Sunday, May 4, 2014

ராஜராஜேஸ்வரம் வடிவமைப்பு விரியும் வியப்பு. Tanjore Bhiradeswara temple design

தஞ்சை ராஜராஜேஸ்வரம் வடிவமைப்பு விரியும் வியப்பு       

             எல்லாம் ஒரு கணக்கு வழக்குகளுக்குள் தான் கிடக்கின்றன.வரலாறு எல்லா துறைகளிலும் நிறைய கணக்குகளை விட்டு சென்றிருக்கிறது.கட்டுமானத்துறையின் கணக்குகள் ஆச்சரியத்தின் நுனி நின்று உச்சி முடிபிடித்து உலுக்கி கேட்கிறது., பார்த்தாயா!பார்த்தாயா! அதை அறிந்து கொள்ளும் போது கொஞ்சம் திமிர்தான் வருகிறது. அதற்கு வெளிச்சம் காட்டியவர்களைத்தான் சீக்கிரம் மறந்து விடுகிறோம் அல்லது அவர்கள் இந்த விஷயத்திற்கு முன் நான் எம்மாத்திரம் என்று அடையாளம் காட்டாமல் அமைதியாகி விடுகின்றனர்.அப்படி பட்ட மனிதர் தான் பிரஞ்ச் ஆர்கிடெக்ட் பியாரி பிச்சார்ட்.இவரின் தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரத்தைப் பற்றிய ஆய்வின் நுக்கினியோண்டு,கொஞ்சொண்டு அறிமுகம் தான் இந்த நிலைத்தகவல். அவரின் ஆய்வையொற்றி....இதோ..தஞ்சை கோவிலை நிர்மாணித்த மாமன்னன் ராசராசனின் எண்ணம் கோவிலின் உயரமே திட்டத்தின் அடிப்படை.இது இதன் பொறியாளனான வீரசோழ குஞ்சரமல்ல ராசராச பெரும்தச்சனுக்கு ஆணையாக இருந்திருக்கும். இப்படித்தான் திட்டவரைபடம் அமைந்திருக்கும் என அவர் வரைந்த வரைபடம் அற்புதம்.

                         கோவிலின் தீர்மானிக்கப்பட்ட உயரத்தை ஆரமாகக் கொண்ட கோளத்தின் விட்டத்தை ஒரு பக்கமாக கொண்ட சதுரம் தான் கோவிலின் வளாக எல்லைகளை தீர்மானித்திருக்கிறது.நல்லாதானே போய்ட்டிருக்கு..ஒன்னும் குழப்பலையே! சரி ,சரியாக விளங்கிக்கொள்ள கொஞ்சம் இணைப்புபடத்தை பார்த்து விட்டு தொடரலாமா,இந்த முதல் சதுரத்தின் மூலைவிட்டங்கள் வெட்டிக்கொள்ளும் புள்ளிதான் கோபுரத்தின் மையம்.இந்த மையப்புள்ளியும் கோபுரத்தின் உச்சியும் ஒரே செங்குத்தில் திட்ட உயரத்தை எட்டும்..ஒகேவா.,அதாவது 59.98 மீட்டரை(195 அடி),முதல் சதுரத்தோடு இரண்டாவது சதுரம் இணைய கோவிலின் திருச்சுற்று மதிலுடன் கூடிய முதல் வளாகம் தயார்.,இந்த இரண்டாவது சதுரத்தின் மூலை விட்டங்கள் வெட்டும் புள்ளியில் பெரிய நந்தி....மூன்றாவதாக இணையும் சதுரம் வெளிப்புர வளாகத்தை தீர்மானிக்கிறது. இந்த மூன்றாவது சதுரத்தின் மூலை விட்டங்கள் வெட்டிக்கொள்ளும் புள்ளியில் தான் கோவில் வளாகத்தினுள் நுழையும் முதல் வாயிலான கேரளாந்தன் திருவாயில் அமைக்கப்பட்டிருப்பதோடு..இந்த மூன்று சதுரங்களின் மூலை விட்டங்கள் வெட்டும் புள்ளிகளை இணைக்கும் நேர்க்கோட்டில் தான் அனைத்து வாயில்களும் உள்ளன.இரண்டாவதான ராசராசன் திருவாயிலின் உயரம் கூட சாய்மானங்களின் வெட்டுப்புள்ளிக்குள் அடைபட்டிருக்கிறது. கோளம், வட்டம், சதுரம், முக்கோணம்,நேர்கோடு,சாய்மானம் என கணக்கின் அனைத்து வடிவங்களையும் உள்வாங்கி 1000 ஆண்டு தாண்டி இன்னும் அறிந்துகொள்ள நிறைய இருக்கிறது என வின் தொட்டு நிற்கும் கட்டுமானத்தை அமைத்த பெரும்தச்சன் குஞ்சரமல்லனை வியக்காமலிருக்க முடியவில்லை.இவனுக்கு சளைக்காமல் கங்கைகொண்ட சோழபுரத்தில் மதுராந்தக நித்தவினோத பெருந்தச்சன் காட்டிய வித்தை அற்புதம்.இந்த ஆய்வுக்கு உதவிய புதுவை பிரஞ்சு கலாச்சார நிறுவனத்தையும்,இந்திராகாந்தி தேசிய கலை மையத்தையும் நன்றி கூறவேண்டும்.
# Bhiragadeswara temple tanjore # tanjore chola temple, # Rajarajachola temple, #Rajarajeswaram thanjavur

1 comment:

  1. வியப்பு மட்டுமே விரிந்துகொண்டு இருக்கிறது.

    ReplyDelete