற்பாதை கட்டுப்பாடு, சுங்க சலுகை

SII, தொகுதி 5, எண் 389

கேனத் ஹால் (1980, பக். 55) – “வணிகச் சங்கங்களுக்கிடையேயான போட்டி இயல்பு”

தமிழ் வணிகக் குழுக்கள் – சிங்கள வணிகர்கள்

இலங்கை (மன்னார்க் வளைகுடா, துறைமுகங்கள்)

சுங்கக் கட்டுப்பாடு, துறைமுக வாணிக உரிமை

SII, தொகுதி 3, எண் 205

குணவர்தனா (1979, பக். 180) – தமிழர்–சிங்களர் மோதல் கடுமையாக இருந்தது

அஞ்சுவண்ணம் (சோழ ஆதரவுடன்) – பிற உள்ளூர் வணிகக் குழுக்கள்

கயல்வெளி, பாண்டிச்சேரி

அரசின் ஆதரவால் மேலாதிக்கம் பெற்றனர்

ARE 1908–09, எண் 181

நீலகண்ட சாஸ்திரி (1955, பக். 518) – அரசியல் ஆதரவு போட்டியை அதிகரித்தது

 

சோழர் கால வணிகக் குழுக்கள் வெறும் பொருளாதார அமைப்புகள் அல்ல; அவை சமூக, அரசியல் மற்றும் சமய வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தன. இந்த குழுக்களின் சமயச்சார்பு, சைவ மற்றும் பௌத்த நிறுவனங்களுடன் இணைந்து, அவர்களின் சமூக அந்தஸ்தை வலுப்படுத்தியதுடன், ஒரு நிலையான நிதி அமைப்பையும் உருவாக்கியது. அதே சமயம், அவர்களுக்குள் நிலவிய போட்டி மற்றும் வெளிநாட்டு வணிகர்களுடனான போட்டி, சோழர் வணிகத்தின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருந்தது. இந்த இரட்டைத் தன்மைகள், சோழப் பேரரசின் பொருளாதார பலத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தன என்பது தெளிவாகிறது

இந்தியப் பெருங்கடல் வணிகம் கிமு முதல் கிபி 15–16ஆம் நூற்றாண்டு வரை ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஆகியவற்றை இணைத்த உலகளாவிய பரிமாற்ற வலையமைப்பாக இருந்தது. இந்த வணிகப் பாதை வழியில் அமைந்திருந்த அரசுகள் தங்களின் மத அடையாளங்களை வணிக–அரசியல் உத்திகள் உடன் இணைத்துக்கொண்டன. மதச்சார்பு, ஆலயங்கள், மடங்கள், பள்ளிவாசல்கள் ஆகியவை அரசின் வணிக அதிகாரத்தை சட்டபூர்வமாக்கும் சாதனங்களாகவும், வணிகக் குழுக்களின் சமூக அடையாளமாகவும் இருந்தன

பௌத்தத் துறவிகள் பெரும்பாலும் வணிகர்களுடன் கடல்வழிப் பயணங்களில் ஈடுபட்டனர். இது பௌத்த மதத்தின் பரவலுக்கு வழிவகுத்தது. குறிப்பாக, தென்கிழக்கு ஆசியாவில் பௌத்தத்தின் வளர்ச்சிக்கு இது ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. வணிகக்குழுக்கள் பௌத்த விகாரைகளுக்கும் நன்கொடைகள் அளித்து, தங்கள் வணிக நடவடிக்கைகளுக்கு அவைகளின் ஆதரவைப் பெற்றன.

இந்தியப் பெருங்கடல் வணிகம் (Indian Ocean Trade) கிமு முதல் கிபி 15–16ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு அரசுகளையும், வணிகக் குழுக்களையும், மதச் சார்புகளையும் இணைத்துச் சென்றது. கடல்வழிப்பட்டுப்பாதையில் இருந்த அரசுகள் தங்களின் மத அடையாளங்களை வணிகத்தோடு இணைத்துக்கொண்டு, அரசியல்–அர்த்தசார்பு வலிமையை வளர்த்தன.

புத்தமதம் இந்தியப் பெருங்கடல் வணிக வலையமைப்பின் ஆன்மீக அடையாளமாக இருந்தது. வணிகக் குழுக்கள் தங்கள் சமூகப் பாதுகாப்பையும் மத அடையாளத்தையும் பௌத்த விகாரங்கள் மூலம் நிலைநிறுத்தினர். ஆனால் அரசியல் நிலையற்ற தன்மை, வெளிநாட்டு படையெடுப்பு, மத பிளவுகள் ஆ10-ம் நூற்றாண்டில் புத்தமதம் இந்தியப் பெருங்கடல் உலகில் (India–Sri Lanka–Southeast Asia) மகாயானம் மற்றும் வஜ்ரயானம் செல்வாக்கு மிகுந்த நிலையில் இருந்தது. தேரவாதம் இலங்கையில் மட்டும் உறுதியாக இருந்தது. அரசர்கள் புத்தமத சடங்குகள் மூலம் தங்கள் சட்டபூர்வத்தை நிலைநிறுத்தினர்; வணிகக் குழுக்கள் புத்தமத வலையமைப்புகளின் வழியாக சர்வதேச தொடர்புகளையும் பொருளாதார ஆதரவையும் பெற்றனர் கியவை வணிகக் குழுக்களில் நெருக்கடியை ஏற்படுத்தின.

10-ம் நூற்றாண்டு சோழர் வணிகக்குழுக்களின் மதச்சார்பு பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை, வணிகநோக்குடன் இணைந்த மத அடையாளங்கள் ஆகியவற்றின் கலவையாக இருந்தது. ஆலய நன்கொடைகள், விகாரைகள், பள்ளிவாசல்கள் அனைத்தும் வணிகக் குழுக்களின் பங்களிப்பால் வளர்ந்தன. இது சோழ அரசின் உலகளாவிய கடல்வழி வணிகப் பரவலுக்கு அடிப்படை அமைத்தது.

வட இந்தியாவின் பாலர் பேரரசு புத்த உலகின் மிகப்பெரிய மையமாக இருந்தது (நாலந்தா – உலக வணிக–மத நெட்வொர்க்கின் மையம்). தென்னிந்தியாவின்  சோழர்கள் பெரும்பாலும் சைவம், ஆனால் நாகப்பட்டினம் வழியாக புத்தம் வணிகப்பாதையுடன் உறுதியான பிணைப்பு கொண்டிருந்தது. இலங்கையில்  தேரவாதம் வலுவாக இருந்து, மியான்மாருக்கு மதச்சார்பு பரவியது. தென்கிழக்காசியாவின் ஶ்ரீவிஜயா, சைலேந்திரர், கெமர் ஆகியவை மஹாயானம்–வாஜ்ரயானத்தை அரச ஆதரவுடன் முன்னெடுத்தன. சீனா கடல்வழிப் பரிமாற்றத்தில் புத்தம் சமயத்தின் முக்கிய மென் அதிகாரம் கொண்டதாக இருந்தது

கடாரம் என்பது சோழ கடல் வணிக வலைப்பின்னளில் முக்கியமான இடத்திலிருந்த பெளத்தத்தை அரசு மதமாகக் கொண்ட நாடு. ,அது போன்றே இலங்கை சிங்கள அரசும், கங்கைக் கரையும் துறைமுகமும் கொண்ட பாலர் அரசும் ஆகும். இவைகள் கடல் வணிகத்தில் புத்தமத வலையமைப்புகளாக வணிக வளையத்தை அமைத்தன, சோழர் சைவ–அரசியல் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சிஆகத்தான் இராசேந்திரச்சோழன் படையெடுப்புகளை கூறலாம். ஆனால் கங்கைப் படையெடுப்பை வெறும் புனித நீர் கொணரலாக, ஈழப்படையெடுப்பை பாண்டியர் மணிமுடி மீட்பாக, காடாரப்போரை வணிக நலனாகக் குறுக்கிப் பார்க்கும் பார்வைப் பரவலாக்கப்பட்டுளது.

சோழரசு சைவ வைதீக சடங்கு இறையாண்மையும் கூறாக்க அதிகாரமும் கொண்டு விளங்கியது. மாமன்னன் இராசராசன் காலத்தில் தான் நடுவண் இறையாண்மை அதிகாரத்தை நோக்கி நகர்ந்தது. அதற்கு வளநாடுப் பிரிவுகள்  முதன்மைச் சான்று ஆகின்றன. அதைத் தக்கவைக்க வேண்டியத்தேவை இராசேந்திரசோழனுக்கு நேர்ந்தது. சமணம் வளர்த்த வணிகர்களின் வேளாண் உற்பத்தியில் காட்டிய ஆதிக்கம் முரண்பாடுகளைத் தோற்றுவித்து சைவ -வைணவ பக்தி இயக்கத்திற்கு அடித்தளமிட்டது. வளர்ந்த பக்தியியக்கம் சைவத்தை வைதீகத்தின் கையில் ஒப்படைத்தது எனலாம். இதன் மூலம் பரவலாக்கப்பட்ட பிரதேயங்கள் மீண்டும் வேளாளர் எதிர்பையும் குறுநில அரசுகளின் அதிகாரத்தின் மீதான குறுக்கீடுகளுக்கு எதிரான நிலமையும் வளநாடு பிரிவு எனும் அரசியல் சூழ்ச்சிக்கு வித்திட்டது எனலாம்.

நேரடியாக “பிரமதேயங்களுக்கு எதிராக எழுந்த குரல்” கல்வெட்டில் இல்லை. ஆனால், பெர்ட்டன் ஸ்டெயின், காராஷிமா, கேசவன் வேலுதட், ஜம்பகலட்சுமி போன்ற ஆய்வாளர்கள், 10-ம் நூற்றாண்டு சோழர் காலத்தில் உழவர் சமூகங்களின் அதிருப்தி, ஊர் சபையின் உரிமை இழப்பு, நிலப்பிரச்சினைகள், வணிகக் குழுக்களின் எதிர்வினை ஆகியவை இருந்ததாகச் சுட்டுகிறார்கள். எனவே, இது மறைமுக எதிர்ப்பு எனக் கொள்ளலாம்.

எனவே இராசேந்திரனுக்கு இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து ஆதிக்க அரசியலைத் தொடர பெரும் போர்கள் தேவைப்பட்டது. அப்போர் “புத்தமத வலையமைப்புகள் கட்டுப்படுத்திய வணிக வளையத்தை முறியடித்து” வணிக மேலாதிக்கத்தை நிறுவ புதிய நகரங்கள் புதிய வணிக வலையமைப்பை அமைக்க வேண்டியிருந்தது. வணிகத்தை சைவ வைதீக அரசியலோடு நெருக்கமாக்க தொடுக்கப்பட்ட போர்கள் தான் இராசேந்திரசோழனின் அயலக, கடல்புறப் படையெடுப்புகளாகும். புத்தமத வலையமைப்புகள் கட்டுப்படுத்திய வணிக வளையத்தை முறியடித்து சோழர் சைவ வைதீக அரசியல் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சி” வெற்றிகாரமாக நடந்தது.

திருவாலங்காடு செப்பேடு செய்யுள் - 117 (வடமொழிப்பகுதி)அவனுடைய படைத்தலைவன், தன்னால் வெல்லப்பட்ட அந்த நதியின் கரையில் (கங்கை) வாழ்ந்த அரசர்களைக் கொண்டு, அந்தப் புனிதநதியின் நீரை எடுத்துச் சென்று, அவனுடைய தலைவனான மதுராந்தகனுக்கு  அர்ப்பணித்தான். (சோழர் செப்பேடுகள்;) என கங்கை வெற்றியைக் குறிப்பிடுகிறது. அதாவது கங்கைக் கரையாண்ட பெளத்த, சைவம் சாராத மன்னர்கள் சைவ சமயம் புனிதமாகக் கருதும் கங்கை நீரை சைவ சமயக்குறியீட அமைக்கப்பட்ட கோவிலை வைதீக-ஆகமப்படி புனிதப்படுத்த கொண்டு வந்தனர் எனும் செய்தியைக் கூறுகிறது. இந்த வெற்றியை இராசேந்திரசோழன் கங்கைகொண்டசோழபுரம் எனும் வணிகநகரை அமைத்து அதை தலைநகராகவும் அறிவித்ததன் மூலம் “பெளத்த வளையமைப்புகள் கட்டுப்படுத்திய வணிக வலையாமைப்பை தகர்த்தான்” என்பதோடு, கங்கை கொண்டசோழீசுரம் எனும் கோவிலை அமைத்து அதில் கங்கைகொண்டசோழீசன் எனும் சிவனை “பிரதிஷ்டை” செய்ததன் மூலம் “சைவ வைதீக அரசியல் இறையாண்மையை” தக்கவைத்தார். எனவே தன் அயலகப் படையெடுப்புகள் வழி புத்தமத வலையமைப்புகள் கட்டுப்படுத்திய வணிக வளையத்தை முறியடித்து சோழர் சைவ வைதீக அரசியல் இறையாண்மையை” நிறுவினார் எனலாம்.

துணை நூலகள்:

1.       Burten Stein (1980): Peasant State and Society in Medieval South India. Delhi: Oxford University Press

2.       ர.பூங்குன்றன்: 2016-தொல்குடி வேளிர் வேந்தர், வெளியீடு-நியூ சென்ச்சுரி புக் ஹவுஸ்.சென்னை, ISBN: 9788123433066.

3.       நமசிவாய முதலியார். (1927). தொல்காப்பியம் – சொல் அதிகாரம் – இளம்பூரணர் உரை. சென்னை: நமசிவாய முதலியார் அச்சக நிறுவனம்.

4.       அகநானூறு: உ.வே.சாமிநாத அய்யர் (1889) பாப்பையா அச்சகம்.சென்னை.

5.       நற்றினை U. V. Swaminatha Iyer (Ed.). (1889). Akanānūru. Chennai: Pāppaiya Press.

6.       Jamalan. (2003). Mozhiyum nilamum [Language and Land]. Chennai: New Century Book House. ISBN 9788170432348

7.       புறநானூறு:

8.       இளங்கோவடிகள். (1892). சிலப்பதிகாரம் – வஞ்சிக் காண்டம்: அம்பலக் கதையுரைத்த காட்சி (செய்யுள் 26–28). உ. வே. சாமிநாதையர் (தொகுப்பு). சென்னை: பாப்பையா அச்சகக் கூட்டம்.

9.       Subbarayalu, Y. (1996). The state and agrarian order in medieval South India. Delhi: Oxford University Press.; Menon, P., & Subbarayalu, Y. (2008). Reconstructing Chola agrarian history: An interview with Y. Subbarayalu. Review of Agrarian Studies, 13(1), Article 5.

10.   Alexis Sanderson, A. (2009). The Śaiva Age — The rise and dominance of Śaivism during the early medieval period. In S. Einoo (Ed.), Genesis and development of Tantrism (pp. 41–349). Tokyo: Institute of Oriental Culture, University of Tokyo. ISBN 978-4-903235-08-0

11.   Sanderson, A. (2012). Śaiva religion among the Khmers, Part I. Bulletin de l’École française d’Extrême-Orient, 97(97–98), 33–111.  

12.   arashima, N. (1984). South Indian history and society: Studies from inscriptions, AD 850–1800. Delhi: Oxford University Press.

13.   Subrahmanyam, B. N. (1966). Brahmadeyas in South India. The Indian Economic and Social History Review, 3(3), 271–287.

14.   Government of India, Archaeological Survey of India. (1914). Annual Report on South Indian Epigraphy, 1911–1912 (Nos. 45, 67). Madras: Government Press.

15.   Kulke, H. (1997). The early and the imperial kingdom: A processual model of integrative state formation in early medieval India. In S. Hermann Kulke (Ed.), The state in India 1000–1700 (pp. 233–262). Delhi: Oxford University Press.                

16.   Nilakanta Sastri, K. A. (1955). The Colas. Madras: University of Madras.                                 ISBN 9788121502858

17.    Subbarayalu, Y. (2012). South India under the Cholas. New Delhi: Oxford University Press. ISBN 978-0198077350

18.   Subbarayalu, Y. (1973). The political geography of the Chola country. Madras: Department of Archaeology, Government of Tamil Nadu.

19.   Archaeological Survey of India. (1937). South Indian inscriptions, Volume XII: Inscriptions of Rajaraja I, Rajendra I, and others (No. 20). Madras: Government Press.

20.   Gunawardana, R. A. L. H. (1971). P.201.Robe and plough: Monasticism and economic interest in early medieval Sri Lanka. Tucson: University of Arizona Press. ISBN-10: 0816506485, ISBN-13: 978-0816506484

21.   Hall, K. R. (1980). Trade and statecraft in the age of the Colas. New Delhi: Abhinav Publications.