Thursday, November 5, 2026

கங்கைகொண்டசோழபுரம் இரத்த சாட்சி - காலனிய காலத்தின் வரலாற்றில் இவ்வூர் உடையார்பாளையத்தின் எச்சம்.

காலனிய ஆட்சியில் ஹைத்ராபாத் நிஜாம்,ஆர்காடு நவாப், பிரஞ்ச் காரர்கள், ஆங்கிலேயர் என அனைத்து தரப்பு ஊடாலுக்கும் உடையார்பாளையம் வரலாற்றோடு இவ்வூர் இடவியல் கடந்து வந்திருக்கிறது.During colonial rule, along with the history of Udayarpalayam, the topography of Gangaikondacholapuram has traversed through the complex power dynamics and interactions among the Nizam of Hyderabad, the Nawab of Arcot, the French, and the British.

                                        கங்கைகொண்டசோழபுரம்  இரத்த சாட்சி

                                                              இரா.கோமகன்.

                                                (தலைவர்,கங்கைகொண்டசோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்)                   

"மழைவிட்டாலும் தூவானம் விடவில்லை" எனும் கிராமத்துப் பழமொழி, கங்கைகொண்டசோழபுரத்தின் வரலாற்றுக்கு மிகக்கச்சிதமாகப் பொருந்துகிறது. முதலாம் ராஜேந்திரசோழன் தன் ஆட்சிக்காலத்தில், பலமிக்க ராணுவப் பாதுகாப் பும் செழிப்பான வணிகமும் ஒருங்கே அமைந்த தலைநகரமாக இவ்வூரைத் தோற்றுவித்தார். அக்காலம் தொட்டு, பேரரசின் எழுச்சியையும் வீழ்ச்சியையும், போர்களின் வடுக்களையும் சுமந்து நிற்கும் ஓர் இரத்த சாட்சியாகவே இவ்வூர் இருந்து வருகிறது. சோழப் பேரரசின் அந்தப் பிரம்மாண்டமான பொற்காலம் முடிவுக்கு வந்து பல நூற்றாண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அதன் வரலாற்றுச் சுவடுகளும் காயங்களும் இன்றளவும் இவ்வூரின் நிலப்பரப்பில் நிலைத்து நிற்கின்றன. இதை வரமாகவும் சாபமாகவும் கருதலாம்.

சங்ககாலத்தில் இருங்கோவேள் நாடான ‘இருங்கோளப்பாடி’ தலைநகராக வீராணம் ஏரியின் மேலக்கரையில் உள்ள புடவூர் விளங்கியதால், கரிகாலச்சோழனு டனான போரில் இவ்வூரின் புவியியல் அமைப்பும் இடவியலும் முக்கியப் பங்கு வகித்திருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. வரலாற்றுப் பாதையை உற்று நோக்கி னால் அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே தெரிகின்றன. ஏனெனில், புடவூர் இங்கிருந்து வெறும் 10 கிலோமீட்டருக்குள் தான் அமைந்திருக்கிறது.

மேலும், உறையூரிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் சிதம்பரத்தை அடையும் பழம்பெரும் பாதையிலும், இன்றைய முக்கிய வழியிலும் தொடர்ச்சியாக இடம் பெற்றுள்ள மையப்பகுதியாக இது விளங்குகிறது. சோழர் காலம் முழுவதும் போர்களின் வடுக்களையும் பேரரசின் மாற்றங்களையும் சுமந்து நின்ற ஓர் இரத்த சாட்சியாகவே திகழ்ந்த இவ்வூர், வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னரும் தன் அந்த நிலையைத் தொடர்ந்து தக்கவைத்திருந்தது எனலாம்.

காலனிய காலத்திலும் கங்கைகொண்டசோழபுரப் பகுதி தொடர் நெருக்கடிகளை யும் துயரங்களையுமே சந்தித்து வந்திருக்கிறது. இப்பகுதி உடையார் பாளையம் பாளையக்காரர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தபோது பல சோதனைகளைக் கடக்க வேண்டியிருந்தது. விஜயநகரப் பேரரசின் அரவணைப்பில் தொடங்கிய இதன் பிற்காலத்திய வரலாற்றுப் பயணம், முகமதியர்களின் படையெடுப்பு எதிர்ப்பு, பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்க எதிர்ப்பு, இறுதியாக ஆங்கிலேயர்களின் காலனிய எதிர்ப்பு எனப் பல்வேறு போராட்டங்களினூடே தன் தடத்தைப் பதித்துத் தொடர்ந் துள்ளது.

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு வரும் பயணிகள் பலரும், அதன் முதல் திருச்சுற்றில் உள்ள 'பீரங்கிமேடு' எனும் கோட்டைப்பகுதியை ஏனோ கூர்ந்து கவனிப்பதில்லை. தென்கிழக்கு மூலையிலும் மேற்குப் பகுதியிலும் இன்றளவும் உறுதியாக நிற்கின்ற இந்த அமைப்பை நாம் தெளிவாகக் காண முடியும். வடகிழக்குப் மூலையில் அமைந்திருந்த கோட்டைப்பகுதி கடந்த ஐம்பது ஆண்டுகளில் மெல்ல மெல்லச் சிதைந்து, இன்று முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டது. "சோழர் காலத்தில் பீரங்கி ஏது? பிறகு ஏன் இந்த வளைவான கோட்டை அமைப்பு?" என்று யாரும் கேள்வி எழுப்புவதில்லை. ஆனால், சோழர் காலத்திற்குப் பிந்தைய பிற்கால வரலாற்றின் காயங்களையும் மாற்றங்களையும் சுமந்து நிற்கும் சாட்சியாக அந்த அமைப்பே விளங்கி வருகிறது.

இக்கோயில் காலனிய ஆட்சிக் காலத்தில் இராணுவ முகாமின் அரண் கோட்டை யாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தேவாரப்பள்ளி, வேதப்பாடசாலை, மூலப் பண்டாரம், பரிவாரத் தெய்வங்களின் சன்னதிகள் என ஆன்மீக வடிவம் கொண்ட திருச்சுற்று மாளிகையோடு வீற்றிந்தக் கங்கைகொண்டசோழீசன், தன் பூசைகளையும் வழிபாடுகளையும் புறந்தள்ளி, அயலகத்தாரின் துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் வெடிமருந்துகளையும் காக்கும் கோட்டைக் காவல் பணிக்குப் பணிக்கப்பட்டிருந்தார் எனலாம். ஆங்கிலேயர்கள் இக்கோயிலைச் சிதைப்பதற்கு முன்பே, அதனைத் தங்கள் இராணுவ முகாமகப் பயன்படுத்தி யவர்கள் பிரெஞ்சுக்காரர்கள் ஆவர்.  ஹைத்ராபாத் நிஜாம், ஆர்க்காடு நவாப், பிரஞ்ச் டியூப்லே ஆகியோரின் கூட்டுப்படைத் தொகுப்பின் படைவீடாக இது மாறியிருந்தக் காலம் உண்டு.  இன்று தொல்லெச்சமாக உள்ள பீரங்கிமேடு அமைப்பு அவர்களால் உருவாக்கப்பட்டதுதான்.


                           கங்கைகொண்டசோழீசுரம் தென் கிழக்கு மூலை பீரங்கி கொத்தளம்

கங்கைகொண்டசோழபுரப் பெருங்கோயிலில் கொத்தளங்கள் இருந்ததைப் பிற்காலக் காலனிய இடவிவரப் பதிவு உறுதிப்படுத்துகிறது (Imperial Gazetteer, XII, 1908, பக்.128–129). 1765-இல் பாளையக்காரரின் அரண்மனை மற்றும் ஒரு கோயிலைப் பலப்படுத்துவது பற்றிய நவாப்–ஆங்கிலேய நிர்வாக ஆலோசனையும் (Military Consultations XXII, பக்.66–72), 1780-இல் உடையார்பாளையத்துக்கு ஆயுத–வெடிமருந்து அனுப்பிய செய்தியும் (LXXI, பக்.1253–1271), உடையாரின் நாட்டை மீட்க உதவ ஹைதர் உத்தரவிட்டதாக ஆங்கிலேயருக்குக் கிடைத்த உளவுத் தகவலும் (Military Miscellanies III, பக்.566–567) காணப்படுகின்றன. இப்பின்னணியில் நவாப்–ஆங்கிலேயத் தரப்பினர் பெருங்கோயிலின் பாதுகாப்பு அமைப்புகளைப் பலப்படுத்தியிருக்கலாம். எனினும் 1765-ஆம் ஆண்டு ஆவணத்தின் பெயரிடப் படாத கோயில் பெருங்கோயில்தான் என்பதும், அங்கு பலப்படுத்தல் பணி நிறை வேற்றப்பட்டது என்பதும் நேரடி ஆவணத்தால் இன்னும் உறுதிப்படுத் தப்படவில்லை. அதேபோல் 1749-ஆம் ஆண்டில் சந்தா சாகிப்–பிரெஞ்சுக் கூட்டுப் படையினரே கொத்தளங்களை அமைத்தனர் என்பதற்கும் தற்போதைய படை நடவடிக்கைப் பதிவு மட்டும் போதாது,எல்லா ஆவணங்களையும் தொகுத்து ஆராய வேண்டும்.

கல்வெட்டுகளின் இதற்கான சான்றுகள் இல்லை; காலனிய ஆட்சி ஆவணங்களே தெளிவாக உதவுகின்றன. கி.பி. 1749-ல் தோன்றிய சிக்கல்களின் ஆவணங்களில் இருந்து இக்கொத்தளத்தின் வரலாற்றை நாம் அறிய முடியும். Records of Fort St. George: Despatches to England  தொகுப்பின் 151 மற்றும் 152-ஆம் பக்கங்களில், 23-வது பத்தியில் இருந்து இதைத் தொடங்கலாம்.

இக்கொத்தளத்திற்குப் பின்னால் உடையார்பாளையம் வரலாறு ஒளிந்திருக்கின்றது. கி.பி.1903-ஆம் ஆண்டு ஏ.வடிவேலு என்பவரால் எழுதப்பட்ட ‘The Aristocracy of Southern India’ எனும் நூல் உடையார்பாளைய வரலாற்றை அறியப் பெரிதும் பயன் படுகிறது. உடையார்பாளையம் ஜமீன் குடும்பத்தின் முன்னோர்கள் தொடக்கத்தில் காஞ்சிபுரத்தில் ராஜவீதி என்று அழைக்கப்பட்ட கச்சி தெருவில் வாழ்ந்து, காஞ்சி புரத்தையும் அதனைச் சுற்றியுள்ள பிற பகுதிகளையும் ஆட்சி செய்து வந்தனர். பள்ளி கொண்ட ரங்கப்ப உடையார் காஞ்சிபுரத்தின் பாளையக்காரராகப் பொறுப்பு வகித்த காலத்தில், வித்யாரண்ய சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட ராயர் வம்சத்தைச் சேர்ந்த வீரநரசிம்மராயர் விஜயநகரப் பேரரசை ஆண்டு வந்தார்.

மேலும், தமது பரந்த பேரரசின் நிர்வாக வசதிக்காகத் தென்பகுதியை செஞ்சி, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மைசூர், மதுரை எனப் பல பாளையங்களாகவும் ஆட்சிப் பிரிவுகளாகவும் பிரித்து, தமக்கு நம்பிக்கையானவர்களை அவற்றின் ஆட்சி யாளர்களாக நியமித்து நிர்வகித்தார்.புதிதாகச் செஞ்சியின் ஆட்சியாளராக நியமிக் கப்பட்ட உதயகிரி ராமபத்திர நாயக்கருக்கு, நாட்டைப் பாதுகாப்பதில் துணையாக இருக்குமாறு காஞ்சிபுரப் பாளையக்காரரான பள்ளிகொண்ட ரங்கப்ப உடை யாருக்கு விஜயநகர அரசர் ஆணையிட்டார்.

அதோடு, காஞ்சிபுரத்தை ஆள்பவர் எனும் பொருளில் 'காஞ்சிபுராதிபாலு' என்றும், தீயவர்களைத் தண்டிப்பதில் எமனைப் போன்றவர் எனும் பொருளில் 'காலாக்கத் தோழ' என்றும் அவருக்குப் பட்டங்களைச் சூட்டினார். மேலும், அவருக்குப் பரிசாகப் பன்னிரண்டு யானைகள், இருநூறு குதிரைகள் மற்றும் ஐயாயிரம் வீரர்களைக் கொண்ட படையையும் வழங்கினார். ஏற்கெனவே அவருக்கு அளிக்கப்பட்டிருந்த ஜாகீர் ஊர்களுடன் (அரசுப் பணி அல்லது படைப்பணிக்காக வருவாய் பெறும் உரிமையுடன் வழங்கப்படும் கிராமங்கள்), 'ஜில்லிகாவனம்' என்னும் பரந்த நிலப்பகுதியையும் அவரும் அவரது வழித்தோன்றல்களும் தலைமுறை தலைமுறையாக அனுபவிக்கும் உரிமையையும் அளித்துச் சிறப்பித்தார்.

அந்நூல் குறிப்பிடும் பாளையத்தின் நிலப்பரப்பின் எல்லைகளாக வேதாரண்யத் திற்குக் கிழக்கே, வீராணம் ஏரிக்கு மேற்கே, வேலூருக்குத் தெற்கே மற்றும் கொள்ளிட வடக்கேயும், அதன் முகத்துவாரமும் அமைந்துள்ளன. மேலும், அதன் அளவுகள் கிழக்கு-மேற்கில் 3½ காதமும் (சுமார் 35 மைல்), வடக்கு-தெற்கில் 3½ காதமும் (சுமார் 25 மைல்) இருந்ததாகக் கணக்கிடப்படுகிறது. இந்த தூர அளவுகள் குறிப்பு முரண்பாடு உடையாதாக உள்ளது. இதுவே 15-ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் உடையார்பாளையம் பாளையக்காரர்களின் புவியியல் நிர்வாக எல்லையாகத் திகழ்ந்துள்ளது. இதன்மூலம், அந்த காலகட்டம் தொட்டே கங்கை கொண்டசோழபுரம் பகுதி உடையார்பாளையத்தாரின் ஆளுகை மற்றும் கட்டுப் பாட்டின் கீழ் வந்திருக்கின்றது.

தில்லிப் பேரரசரின் ஆணைப்படி கர்நாடகத்தின் ஹஸ்ரத் தாவூத்கான் பகதூர், செஞ்சி நாட்டைப் படைவலிமையால் கைப்பற்றி ஆற்காடு நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இணைத்தார். அப்போது தாவூத்கான், உடையாருக்கு ஒரு யானையைப் பரிசாக அளித்து, உடையார்பாளையம் சமஸ்தானத்தை ஆளும் உரிமையைத் தொடர்ந்து அனுபவிப்பதற்காகக் கப்பத் தொகையாக (பேஷ்குஷ்) ஆற்காடு நவாபுக்கு ஆண்டு தோறும் 40,000 ரூபாய் செலுத்த வேண்டும் என நிர்ணயித்தார். செஞ்சி முகலாயர் களால் கைப்பற்றப்பட்ட கி.பி. 1698-ஆம் ஆண்டைத் தொடர்ந்து நடைபெற்ற இந்நிகழ்வுக்குப் பின், உடையார் அப்பேஷ்குஷ் தொகையைத் தவறாமல் செலுத்தித் தமது நாட்டைத் திறம்பட ஆண்டுவந்தார். இவ்வாறு நவாபுக்கு 40,000 ரூபாய் செலுத்தி மிகுந்த புகழுடன் அவர் ஆட்சி செய்த அந்நாடு, பின்னர் 'உடையார் பாளையம்' என அழைக்கப்பட்டு 27 மாகாணங்களையும் 300 கிராமங் களையும் கொண்ட பரந்த நிலப்பகுதியாக விளங்கியது.

ஐரோப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின் எதிரொலியாக, இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே முதலாம் கர்நாடகப் போர் வெடித்தது. கி.பி. 1746-இல் பிரெஞ்சுக்காரர்கள் சென்னையைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, இந்தியாவில் அவர்களது முதன்மைத் தலைமை யிடமாக விளங்கிய புதுச்சேரியைத் தகர்ப்பதற்காக ஆங்கிலேயர்கள் அட்மிரல் எட்வர்டு பாஸ்கவென் (Edward Boscawen) தலைமையில் பெரும் கடற்படையையும் தரைப்படையையும் அனுப்பினர். கி.பி.1748-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புதுச்சேரிக்கு எதிரான போர் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு, நகரின் புறநகர்ப் பாதுகாப்பு அரண்களை ஆங்கிலேயப் படைகள் கைப்பற்றின. அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதம் 6-அன்று புதுச்சேரிக் கோட்டையின் நேரடி முற்றுகை ஆரம்பமானது. எனினும், பிரெஞ்சுப் படைகளின் வீரியமிக்க எதிர்ப்பினாலும் பிற சவால்களினாலும் கோட்டையைக் கைப்பற்ற முடியாமல் போனதால், 1748-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆங்கிலேயர்கள் தமது முற்றுகையைக் கைவிட்டுப் பின் வாங்கினர்.

கி.பி. 1748-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் நாளன்று, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுநரான சார்லஸ் பிளாயரிடமிருந்து (Charles Floyer) பெறப்பட்ட கடிதத்திற்கு உடையார்பாளையம் உடையார் பதிலளித்தார். கம்பெனியாரின் வேண்டுகோளை ஏற்றுத் தன் படை ஒன்றை உடனடியாக தேவனாம்பட்டினத்திற்கு அனுப்புவதாக வும், தேவைப்பட்டால் மற்றொரு படையையும் அனுப்பி வைப்ப தாகவும் அதில் அவர் உறுதி அளித்திருந்தார். அக்காலத்தில் தேவனாம்பட்டினத்தில் இருந்த புனித டேவிட் கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு கம்பெனி ஆளுநராகச் செயல் பட்டவர் சார்லஸ் பிளாயர் ஆவார். அத்தேவனாம்பட்டினம் உடையாரின் பாதுகாப்புக் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அதற்கு படைநடைப்பாதை கங்கை கொண்டசோழபுரமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. உடையார்பாளையம் அரசருக் கும் பிரெஞ்சுக்காரர்களுக்குமிடையே முரண்பாடும் மோதலும் வெடிப்பதற்கு இந்த நிகழ்வே தொடக்கப்புள்ளியாக அமைந்தது எனலாம்.

ஆற்காடு நவாப் பதவியைக் கைப்பற்றுவதற்கான போட்டியும், அதனுடன் இணைந்த ஐதராபாத் நிஜாம் பதவிக்கான வாரிசுரிமைப் போராட்டமும் புதியக் கூட்டணி அமையும் வாய்ப்பை ஏற்படுத்தின. முன்னாள் ஆற்காடு நவாப் தோஸ்த் அலியின் மருமகனான சந்தா சாகிப், ஆற்காடு ஆட்சிக்கு உரிமை கோரினார். ஆனால் அப்போது நவாப்பாக இருந்தவர் அன்வருதீன். அவரைப் பதவியிலிருந்து அகற்றித் தாம் நவாப்பாவதே சந்தா சாகிப்பின் நோக்கமாக இருந்தது. இதற்காக அவர் பிரெஞ்சு ஆளுநர் துய்ப்ளேயின் படையுதவியை நாடினார்.

இதனுடன் மற்றொரு அதிகாரப் போட்டியும் இணைந்தது. 1748-இல் ஐதராபாத் நிஜாம் அசஃப் ஜா இறந்தபின், அவரது மகன் நாசிர் ஜங், மகள் வழிப்பேரன் முசாபர் ஜங் ஆகியோரிடையே ஆட்சியுரிமைப் போட்டி ஏற்பட்டது. அன்வருதீன் நாசிர் ஜங் தரப்பில் இருந்தார்; சந்தா சாகிப் முசாபர் ஜங்குடன் கூட்டுச் சேர்ந்தார். தங்களுக்கு ஆதரவான ஆட்சியாளர்களை ஐதராபாத்திலும் ஆற்காட்டிலும் அமர்த்துவதன் மூலம் பிரெஞ்சு செல்வாக்கை விரிவுபடுத்த துய்ப்ளே முயன்றார்.

சதாராவிலிருந்து தெற்கு நோக்கி வந்த சந்தா சாகிப்புடன் முசாபர் ஜங் தனது படையை இணைத்தார். இவர்களுக்கு உதவ, துய்ப்ளே புதுச்சேரியிலிருந்து தொத்தேய் (D’Auteuil)  தலைமையில் பிரெஞ்சுப் படையை அனுப்பினார். இவ்வாறு இணைந்த கூட்டுப்படை ஆற்காட்டைக் கைப்பற்ற முன்னேறியபோது, அவர்களைத் தடுக்க அன்வருதீன் ஆம்பூரில் எதிர்கொண்டார். கி.பி.1749-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் நாள் அன்று நடைபெற்ற போரில் அன்வருதீன் கொல்லப்பட்டார்; வெற்றிக்குப் பிறகு சந்தா சாகிப் ஆற்காடு நவாப் பதவியைப் பெற்றார். எனினும், அன்வருதீனின் மகன் முகமது அலி தொடர்ந்து ஆட்சியுரிமை கோரியதால் இந்த வெற்றி போட்டியை முடிவுக்கு வரவில்லை. இது இரண்டாம் கர்நாடகப் போரின் தொடக்கத் திருப்ப மாக அமைந்தது.

ஆம்பூர்ப் போரில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சந்தா சாகிப் ஆற்காடு நவாப்பாக அறிவிக்கப்பட்டார். அதன்பின், தனது அதிகாரத்தை நிலைநாட்டும் பொருட்டு மாவட்டத் தலைவர்களும் கோட்டைத் தலைவர்களும் தனது மேலாதிக்கத்தை ஏற்று கப்பம் செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தினார். அதேவேளையில், தன்னுடைய நிர்வாகத்தளமாக இருந்த திருச்சிக் கோட்டையை, சந்தா சாகிப்புக்கு எதிரான ஆட்சி யுரிமைப் போராட்டத்தின் மையமாக மாற்றினார். திருச்சியில் தஞ்சமடைந்திருந்த முகமது அலியை எதிர்கொள்வதும் அவரது அடுத்த முக்கிய இலக்காக இருந்தது.  

இந்த அரசியல் மற்றும் படைத் தேவைகளின் பின்னணியில்தான் உடையார் பாளையத்தை நோக்கிய அவரது நகர்வைப் புரிந்துகொள்ள வேண்டும். கி.பி.1749-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் நாள் அன்று புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட முசாபர் ஜங்-சந்தா சாகிப் கூட்டுப்படை, புதுச்சேரிக்கும் தேவனாம்பட்டினத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் சில காலம் முகாமிட்டிருந்தது. பின்னர், நவம்பர் மாதத் தொடக்கத்தில் உள்நாட்டில் அமைந்திருந்த உடையார்பாளையத்தை நோக்கிப் படைநடத்திச் சென்றது. அவர்களுடன் பிரெஞ்சு உதவிப்படையாகச் சுமார் 1,400 ஐரோப்பியர்கள், ஏராளமான சிப்பாய்கள், பியூன்கள் மற்றும் பீரங்கிகள் இருந்தன.  உடையார்பாளையம் பாளையக்காரரான காலாக்தோழ உடையாரிடமிருந்து பெருந்தொகையைப் பெற்றுக் கொண்டு, அங்கிருந்து திருச்சிராப்பள்ளிக்குச் செல்ல அவர்கள் திட்ட மிட்டிருந்தனர்.

ஆனால், அது அவ்வளவு எளிதாக நடக்கவில்லை; அங்கே ஒரு மாதம் முழுமையாகத் தங்க நேர்ந்ததாகவும், உடையாரின் படைகளுடன் நாள்தோறும் மோதல்கள் நடந்ததாகவும் அப்பதிவு ஆவணப் படுத்தியுள்ளது.  இப்படை நடைப் பாதை கங்கைகொண்டசோழபுரமாக இருந்திருக்கிறது எனலாம். நேரடியாக எக்குறிப்பிலும் இவ்வூர் சுட்டப்படவில்லை ஆனால் பழங்காலத்திலிருந்த படைநகர்வுப் பாதைகளைக் கொண்டு இதைத் தீர்மானிக்கலாம். இந்த படை யெடுப்பு பற்றியப் பதிவு 1932-ஆம் ஆண்டு வெளியான Despatches to England, 1746–1751 தொகுதியில், இச்செய்தி பக்கங்கள் 153–154, பத்தி 23-இல் உள்ளது. இது 1750 பிப்ரவரி 12 அன்று கம்பெனி இயக்குநர்களுக்கு எழுதப்பட்ட பொதுக்கடிதத்தின் பகுதி ஆகும்.

ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த போரில் தாமதம் ஏற்பட்டதாலும், தம்மிடம் புகலிடம் அடைந்திருந்த பிற பாளையக்காரர்கள் அச்சமடைவதை விரும்பாத தாலும், சந்தா சாகிப்புடன் உடையார் இறுதியில் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார். அதன்படி, மூன்று லட்ச ரூபாய் வழங்க உடையார் ஒப்புக்கொண்டதாக வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

உடையார்பாளையக்காரரோடு உடன்படிக்கை செய்துகொண்ட பிறகு, அக்கூட்டுப் படை தஞ்சாவூரை நோக்கித் தன் நகர்வைத் தொடங்கியது. இதற்கான காரணத்தை 1750-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதியிட்ட கிழக்கிந்தியக் கம்பெனியின் கடிதம் தெளிவு படுத்துகிறது (Despatches to England, 1749–50, பக்கங்கள் 151–152, பத்தி 23). அதன்படி, உடையார்பாளையத்திலிருந்து நேராகத் திருச்சிராப்பள்ளிக்குச் செல்வதே அவர்களின் முதல் திட்டமாக இருந்தது. ஆனால், அங்குள்ள முகமது அலிக்கு ஆதரவாக ஆங்கிலேயர்கள் திருச்சிராப்பள்ளிக்குப் படைகளையும் போர்த்தளவா டங்களையும் அனுப்பி வைத்த செய்தியை அறிந்த முசாபர் ஜங் - சந்தா சாகிப் கூட்டுப்படை, தன் திட்டத்தை உடனடியாக மாற்றிக்கொண்டு தஞ்சாவூரை நோக்கித்  திரும்பியது.

இதிலிருந்து, கி.பி. 1749-ஆம் ஆண்டில் பிரெஞ்சு படையின் உதவியுடனான கூட்டுப் படையின் முற்றுகையும் இராணுவ அழுத்தமும் கங்கைகொண்ட சோழபுரப் பகுதியில் சுமார் ஒரு மாத காலம் நீடித்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. அக்காலகட்டத்தில்தான் இக்கோயில் இராணுவ முகாம் அரண் கோட்டையாகப் பயன்படுத்தப்பட்டு, இந்த பீரங்கி மேடைகளும் அமைக்கப் பட்டிருக்கக் கூடும். ஏனெனில், போர்க் காலங்களில் இதுபோன்ற பெரிய கோயில்களைத் தங்கள் தளமாகவும் அரணாகவும் பயன் படுத்திக்கொள்வது பிரெஞ்சுப் படைகளின் வழக்கமான போர்ச் செயல்முறைகளில் ஒன்றாகவே இருந்தது.

மீண்டும் கி.பி. 1755-இல், மாசின் (Maissin) தலைமையிலான பிரெஞ்சுப் படை உடையார்பாளையத்தை நோக்கிச் சென்று கப்பம் கோரியது. புதுச்சேரியின் பிரெஞ்சு ஆளுநர் துவால் தெ லேரி (Duval de Leyrit), மாசின் தலைமையில் 500 ஐரோப்பிய வீரர்களையும் 1,000 இந்திய சிப்பாய்களையும் துறையூருக்குப் படைநடத்தி அனுப்பினான். முன்னதாகத் திருச்சிராப்பள்ளி முற்றுகைக் காலத்தில், மைசூரின் நந்திராஜன் துறையூர் மீதான உரிமையைப் பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கி யிருந்ததாகவும், ஆனால் அங்கிருந்த பாளையக்காரர் பிரெஞ்சுக்காரர்களுக்குக் கப்பம் செலுத்த மறுத்துவிட்டதாகவும் புதுச்சேரி அரசின் வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. துறையூரை நோக்கி வந்த மாசினைக் களத்தில் எதிர்கொள்ளத் திருச்சியிலிருந்த ஆங்கிலேயத் தளபதி கெய்லாட் (Caillaud) ஆயத்தமான போதிலும், சென்னை ஆங்கிலேய நிர்வாகம் அவரைத் தடுத்தது. இதனால் எவ்விதத் தடையுமின்றி முன்னேறிய மாசின், துறையூர்ப் பாளையக்காரரை மிக எளிதில் பணியவைத்தார்.

துறையூரைப் பணியவைத்த பின்னர், மாசின் தன் படையை அரியலூரை நோக்கி நகர்த்தினார். ஏனேனில் துரையூர் பாளையத்தார் உடையார்பாளையத்திரிடம் தஞ்சம் கொண்டிருந்தார். அரியலூர் மற்றும் உடையார்பாளையம் பாளையக்காரர்களுக்கு இடையே நிலவி வந்த நெருங்கிய உறவுமுறையைக் கருத்தில் கொள்ளும்போது, கி.பி. 1755-இல் மாசின் தலைமையில் அரியலூருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரெஞ்சுப் படை நடவடிக்கை உடையார்பாளையத்தின் பாதுகாப்பு நலன்களையும் நேரடியாகப் பாதிப்பதாகவே இருந்தது. எனவே, இக்காலகட்டத்தில் அரியலூருக்கு உடையார்பாளையம் பாளையக்காரர் தேவையான இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கியினார் எனலாம்.

இம்மோதலைப் பற்றி வரலாற்று ஆய்வாளர் திரு. நாகசாமி அவர்கள் தமது Gangaikondacholapuram நூலின் முன்னுரையில் (பக்கம் 10-இன் இறுதியில்) குறிப்பிட்டுள்ளார். கி.பி. 1756-இல் பிரெஞ்சுக்காரர்கள் உடையார்பாளையத்தைத் தாக்கி, பாளையக்காரரை 40,000 ரூபாய் கப்பம் செலுத்தக் கட்டாயப்படுத்தினர் என்றும், அதனைத் தொடர்ந்து 1765-ஆம் ஆண்டில் நவாப் - ஆங்கிலேயர் கூட்டுத் தாக்குதல் நடைபெற்றது என்றும் அவர் விவரிக்கிறார்.

இந்தப் போர்களின்போது கங்கைகொண்டசோழபுரம் கோயில் இராணுவக் கோட்டையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், கோயிலின் மேற்குப் பகுதியில் காணப்படும் கொத்தளங்கள் அக்காலகட்டத்தில் அமைக்கப் பட்டிருக்கலாம் என்றும் அவர் கருதுகிறார். எனினும், இவற்றை அவர் ஒரு வரலாற்று ஊகமாகவே முன்வைக்கிறாரே தவிர, 1757-ஆம் ஆண்டு தாக்குதல் கோயிலுக்குள்ளேயே நேரடியாக நடைபெற்றது என்று உறுதியாகக் கூறவில்லை. ஆனால், வரலாற்று ஆவணங்களின் சான்றுகளையும் படைநகர்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது, இக்கோட்டைக் கட்டுமானங்கள் கி.பி. 1749-ஆம் ஆண்டிலேயே அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே எனது அழுத்தமான கருத்தாகும்.

கி.பி. 1757-ஆம் ஆண்டு நடைபெற்ற உடையார்பாளையப் படையெடுப்புக்கான குறிப்பிட்ட பின்னணியை, சென்னைத் தேர்வுக்குழு இங்கிலாந்திலுள்ள இரகசியக் குழுவிற்கு 1757-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி அன்று அனுப்பிய கடிதச் சுருக்கத்தின் மூலம் விரிவாக அறிய முடிகிறது. எலவானாசூரிலிருந்து விருத்தாசலத் திற்கு நகர்ந்த பிரெஞ்சுத் தளபதி டி’ஒத்தேய் (D’Auteuil), அங்குப் பிற படைநிலையங் களிலிருந்து வந்த வீரர்களுடன் இணைந்துகொண்டு மே மாதம் 4-ஆம் தேதி அன்று புறப்பட்டார்.

பிரெஞ்சுப் படைகள் விருத்தாசலத்தில் முகாமிட்டிருந்த போது, அங்குள்ள பழமலைநாதர் கோயில் அவர்களின் பாதுகாப்பு அரணாகவும் இராணுவ முகாமாகவும் செயல்பட்டது. அங்கிருந்து புறப்பட்டப்படை, பெண்ணாடம் அருகேயுள்ள காவல் எல்லையைத் தாக்கியது. தொடர்ந்து மே மாதம் 7-ஆம் தேதி அன்று உடையார்பாளையத்தின் மீது பிரெஞ்சுத் தளபதி மேற்கொண்ட தாக்குதலை உடையாரின் படைகள் வெற்றிகரமாக முறியடித்தன.

இதனைத் தொடர்ந்து பாளையக்காரருடன் பணப் பரிவர்த்தனை உடன்பாடு செய்து கொண்ட டி’ஒத்தேய், மே 11-ஆம் தேதி அன்று திருச்சிராப்பள்ளியை நோக்கித் தன் படையை நகர்த்தினார். இந்த வரலாற்றுச் சுருக்கம் மூலக் கடிதத்திற்கான ஆதாரத்தை Military Despatches to England, தொகுதி I, பக்கங்கள் 72–84 எனச் சுட்டிக்காட்டுகிறது (Dodwell, 1930, ப. 97). இந்த ஆவணச் சான்றைத்தான் திரு. நாகசாமி அவர்களும் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இப்போராட்டம் மற்றும் படைநகர்வு தொடர்பான ஆவணப்பதிவுகளில் கங்கைகொண்ட சோழபுரம் குறித்த எந்தவொரு நேரடிக் குறிப்பும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கி.பி. 1765-இல் உடையார்பாளையத்தின் மீது நடைபெற்ற நவாப் - ஆங்கிலேயப் படையெடுப்பானது, நிலுவையிலிருந்த கப்பப் பாக்கியை வசூலிப்பதோடு மட்டு மல்லாமல் நவாபின் நிலப்பரப்பு மேலாதிக்கத்தையும் உறுதியாக நிலை நிறுத்தும் நடவடிக்கையாகவே அமைந்தது. மதுரையிலிருந்து திரும்பிய தளபதி காம் பெல்லின் (General Charles Campbell) தலைமையிலான படை அரியலூரைக் கைப்பற்றி, உடையார்பாளையத்தையும் தீவிரமாக முற்றுகையிட்டது. ஆங்கிலேயப் படை கோட்டையை நெருங்கிய தருணத்தில், பாளையக்காரரான உடையார் தந்திர மாக நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார்.

அவர் தப்பியப்பாதை கங்கைகொண்டசோழபுரத்தின் வழியாக கொள்ளித்தைக் கடந்து காவேரி வழித்தடத்தில் மைசூரை அடைந்திருக்கலாம். இது சோழர்களின் பழைய படை நடைப்பாதையாகும். அதனைத் தொடர்ந்து நவாபின் படைகள் அப்பகுதியைக் முழுமையாகக் கைப்பற்றின என்று அக்காலக் கடிதச் சுருக்கங்கள் ஆவணப் படுத்தியுள்ளன. இதில் கங்கைகொண்டசோழபுரம் தாக்குதல் நடந்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஏனேனில் அதற்கு காரணம் 1749-ஆம் ஆண்டின் நிகழ்வினால் இவ்வூர் பெற்ற அனுபவமும் எனலாம். இவ்வெற்றியின் மூலமாக நவாபின் வருவாய் கணிசமாக அதிகரித்ததுடன், திருச்சிராப்பள்ளிக்கான தடையற்ற போக்குவரத்துத் தொடர்பும் உறுதியளிக்கப்பட்டதாகச் சென்னை கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகமே பதிவு செய்துள்ளது (Dodwell, 1930, பக்கங்கள் 410–412).

இவ்வாறு 1765-இல் ஆட்சியிழந்து வெளியேற்றப்பட்ட உடையார்பாளையம் பாளையக்காரர், 1780-இல் இரண்டாம் கர்நாடகப் போரின் போது ஹைதர் அலியின் படையுதவியோடு மீண்டும் வந்து தன் பாளையத்தை மீட்டார். எனினும், ஆங்கிலேயர் ஆட்சியில் அவரது குடும்பத்திற்கு நிலையான ஜமீன்தாரி உரிமை முறைப்படி வழங்கப்பட்டது கி.பி. 1817-இல்தான் என்பது வரலாற்று உண்மை யாகும்.

இப்பின்னணியில், உடையார்பாளையத்திற்குக் கிழக்கே அமைந்துள்ள கங்கை கொண்டசோழபுரத்தின் இராணுவ வழித்தட முக்கியத்துவமும் சிறப்பான கவனத் திற்குரியதாகிறது. சிதம்பரம், தேவிக்கோட்டை, காட்டுமன்னார்கோவில் மற்றும் கொள்ளிடம் ஆற்றைக் கடந்து வரும் தென்கிழக்கு அணுகுவழிகளுடன் தொடர்பு டைய அதன் வியூக நிலவியல் அமைப்பைக் கருத்தில் கொள்ளும்போது, உடையார் பாளையத்தைச் சுற்றி மீண்டும் மீண்டும் நிகழ்ந்த படைநகர்வுகள், போர்த்தளவாட விநியோகம் மற்றும் பாதைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை கங்கை கொண்டசோழபுரத்திலும் கடுமையான இராணுவ அழுத்தத்தை ஏற்படுத்தி யிருந்தன. இந்த இடவியல் பின்னணியே, வரலாற்றுப் பெருமைமிக்க சோழீச்சரப் பெருங்கோயிலைப் பாதுகாப்பான இராணுவ அரணாகப் பயன்படுத்த வேண்டிய சூழலைத் தோற்றுவித்தது.

பதினெட்டாம் நூற்றாண்டுக் கர்நாடகப் போர்களின்போது கங்கைகொண்ட சோழபுரப் பெருங்கோவில் பெற்றிருக்கக்கூடிய இராணுவ முக்கியத்துவத்தை, அதனைச் சுற்றியிருந்த காட்டுமன்னார்கோவில், பாளையங்கோட்டை, உடையார் பாளையம், சிதம்பரம், தேவிக்கோட்டை ஆகிய இடங்களின் படை நடவடிக்கைகளுடன் இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். இவ்விடங்களில் நடைபெற்ற போர்கள் அனைத்தும் ஒரே ஆண்டைச் சேர்ந்தவை அல்ல என்றாலும், இப்பிராந்தியத்தில் படைநகர்வு, தானியச் சேமிப்பு, வழித்தடப் பாதுகாப்பு, ஆற்றைக் கடத்தல் மற்றும் கடற்கரை அணுகல் ஆகிய இராணுவத் தேவைகள் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையதாக இருந்ததை அவை உணர்த்து கின்றன.

ராபர்ட் ஆர்மின் (Robert Orme) முதல் தொகுதி நூலின் V-ஆம் பகுதியில், கி.பி. 1754-ஆம் ஆண்டு படைநடவடிக்கைகளின்போது சிதம்பரத்திற்குத் தென்மேற்கிலிருந்த "மன்னார்கோவில்" (காட்டுமன்னார்கோவில்) பிரெஞ்சுக்காரர்களின் முதன்மையான தானியக் கிடங்காகச் செயல்பட்டதும், அதனை ஆங்கிலேயப் படைகள் கைப்பற்றத் தீவிர முயற்சி மேற்கொண்டதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதே நூற்பகுதியில், பாளையங்கோட்டை மீதான பிரெஞ்சுப் படையின் முற்றுகையும் விரிவாக இடம் பெற்றுள்ளது. இவ்விரு வரலாற்றுப் பதிவுகளும், அக்காலகட்டத்துப் போர்களில் கோயில்களையும் உள்ளூர் கோட்டைகளையும் உணவளிக்கும் தானியக் கிடங்குகளாகவும், பாதுகாப்புப் படைநிலையங்களாகவும் பயன்படுத்திய போர்ச் சூழலைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன (Orme, 1763, தொகுதி I, நூற்பகுதி V).

 இப்பகுதிகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பில், உடையார்பாளைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியிலிருந்த மிகப்பெரிய மதில் சூழ்ந்த பெருங்கோயிலாகக் கங்கை கொண்டசோழபுரம் திகழ்ந்தது. இதனை மையமாகக் கொண்டு அமைத்துப் பார்க்கும்போது, இப் பெருங்கோயில் பெற்றிருந்த இராணுவப் பயன்பாட்டையும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் ஆராய்வதற்கான நிலவியல் அடிப்படை யையும் உணர்ந்து கொள்ள முடியும்.

இப்பிராந்தியத்தின் இராணுவ நிலவியலில் கொள்ளிடம் ஆறானது, அதன் கரைகளை ஒட்டிய நிலவழிப்பாதைகளுக்கு நீர் வழங்கிய ஆதாரமாக மட்டுமன்றி, படையினரையும் போர்த்தளவாடங்களையும் ஏற்றிச் செல்லும் முக்கிய நீர்வழிப் போக்குவரத்துப் பாதையாகவும் செயல்பட்டது. ராபர்ட் ஆர்மின் இரண்டாம் தொகுதி, XI-ஆம் நூற்பகுதியின்படி, திருச்சிராப்பள்ளியைத் தளமாகக் கொண்ட ரிச்சர்ட் ஸ்மித்தின் (Richard Smith) தலைமையிலான படை, 1759-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் நாள் இரவு தேவிக்கோட்டையை நோக்கிப் புறப்பட்டது. அப்படையில் 140 ஐரோப்பியர்கள் மற்றும் டோப்பாசுகள் (போர்த்துகீசியத் தொடர்புடைய உள்ளூர்/கலப்பினக் கிறித்தவ வீரர்கள்), 300 சிப்பாய்கள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் இரண்டு பெரிய படகுகளிலும், தோல் போர்த்திய பதின்மூன்று பரிசல்களிலும் ஏறிப் பயணித்தனர்.

பயணத்தின் வழியில் சில படகுகள் சிதம்பரம் நோக்கிப் பிரியும் இடதுபுற நீர்ப் பாதைக்குள் தவறாகச் சென்றுவிட்டன. இறுதியில் அத்தாக்குதல் தோல்வி யடைந்ததைத் தொடர்ந்து, அப்படை கொள்ளிடத்தின் தென்கரைத் தரைவழியாகத் திரும்பி அக்டோபர் 24 அன்று மீண்டும் திருச்சிராப்பள்ளியை அடைந்தது (Orme, 1778, தொகுதி II, நூற்பகுதி XI). ஸ்மித்தின் படை படகுகளில் ஏறிய குறிப்பிட்ட துறையின் பெயரை ஆர்ம் தனது நூலில் குறிப்பிடவில்லை என்ற போதிலும், கொள்ளிடத்தின் வடகரைத் தரைவழி, தென்கரைத் தரைவழி மற்றும் ஆற்றுப் பயணம் ஆகிய மூன்று முக்கியப் போக்குவரத்து முறைகளையும் இந்நிகழ்வு உறுதிப்படுத்துகிறது. கொள்ளிடம் ஆற்றை எளிதில் அணுகும் பாதைகளுக்கு மிக அருகில் அமைந்திருந்த கங்கைகொண்ட சோழபுரத்தின் நிலவியல் அமைவிடம், இந்நீர்வழி மற்றும் தரைவழித் தொடர்புகளின் அடிப்படையில் பெருமளவு இராணுவ முக்கியத்துவம் பெற்றிருந்தது.

இந்தப் பின்னணியில், கங்கைகொண்ட சோழபுரப் பெருங்கோவிலின் பெருஞ் சுற்றுமதில், பரந்த உள்வெளி மற்றும் மண்டபங்கள் ஆகியவற்றை இராணுவத்தினர் தங்குமிடம், போர்த்தளவாடச் சேமிப்பிடம் அல்லது பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தியிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளையும், அங்குள்ள பீரங்கி மேடைகள் உள்ளிட்ட மாற்றங்களின் காலத்தையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. பிரெஞ்சுப் படைகளின் தொடர்ச்சியான போர்த்தாக்குதல்கள் மற்றும் இராணுவ நெருக்கடிகள் காரணமாகவே, ஏற்கெனவே இருந்த சோழர் காலக் திருக்கோவில் கட்டமைப்பை அக்காலகட்ட இராணுவத் தேவைகளுக்கேற்ப இவ்வாறாக மாற்றியமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது எனலாம். இதனால், இவ்வூர் மக்கள் பதினெட்டாம் நூற்றாண்டிலும் அதைத் தொடர்ந்தும் கடுமையான போர்ச் சூழலி லேயே வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, அடுத்த பெரும் நெருக்கடி கி.பி. 1830-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்தது; அது இத்திருக்கோவிலின் கட்டு மானங்களை இடித்துக் கட்டுமானத்தைச் சேதப்படுத்திய நிகழ்வாகும். கங்கை கொண்டசோழபுரக் கோவிலிலிருந்து கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கீழணை (Lower Anicut) கட்டுமானத்திற்காகக் கற்கள் பெருமளவில் அகற்றப் பட்டதையும், அதற்கெதிராக உள்ளூர் வாழ் பொதுமக்கள் திரண்டு பலத்த எதிர்ப்புத் தெரிவித்த தையும் ஆராய்வதற்கு முதன்மைச் சான்றாக ஃபாரோ அண்ட் கோ (Pharoah & Co.) வெளியிட்ட A Gazetteer of Southern India (1855, பக்கங்கள் 338–339) நூலிலிருந்து எம். ஜே. வால்ஹவுஸ் (M. J. Walhouse) மேற்கோள் காட்டியுள்ள வரலாற்றுப் பதிவு அமைகிறது.

Indian Antiquary இதழில் வெளியான தமது “Archaeological Notes” என்னும் ஆய்வுக் கட்டுரையில் எம். ஜே. வால்ஹவுஸ் (M. J. Walhouse) இந்நிகழ்வைக் விரிவாகப் பதிவு செய்துள்ளார். கீழணைக்கட்டுமானத்திற்குத் தேவையான கற்களைப் பெறுவதற் காகக் கங்கைகொண்டசோழபுரக் கோவிலின் நுட்பமான சிற்பக் கற்கள் பலவந்த மாக அகற்றப்பட்டதாகவும், அதன் பிரமாண்டமான வெளிச்சுற்றுமதில் பெருமள வில் இடித்து அழிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அக்காலகட்டத்தில் உள்ளூர் பொதுமக்கள் திரண்டு வந்து இச்சிதைப்பு நடவடிக் கையைத் தடுக்க தீவிரமாக முயன்றும் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. மாறாக, எதிர்ப்பு தெரிவித்த மக்கள் அதிகாரத்தை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ("punished for contempt") ஆங்கிலேய அரசால் தண்டிக்கப்பட்டனர் என்றும் அப்பதிவு சுட்டிக்காட்டுகிறது. மேலும், இடிக்கப்பட்ட கற்கோவில் மதிலுக்குப் பதிலாகப் புதிய செங்கல் மதில் சுவரைப் புனரமைத்துத் தருவதாக ஆங்கிலேய நிர்வாகம் அளித்த வாக்குறுதியும் இறுதிவரை நிறைவேற்றப்படவே இல்லை என்றும் வால்ஹவுஸ் பதிவு செய்துள்ளார் (Walhouse, 1875, பக். 274).

இந்நிகழ்வு கி.பி. 1830-களின் தொடக்கத்தில் நடைபெற்றது என்பதற்குச் சான்றாக, கோவிலை இடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட கைதிகள் தப்பி ஓட முயன்ற செய்தியும், அவர்கள் கொல்லப்பட்ட அதிர்ச்சித் தகவலும் அரச ஆவணங்களில் பதிவாகியுள்ளன. Index to the Proceedings of the Judicial Department - for the Year 1836 என்னும் நூலில் இத்தனிச் சம்பவத்திற்கான முக்கிய வரலாற்றுச் சுட்டுகள் கிடைக்கின்றன. அந்நூலின் 308-ஆம் பக்கத்தில், திருச்சிராப்பள்ளி மாஜிஸ்திரேட் 1836-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதியிட்டு எழுதிய கடிதத்தின் சுருக்கம் இடம்பெற்றுள்ளது.

அதில், கோவிலை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிவில் பொறியாளரின் (Civil Engineer) கட்டுப்பாட்டிலிருந்த கைதிகள் தப்பிக்க முயன்றபோது, ஐந்து கைதிகள் கொல்லப்பட்டனர், பதினொருவர் கடுமையான காயமடைந்தனர் மற்றும் ஆறு பேரைக் காணவில்லை என்றும், தப்பி ஓடியவர்களை மீண்டும் பிடிப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அப்பணியில் பாதுகாப்பிற்காக இருந்த சில காவல் பியூன்கள் அனுமதி யின்றித் தங்களது பணியிடத்தை விட்டுச் சென்றது குறித்தும் விசாரணை நடத்தப் படவுள்ளதாக அக்குறிப்பு தெரிவிக்கின்றது. இதற்கான மூலச் சான்றுகளாக, 1836-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதியிட்ட நீதித்துறை நடவடிக்கை எண் 22 (பக்கம் 598) மற்றும் அதற்கான மினிட்ஸ் எண் 25 (பக்கம் 607) ஆகியவை சுட்டிக்காட்டப் பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஜனவரி 23-ஆம் நாள் என்பது கடிதம் எழுதப்பட்ட தேதியேயன்றி, சம்பவம் நடைபெற்ற தேதியாகக் கொள்ளப்படக் கூடாது. மேலும், இந்நூல் 1836-ஆம் ஆண்டிற்கான நீதித்துறை நடவடிக்கைகளின் தொகுப்பாக 1944-இல் அச்சிடப்பட்ட அட்டவணை என்பதால், அதிலுள்ள தகவல்கள் முழுமையான அறிக்கைகளின் சுருக்கங்களாகவே இடம்பெற்றுள்ளன.

அதே நீதித்துறை அட்டவணையின் 309-ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள, ஃபௌஜ்தாரி அதாலத் (Foujdary Adawlut) பதிவாளரின் 1836-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதியிட்ட கடிதச் சுருக்கம் இந்த விசாரணையின் அடுத்த கட்டத் தொடர்ச்சியை விளக்குகிறது. அதன்படி, கைதிகள் மூன்றாம் பிரிவின் சிவில் பொறியாளரின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டு, கொள்ளிடம் அணைக்கட்டு மானத்திற்காக வெடிமருந்துகளைப் பயன்படுத்தி மலைப்பாறைகளையும் கோவில் கற்களையும் வெட்டி எடுக்கும் கடினமான பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்று அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. காவல் பியூன்கள் பணியிடத்தை விட்டுச் சென்றது குறித்துத் திருச்சி மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தியதாகவும், ரமலான் பண்டிகைக்காக அவர்கள் விடுப்பு கேட்டிருந்த நிலையில் காவல்துறை அதிகாரிகளிடையே ஏற்பட்ட தவறான புரிதலே அவர்கள் அவ்வாறு செல்வதற்குக் காரணமாக அமைந்தது என்றும் அப்பதிவு சுருக்கமாகக் விளக்குகிறது. இந்த விசாரணை தொடர்பான மேலதிகச் சான்றுகள் 1836-ம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதியிட்ட நடவடிக்கை எண். 7 (பக்கம் 3748) மற்றும் மினிட்ஸ் எண். 8 (பக்கம் 3777) ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய உயிரிழப்புகளின் தன்மையை ஆழமாக ஆராய்ந்தபோது, மதராஸ் மருத்துவக் குழுவின் அலுவலகப் பதிவுகளிலிருந்து தொகுக்கப்பட்ட Report on the Medical Topography and Statistics of the Southern Division of the Madras Army (1843) என்னும் நூலில் மிக முக்கியமான ஒரு மருத்துவச் சான்று நமக்குக் கிடைக்கிறது. அந்நூலின் 203-ஆம் பக்கத்தில், திருச்சிராப்பள்ளி சிறைக் கைதிகள் தப்ப முயன்றபோது காவல் பியூன்கள் நடத்திய தாக்குதலிலும் வாள்வெட்டுக் காயங்களாலும் மொத்தம் ஏழு இறப்புகள் நிகழ்ந்ததாகவும், அவற்றுள் இரண்டு இறப்புகள் 1830-ஆம் ஆண்டிலும், மற்ற ஐந்து இறப்புகள் 1836-ஆம் ஆண்டிலும் நிகழ்ந்ததாகவும் மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (Madras Medical Board, 1843, ப. 203).

சம்பவத்தின் ஆண்டு, உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை, கைதிகளின் தப்பியோட்ட முயற்சி மற்றும் காவல் பியூன்களின் ஈடுபாடு ஆகிய அனைத்து விவரங்களும் முந்தைய நீதித்துறைப் பதிவுகளுடன் மிகத் துல்லியமாகப் பொருந்துவதால், இவை இரண்டும் ஒரே தொடர்ச்சியான வரலாற்றுச் சம்பவத்தைக் குறிக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இவ்வாறாக, கங்கைகொண்ட சோழபுரம் சோழர்களின் பெருமைமிகு வரலாற்றுக் காலத்தில் ஒரு பெரும் பேரரசுத் தலைநகரமாக விளங்கியதுடன், பிற்காலக் காலனிய அரசு காலத்திலும் தனது அடையாளத்தின் இரத்த சாட்சியாகவே காலத்தின் கோர முகத்தைச் சந்தித்து வந்துள்ளது.

 நூலடைவு:

1.       Ananda Ranga Pillai. (1925). The diary of Ananda Ranga Pillai (H. Dodwell, Ed., Vol. 10). Government Press. https://archive.org/details/india.history.resource.87716

2.       Dodwell, H. (1930). Calendar of the Madras despatches, 1754–1765. Government Press. https://www.scribd.com/document/666794594/Calendar-of-the-Madras-Despatches-1754-1765

3.       Orme, R. (1763). A history of the military transactions of the British nation in Indostan, from the year MDCCXLV (Vol. 1). John Nourse.

4.       Orme, R. (1778). A history of the military transactions of the British nation in Indostan, from the year MDCCXLV (Vol. 2). John Nourse.

5.       Madras Government. (1944). Index to the proceedings of the Judicial Department, for the year 1836 (pp. 177–180, 308–309). Superintendent, Government Press.

6.       Madras Medical Board. (1843). Report on the medical topography and statistics of the Southern Division of the Madras Army (pp. 200–203). Vepery Mission Press.

7.       Pharoah and Co. (1855). A gazetteer of Southern India, with the Tenasserim Provinces and Singapore (pp. 338–339). Pharoah and Co. [இப்பகுதியின் உள்ளடக்கம் வால்ஹவுஸ் மேற்கோள் வழியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.]

8.       Walhouse, M. J. (1875). Archaeological notes. The Indian Antiquary, 4, 272–274.

9.       British Library. (1835–1837). Board’s Collections: IOR/F/4/1667/66681 [Archival file].

10.   British Library. (1842–1845). Williams, Mr., ill treatment of prisoners at Trichinopoly exposed by: IOR/Z/E/4/46/W132 [Index entry].

11.   Ananda Ranga Pillai. (1927). The diary of Ananda Ranga Pillai (H. Dodwell, Ed., Vol. 11). Government Press. பயன் படுத்திய பகுதிகள்: 1757 செப்டம்பர் 17, ப. 48; அக்டோபர் 8, பக். 64 — உடையார்பாளையத்திற்குக் குடும்பங்களையும் பணத் தையும் அனுப்பிய செய்திகள். உரைக் குள்: (Ananda Ranga Pillai, 1927, pp. 48, 64).

12.   Dodwell, H. (1930). Calendar of the Madras despatches, 1754–1765. Government Press.
பயன்படுத்திய பகுதி:பக்.97—1757 ஜூன் 6 கடிதச் சுருக்கம்; மே 7 உடையார் பாளையத் தாக்குதல்.உரைக்குள்: (Dodwell, 1930, p. 97).

13.   Hemingway, F. R. (1907). Madras district gazetteers: Trichinopoly (Vol. 1). Government Press. பயன்படுத்திய பகுதி: ப. 69 — 1757 பிரெஞ்சுப் படை நடவடிக்கையும் உடையார் பாளையத் திறைவாக்குறுதியும். உரைக்குள்: (Hemingway, 1907, p. 69).

14.   Records of Fort St. George: Country correspondence, Military Department, 1757. (1913). Government Press. பயன்படுத்திய பகுதிகள்: ப. 85, கடித எண் 191 — விநியோகத் தடுப்பு அறிவுரை; ப. 88 ஒரு லட்சம் ரூபாய் பற்றிய செய்தி அறிக்கை; ப. 108, கடித எண் 238 உடையார்பாளையத் தலைவரின் கடிதம். உரைக்குள்: (Records of Fort St. George, 1913, pp.85,88,108). தனி ஆசிரியர் உறுதிப்படுத்தப்படாததால் நூலின் தலைப்பு முதலில் கொடுக்கப்பட்டுள்ளது.

15.   Nagaswamy, R. (1970). Gangaikondacholapuram. State Department of Archaeology, Government of Tamilnadu.பயன்படுத்திய பகுதிகள்: பக். 11–12 படை யெடுப்புகள், கோயிலின் கோட்டைப் பயன்பாடு மற்றும் கொத் தளங்கள் பற்றிய மதிப்பீடு.உரைக்குள்:  (Nagaswamy, 1970, pp. 11–12).

16.   Walhouse, M. J. (1875). Archæological notes. The Indian Antiquary, 4, 272–274.
குறிப்பிட்ட பக்கம்.274 பயன்படுத்திய பகுதி: ப. 274 கீழணைக்காகக் கோயில் கற்கள் அகற்றப்பட்டமை, மக்களின் எதிர்ப்பு, அரண்மனை எச்சங்கள் பற்றிய பதிவு.உரைக்குள்: (Walhouse, 1875, p. 274).