சோழர் கால
இராணுவக் குடியமர்வும் ஈழத்து வன்னிமையின் தோற்றமும்: நடுவில் நாட்டுப்
போர்க்குடிகள் பற்றிய வரலாற்றுச் சாசனவியல்
பகுப்பாய்வு. (Chola
Military Settlements and the Emergence of Eelam's Vannimai Chieftaincies: A
Historical Epigraphical Analysis of the Martial Clans of Naduvil Nadu)
இக்கட்டுரை உலகத் தமிழ்ச் சிறகம் எனும் அமைப்பின் 4-வது மாநாடு 2026-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22,23 -சனி, ஞாயிறு தேதிகளில் ஹாட்டன், ஹாலந்து நாட்டில் நடைபெற்றது.அதன் மலருக்காக எழுதப்பட்டு அதில் வெளியிடப்பட்டுள்ளக் கட்டுரை- ISBN:978-81-688651-0-5. இரா.கோமகன்.
தமிழ்நாட்டிற்கும்
ஈழத்திற்குமான கடல்சார் வரலாற்று மற்றும் பண்பாட்டு உறவுகள் சோழர் கால இராணுவப்
படையெடுப்புகளுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சங்ககாலத்திலும்
காப்பியக்காலத்திலும் தொடங்கிய ஒன்றாகும். ஈழத்திற்கும் தமிழ்நாட்டின் தொண்டை
மண்டலத்திற்குமான தொடக்ககாலத் தொடர்பை விளக்கும் முதன்மைத் தொன்மங்களும் இலக்கியச்
செய்திகளும் பின்னாளைய வரலாற்றின் தொடக்கப்புள்ளிகள் ஆகும்.
தமிழ்
இலக்கிய மரபிலும் சாசன வரலாற்றிலும் தொண்டை மண்டலத்தை ஆண்ட தொண்டையர் / பல்லவர்
வம்சத்தின் தோற்றம் குறித்து ஒரு புகழ்பெற்ற தொன்மக் கதை நிலவுகிறது.சோழ மன்னன்
ஒருவனுக்கும் நாகநாட்டை (ஈழத்தின் வட பகுதி / யாழ்ப்பாணக் குடாநாடு) சேர்ந்த நாக
இளவரசி பீலிவளை என்பவளுக்கும் இடையே ஏற்பட்ட காதலால் ஒரு குழந்தை பிறந்தது. நாக
இளவரசி அக்குழந்தையைக் கடலில் ஒரு கப்பலில் அனுப்பிவைத்தபோது, கப்பல் உடைந்து குழந்தை கடலில் மிதந்து வந்தது. குழந்தை மிதந்து
வரும்போது அடையாளம் காண்பதற்காக, அதன் கழுத்தில் ஈழத்து
நாகநாட்டின் அடையாளமான 'தொண்டைக் கொடியை' (ஆம்பல்/தொண்டை மரத்தின் கொடி) சுற்றிக் கடலில் மிதக்கவிட்டனர். அக்கடலலை
குழந்தையைக் கொண்டுவந்து தொண்டை மண்டலக் கரையில் சேர்த்தது. தொண்டைக் கொடி
சுற்றப்பட்டு வந்ததால் அக்குழந்தை 'தொண்டைமான்' என்றும், அவனால் ஆளப்பட்ட நிலப்பரப்பு
'தொண்டை மண்டலம்' என்றும், அம்மக்கள் 'தொண்டையர்' என்றும் பெயர் பெற்றனர் என்பது இலக்கிய வரலாற்று மரபாகும்.
இத்தொன்மச்
செய்தி தமிழ் நிலத்தின் முதன்மைச் செவ்வியல் காப்பியமான சிலப்பதிகாரத்தின்
மணிமேகலை காதை / மணிமேகலை நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிள்ளிவளவன் எனும்
சோழ மன்னன் நாகநாட்டு இளவரசி பீலிவளையைப் புணர்ந்து பிரிந்ததும், பீலிவளை பெற்றெடுத்த மகனை 'கம்பளச்செட்டி'
எனும் வணிகன் மூலமாகக் கப்பலில் சோழ நாட்டிற்கு அனுப்பிவைத்தாள்.
வழியில் கப்பல் கவிழ்ந்து குழந்தை காணாமல் போக, அதைத்
தேடி அலைந்த சோழ மன்னன் 'இந்திர விழா' எடுக்க மறந்துபோகவே, காவிரிப்பூம்பட்டினத்தைக்
கடல் கொண்டது என்பது காப்பியக் கதை.
இக்கதை
உணர்த்தும் முதன்மை வரலாற்று உண்மை யாதெனில்: சங்க காலத்திலேயே ஈழத்தின்
நாகநாட்டிற்கும் தமிழ்நாட்டின் தொண்டை மண்டலம் மற்றும் சோழ மண்டலத்திற்குமிடையே
நெருங்கிய கடல்சார் மற்றும் அரச திருமண உறவுகள் நிலவின. சங்க காலத்தில் ஈழத்து
நாகநாட்டிலிருந்து தொண்டைக் கொடி சுற்றி மிதந்து வந்து தொண்டை மண்டலத்தை நிறுவிய
அதே கடல்வழிப் பாதையில்தான், பிற்காலத்தில் (கி.பி. 10–11-ஆம் நூற்றாண்டுகளில்) தொண்டை மண்டலம் மற்றும் நடுவில் நாட்டுப்
போர்க்குடிகள் சோழரின் படைகளாக மீண்டும் ஈழத்திற்குச் சென்று குடியமர்ந்தனர்.
தென்னாசிய
வரலாற்று எழுத்தியலில் கி.பி. 10 முதல் 12-ஆம் நூற்றாண்டு வரையிலான காலம் சோழப் பேரரசின் கடல்சார் விரிவாக்கம்,
மண்டல கட்டமைப்பு மற்றும் இராணுவ அரசியல் மாற்றங்களில் மிக
முக்கியமான காலகட்டமாகும். தமிழர் வரலாற்றில் முதன்மைச் திருப்புமுனையாக அமைந்த
இக்காலகட்டத்தில், முதலாம் இராஜராஜ
சோழன் (கி.பி. 985–1014) மற்றும் அவரது புதல்வர் இராசேந்திரச்சோழன்
(கி.பி. 1012–1044) ஆகியோரின் ஆட்சிக்
காலத்தில், சோழ நாட்டின் இராணுவ அதிகார எல்லை
தென்னிந்தியப் புவியியலைக் கடந்து ஈழமண்டலம் (இலங்கை) வரை விரிவடைந்தது.
இலங்கையில்
கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ்க் கல்வெட்டுகள், தீவின்
தொன்மையான வரலாறு, வணிகத் தொடர்புகள், சமயப் பங்களிப்புகள் மற்றும் அரசியல் மாற்றங்களை அறிந்துகொள்வதற்கான
முதன்மைச் சான்றுகளாகத் திகழ்கின்றன. பேராசிரியர் கா. இந்திரபாலா, ச.பத்மனாதன்,
செ.குணசிங்கம், சி. க. சிற்றம்பலம் மற்றும்
கார்த்திகேசு சிவத்தம்பி போன்ற வரலாற்று அறிஞர்கள் மற்றும் தொல்லியல் துறையினரின்
ஆய்வுகளின் அடிப்படையில் இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுகளின் எண்ணிக்கை, காலவரிசை மற்றும் இடப்பரவல் குறித்த தரவுகள் வழியாக இலங்கை வரலாற்றை
எடுத்துரைக்கலாம்.
இலங்கையில்
இதுவரை கண்டறியப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ள முழுமையான மற்றும் துண்டுக்
கல்வெட்டுகள் 150-க்கும் மேல் உள்ளன. கல்வெட்டுகள் தவிர்த்து,
தமிழி / தமிழ்-பிராமி பொறிக்கப்பட்ட பானையோடுகள், நாணயங்கள் மற்றும் முத்திரைகள் பல நூற்றுக்கணக்கில் யாழ்ப்பாணம்
(ஆனைக்கோட்டை), பூநகரி, மாந்தை
(மாந்தோட்டம்) மற்றும் திசமகாராம ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன.
இலங்கைக்
கல்வெட்டுகளைக் கால அடிப்படையில் நான்கு முதன்மைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அ) தொடக்கக் காலம்: கி.மு. 3-ஆம் நூற்றாண்டு – கி.பி. 3-ஆம் நூற்றாண்டு ஆ) இடைக்காலம் / பல்லவர்-அனுராதபுரப்
பிற்பகுதி: கி.பி. 7-ஆம் – 9-ஆம் நூற்றாண்டு இ) சோழர் ஆட்சிக் காலம்: கி.பி. 993 முதல் 1070 வரை
ஈ) பிற்காலம் & யாழ்ப்பாண அரசு: கி.பி. 12-ஆம் – 18-ஆம்
நூற்றாண்டு.
தொடக்கக்
காலம் எழுத்து முறை தமிழ்-பிராமி / தமிழி ஆகும். அனுராதபுரத்தின்
பாறைக்கையைக் குகைகளில் "தமிழ வணிகர்" (Damila Gahapatikana) அமைத்துக் கொடுத்த குகை தானத்தைக் குறிப்பிடும் கல்வெட்டு, ஆனைக்கோட்டை முத்திரை (Jaffna) தமிழி
மற்றும் சிந்துவெளிப் குறியீடுகள் கலந்த பிராமி எழுத்து பொறித்த முத்திரை (கி.மு. 300)
மற்றும் திசமகாராம நாணயம் தென்னிலங்கையில்
கிடைத்த தமிழ்-பிராமி எழுத்துப் பொறித்த வணிகக் காசுகள். இடைக்காலம் எழுத்து முறை வட்டெழுத்து
மற்றும் தொடக்கக்காலத் தமிழ் எழுத்துக்கள் ஆகும். அனுராதபுரம்
அபயகிரி விகாரை மற்றும் ருவன்வெலிசாய பகுதிகளில் கிடைத்த தமிழ்ப்
பௌத்தக் கல்வெட்டுகள் (தமிழ் பௌத்த வணிகர் சங்கங்கள் வழங்கிய கொடைகள்).
சோழர்
ஆட்சிக் காலம், இக்காலகட்டத்திலேயே மிக அதிக அளவிலான
தமிழ் பாறைக் கல்வெட்டுகளும் தூண்களும் பொறிக்கப்பட்டன. சோழர்காலத் தமிழ் மற்றும்
கிரந்த எழுத்துக்கள். பொலன்னறுவை (ஜனநாதமங்கலம்) சிவன் கோயில்கள்
(வானவன்மாதேவீஸ்வரம்), திருகோணமலை கோணேஸ்வரம், நிலாவெளி, பதவியா ஆகிய இடங்களில் சோழ
அரசர்களின் மெய்க்கீர்த்திகள் மற்றும் நிலக் கொடைகள் பொறிக்கப்பட்டுள்ளன. பொலன்னறுவையில் வேளக் காரப்படை அமைப்பினர்
அமைத்த கல்வெட்டுகள் உள்ளன.
இலங்காத்திலக்க விகாரைக் கல்வெட்டு (கண்டி/கம்பளை காலம் - 14-ஆம் நூற்றாண்டு) இலங்கையின் மிக நீண்ட தமிழ்க் கல்வெட்டு இதுவாகும்.
சிங்கள மன்னன் புவனேகபாகுவின் ஆட்சியில் சிங்கள மொழியிலும் தமிழிலும் ஒரே சுவரில்
பொறிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண அரசு & வன்னியர்
காலப்பகுதியில் திருக்கோவில் (அம்பாறை), கோணேஸ்வரம் செப்பேடுகள், மற்றும் கண்டி
மன்னர்கள் (செனரத், இரண்டாம் ராஜசிங்கன்) வெளியிட்ட தமிழ்
செப்பேடுகள்.
தமிழ்க்
கல்வெட்டுகள் இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.
இலங்கைத் தமிழ்க் கல்வெட்டு காணப்படும் முக்கிய
மண்டலங்கள், வடக்கு மாகாணம் (யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா) கிழக்கு
மாகாணம் (திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை), வடமத்திய மாகாணம் (அனுராதபுரம்,
பொலன்னறுவை, பதவியா) மத்திய/தெற்கு
மாகாணம் (கண்டி, குருநாகல், திசமகாராம)
என வகைப்படுத்தலாம்.
|
மண்டலம்
/ மாவட்டம்
|
முக்கிய
இடங்கள்
|
கல்வெட்டுகளின்
முதன்மைப் பொருள்
|
|
திருகோணமலை
|
காந்தளாய், நிலாவெளி, வெல்கம் விகாரை (ராஜராஜ
பெரும்பள்ளி), கோணேஸ்வரம்
|
சோழர்
கொடைகள், பௌத்த/இந்து அறக்கட்டளைகள், வணிகர் கல்வெட்டுகள்.
|
|
பொலன்னறுவை
|
சிவன்
கோயில் எண் 2, வேளக்காரர் மேடை
|
சோழர்
நிர்வாகம், வேளக்காரப் படை ஒப்பந்தங்கள், திசையாயிரத்து ஐந்நூற்றுவர் வணிகக் குழு.
|
|
அனுராதபுரம்
|
அபயகிரி, சாதாத்தீர்த்தம், பெரிய புளியங்குளம்
|
தமிழ்-பிராமி
குகைக் கல்வெட்டுகள், தமிழ் பௌத்தர் அறக்கொடைகள்.
|
|
மன்னார் & வவுனியா
|
மாந்தை
(திரு his
கோயில்), பெரிய புளியங்குளம்
|
துறைமுக
வணிகக் கணக்குகள், கோயில் திருப்பணிகள்.
|
|
அம்பாறை & மட்டக்களப்பு
|
திருக்கோவில், தம்பிலுவில், வேரமுனை
|
வன்னியர்
செப்பேடுகள், கோயில் நிலக் கொடைகள் (15-18-ஆம் நூற்றாண்டு).
|
|
குருநாகல் & கண்டி
|
புதுமுத்தாவ, லங்காத்திலக்க விகாரை
|
சிங்கள
மன்னர்களின் இருமொழி அரசாணைகள் (Bilingual Edicts).
|
|
|
இக்கல்வெட்டுகளின்
மூலம் வணிகக் குழுக்களின் ஆதிக்கத்தை உணரமுடிகிறது. மணிகிராமத்தார்,
"திசையாயிரத்து ஐந்நூற்றுவர்", "நானாதேசிகள்", "அஞ்சுவண்ணம்" போன்ற
தென்னிந்திய வணிகச் சங்கங்கள் இலங்கையின் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் செலுத்திய
செல்வாக்கைக் கல்வெட்டுகள் நிறுவுகின்றன. சோழ மன்னர்கள்
பௌத்த விகாரைகளுக்கும் (எ.கா: திருகோணமலை வெல்கம் விகாரைக்கு இராஜராஜன் அளித்த கொடை) கொடையளித்ததையும், சிங்கள
மன்னர்கள் தமிழ் மொழியில் சாசனங்கள் பொறித்ததையும் (எ.கா: லங்காத்திலகம்)
இக்கல்வெட்டுகள் சான்றளிக்கின்றன.
இலங்கையைக்
கைப்பற்றி அதற்கு 'மும்முடிச் சோழ மண்டலம்' எனப் பெயரிட்ட சோழர் நிருவாகிகள், பொலன்னறுவையைச்
சுற்றியுள்ள மையப்பகுதியை 'ஜனநாத மங்கலம்' என மாற்றம் செய்து தங்கள் நேரடிப் பாலனத்தின் கீழ் கொண்டு வந்தனர்.
குறிப்பாக, இராசேந்திரச்சோழன் தனது ஆட்சிக் காலத்தில்
தந்தையின் கடல்சார் கடற்படை விரிவாக்கக் கொள்கையை மேலும் தீவிரப்படுத்தி, இலங்கை முழுமையையும் சோழப் பேரரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்தான். இக்காலகட்டத்தில், பேரரசின் பாதுகாப்பை
உறுதிசெய்யவும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு
எல்லைப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும்
தமிழ்நாட்டிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான படைவீரர்கள் ஈழத்திற்கு அழைத்துச்
செல்லப்பட்டனர்.
இலங்கையில்
சோழர் ஆட்சியை நிலைநிறுத்தவும், பொலன்னறுவையில் அமைக்கப்பட்ட
புத்தர் பல் கோயிலைப் (தளதா மண்டபம்) பாதுகாக்கவும் இராசேந்திரனால் 'மூன்றுகை வேளக்காரர்' என்ற சிறப்புப் படைகள்
இலங்கையில் அமர்த்தப்பட்டனர். இராசேந்திரச்
சோழன் கி.பி. 1025-இல் மேற்கொண்ட புகழ்பெற்ற கடாரப்
படையெடுப்பிற்கு இலங்கையின்
துறைமுகங்களான மாந்தை (மாதோட்டம்) மற்றும் திருகோணமலை ஆகியவை மிகமுக்கியமான
கடற்படைத் தளங்களாகப் பயன்பட்டன.
இராசேந்திரச்சோழன்
தனது தாயார் வானவன்மாதேவியின் நினைவாகப் பொலன்னறுவையில்
கற்றளியால் ஆன சிவன் கோயில் ஒன்றைக் கட்டினார். இராசேந்திரச்சோழன் இலங்கை மீது படையெடுத்து, பல தலைமுறைகளாக இலங்கையில் பாதுகாக்கப்பட்ட பாண்டியர்களின் தொன்மையான
மணிமுடி யையும், செங்கோலையும், இலங்கை
அரசரின் மணிமுடியையும் கைப்பற்றிச் சோழ நாட்டிற்குக் கொண்டுவந்தார். இதனை
இராசேந்திரனின் மெய்க்கீர்த்திகள் பெருமையுடன் குறிப்பிடுகின்றன.
இதனால் இராசேந்திரசோழனுக்கு முடி கொண்டான் எனும் விருதுப்பெயர் விளங்கலாயிற்று. முடிகொண்டான்
மிகவும் மதிக்கப்பட்ட சோழப்பட்டங்களில் ஒன்று, காலம்காலாமாக வாழ்விடமாக கொண்டிருந்த
பழையறையை முடிகொண்டசோழபுரம் எனப் பெயர் மாற்றியதோடு அதற்கென்று முடிகொண்டான் எனும்
புது ஆற்றையும் வெட்டினார். தமிழகத்தில் பல ஊர்கள் முடிகொண்டான் எனும் பெயரை இன்றும்
சுமந்து நிற்கின்றன. புதிய தலைநகரான கங்கைகொண்டசோழபுரத்தில் முடிகொண்டான் திருமாளிகை
எனும் அரண் மனையையும் அமைத்தார்.
இலங்கை
சென்றடைந்த சோழர் படைகள், குறிப்பாக 'வலங்கை வேளைக்காரர்', 'சிறுதனத்து வேளைக்காரர்'
மற்றும் 'மூன்றுகை மகாசேனையினர்',
சோழரின் ஆட்சி இலங்கையில் வீழ்ச்சியடைந்த பின்னரும்
தாய்நாட்டிற்கு முழுமையாகத் திரும்பவில்லை. மாறாக,
அவர்கள் இலங்கையின் வட பகுதியான யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கும்,
தெற்கின் சிங்கள அரசுகளுக்கும் இடைப்பட்ட காடடர்ந்த எல்லை
நிலப்பரப்புகளில் (அடவிப் பற்றுகள்) நிரந்தரமாகக் குடியேறினர். இக்குடியேற்றத்தின்
விளைவாக உருவானதே இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'வன்னிமை' (Vanni Chieftaincies) குறுநில
ஆட்சி அமைப்பாகும்.
இலங்கைத்
தீவெங்கிலும் தொல்லியல் அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட சோழர் காலத் தமிழ்க்
கல்வெட்டுகள், அங்கு அமைந்திருந்த படை முகாம்கள், 'வலங்கை வேளைக்காரர்' படைகளின் நிருவாக அமைப்பு
மற்றும் 'படைப்பற்று' நிலக்
கொடைகள் குறித்த முதன்மை ஆவணங்களாகத் திகழ்கின்றன. அவை கீழே விரிவாக
அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.
|
கல்வெட்டின்
பெயர் / தொல்லியல் அமைவிடம்
|
அரசன் /
ஆட்சியாண்டு
|
சாசனத்தின்
முதன்மை உள்ளடக்கமும் இராணுவச் செய்திகளும்
|
|
பொலன்னறுவை
தமிழ்க் கல்வெட்டு (SII Vol. 4, No. 1396)
|
முதலாம்
விஜயபாகு (கி.பி. 1110)
|
'மூன்றுகை மகாசேனையான தெரிந்த வலங்கை வேளைக்காரர்' மற்றும் 'சிறுதனத்து வேளைக்காரர்' புத்தரின் புனிதப் பல் தாதுக் கோயிலைப் (தளதா கடிகாய்) பாதுகாக்கும்
பொறுப்பை ஏற்றுக்கொண்டமை.
|
|
பதவியா
தமிழ்க் கல்வெட்டு - 1 (Epigraphia Zeylanica Vol. 3)
|
முதலாம்
ராஜராஜன் / இராசேந்திரச்சோழன்
|
பதவியாவில்
(ஐயம்பொழில் பட்டணம்) 'மூன்றுகை வேளைக்காரர்' நிலைகொண்டிருந்த படை முகாம் மற்றும் வணிகக் குழுக்களின் பாதுகாப்பு
ஏற்பாடுகள்.
|
|
பதவியா
தமிழ்க் கல்வெட்டு - 2
|
கி.பி. 11-ஆம் நூற்றாண்டு
|
வேளைக்காரப்
படைகளின் அதிகாரிகளால் அளிக்கப்பட்ட அறக்கொடைகள் மற்றும் கோயில் திருப்பணிகள்.
|
|
மகாதிட்ட
(மாந்தை) ராஜராஜராஜேஸ்வரம் கல்வெட்டு
|
முதலாம்
ராஜராஜன் (கி.பி. 1005)
|
வடமேற்கு
இலங்கையின் மாந்தை வணிகத் துறைமுகத்தைப் பாதுகாத்த சோழர் 'சிறுதனத்து வேளைக்காரர்' படைகளின் சாசனக்
குறிப்பு.
|
|
அனுராதபுரம்
சோழர் கால தமிழ்க் கல்வெட்டு
|
இராசேந்திரச்சோழன்
I
|
அனுராதபுரத்தின்
பாதுகாப்பு முகாம்களில் இருந்த சோழ அதிகாரிகளாலும் 'வலங்கை' படைத் தலைவர்களாலும் வழங்கப்பட்ட
நிலக்கொடைகள்.
|
|
கண்டளாய்
(சதுர்வேதிமங்கலம்) கல்வெட்டு
|
முதலாம்
ராஜராஜன் / இராசேந்திரச்சோழன்
|
கண்டளாய்
நீர்ப்பாசனக் குளத்தைச் சுற்றியுள்ள எல்லைக் காவல் அரண்களில் வீரர்கள்
குடியமர்த்தப்பட்ட செய்தி.
|
அடப்பனார்கள் மற்றும் வன்னியனார்களிடம் கோயில் நிர்வாகம்
ஒப்படைக்கப்பட்ட செய்தி 'கோணேசர் கல்வெட்டு' என்ற செய்யுள் ஏட்டு நூலில் இடம்பெற்றுள்ள வரலாற்று மரபுச் செய்தி (Tradition)
மட்டுமே. கல்வெட்டியல் பூர்வமாக, சோழர்
காலத்திய உத்தியோகபூர்வக் கற்சாசனங்களில் இதற்கு நேரடி ஆதாரங்கள் இல்லை.
தமிழகக் கல்வெட்டுகள்
மற்றும் சாசன ஆதாரங்களின் அட்டவணை:
இலங்கைக்கு அனுப்பப்பட்ட வேளைக்காரப் படைகளின் தாயகப்
பின்னணியை நிறுவுவதற்குக் துணைபுரியும் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளின் தொகுப்பு
கீழே தரப்பட்டுள்ளது:
|
கல்வெட்டின்
பெயர் / அமைவிடம்
|
அரசன் /
காலகட்டம்
|
சாசனத்தின்
முதன்மை உள்ளடக்கமும் இராணுவச் செய்திகளும்
|
|
தஞ்சாவூர்
பெரிய கோயில் கல்வெட்டு (SII Vol. 2, No. 95)
|
முதலாம்
ராஜராஜ சோழன்
|
சோழ
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரட்டப்பட்டு தஞ்சையில் குடியமர்த்தப்பட்ட 'தெரிந்த வலங்கை வேளைக்காரப் படைகளின்' பேரடைவு.
|
|
திருவாலங்காட்டுச்
செப்பேடுகள் (SII Vol. 3, No. 205)
|
இராசேந்திரச்சோழன்
(கி.பி. 1018)
|
இராசேந்திரச்சோழன்
ஈழமண்டலத்தின் மீது தொடுத்த மாபெரும் கடற்படைப் படையெடுப்பு, இலங்கை அரசனைச் சிறைபிடித்தல் மற்றும் சோழ இராணுவ முகாம்கள்
அமைக்கப்பட்ட விவரங்கள்.
|
|
திருக்கோவிலூர்
வீரட்டேஸ்வரர் கல்வெட்டு
|
முதலாம்
குலோத்துங்கன் (கி.பி. 11-ஆம் நூ.)
|
முதலாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் இலங்கையில்
சோழர் ஆட்சிக்கு எதிராகக் கலகங்கள் வெடித்தபோது, அதை அடக்க நடுவில் நாட்டு மலையமான்களின் படைகள்
அனுப்பப்பட்டன. இருப்பினும், இக்கல்வெட்டுகளில்
'நடுவில் நாட்டு போர்க்குடிகள்' என்று பொதுச்சொல்லாக வருவதை விட, 'மலையமான் படைகள்' மற்றும் 'வேளைக்காரப் படைகள்' என்றே பதிவாகியுள்ளன
|
|
பெண்ணாகடம்
பிரளயகாலேஸ்வரர் கல்வெட்டு
|
விக்கிரம
சோழன் (கி.பி. 12-ஆம் நூ.)
|
பெண்ணாகடம் பகுதியில்
விக்கிரம சோழன் மற்றும் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் 'படைப்பற்று' மற்றும் 'காவல் காணி' நிலங்கள் வழங்கப்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. ஆனால், கல்வெட்டுகளின் அசல் வரிகளில் 'படைப்பற்று' என்ற சொல் நேரடியாக வருகிறதே தவிர, "இலங்கைப் போரில் பங்கேற்றதற்காக வழங்கப்பட்டது" என்ற
நேரடி இணைப்புக் குறிப்பு இல்லை; அது வரலாற்று ஆய்வாளர்களின் ஒப்பீட்டுப் பகுப்பாய்வு
முடிவாகும் (Analytical Inference).
|
சங்க
காலத்தில் தொண்டையர் உருவாகக் காரணமாக இருந்த அதே ஈழத்துத் தொடர்பு, கி.பி. 11-ஆம் நூற்றாண்டில்
இராசேந்திரச்சோழனின் ஆட்சிக் காலத்தில் இராணுவப் புவிசார் அரசியலாகப் பரிணமித்தது.
சோழர் இராணுவ முறைமை என்பது அரசரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த படைகள்,
குறுநில மன்னர்களின் படைகள் மற்றும் சமூகங்கள்/வணிகச்
சாத்துகளால் பராமரிக்கப்பட்ட தன்னாட்சிப் படைகள் ஆகிய பல்வேறு பிரிவுகளை
உள்ளடக்கிய ஒரு கூட்டுமைப்பாகும். சோழர் சாசனங்களில் 'பெருந்தனம்'
(உயர்மட்ட அதிகாரிகள்/படைகள்) மற்றும் 'சிறுதனம்'
(இடைநிலை வீரர்கள் மற்றும் உள்ளூர் படைப்பிரிவுகள்) என்ற இரு
முதன்மை நிருவாகப் பிரிவுகள் காணப்படுகின்றன. இவை இலங்கை சோழர் ஆட்சி அதிகாரத்தைக்
கைக்கொண்டன.
தந்தை
முதலாம் ராஜராஜ சோழனின் இலங்கைப் படையெடுப்பைத் தொடர்ந்து, கி.பி. 1017-இல் இராசேந்திரச்சோழன் இலங்கையின்
எஞ்சிய தெற்குப் பகுதிகளையும் (ரோகண பிரதேசம்) முழுமையாக வெற்றி கொண்டான்.
ஈழத்தின் மன்னன் ஐந்தாம் மகிந்தனைச் சிறைபிடித்துச் சோழ நாட்டிற்கு அனுப்பினான். இராசேந்திரச்சோழன்
அமைத்த இராணுவ அமைப்பில் 'வேளைக்காரர்கள்' முதன்மைப் பங்கு வகித்தனர். 'வேளை' என்றால் ஆபத்தான அல்லது இறுக்கமான தருணம் என்று பொருள். அரசனுக்கு
அல்லது தான் ஏற்றுக்கொண்ட கடமைக்கு ஆபத்து வரும் வேளையில், தன் உயிரையும் பொருட்படுத்தாது போரிட்டுப் பாதுகாப்பளிக்கும் தமிழர்
போர்க்குடி வீரர்களே வேளைக்காரர்கள் எனப்பட்டனர்.
வரலாற்று
ரீதியாக,
தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் குறிப்பாக பெண்ணை யாற்றிற்கும்
வெள்ளாற்றிற்கும் இடைப்பட்ட நடுவில் நாடு (தற்போதைய பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள்) மற்றும் தொண்டை மண்டலம் (செங்கல்பட்டு,
காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட் டங்கள்)
போர்க்குடிச் சமூகங்கள் நிறைந்த பகுதியாகத் திகழ்ந்தன.
திருக்கோவிலூர்
மற்றும் அதனைச் சுற்றியுள்ள கீழூர், மேலூர் (நடுவில்
நாடு/மலாடு பகுதி) வீரட்டேஸ்வரர் மற்றும் சுற்றுக் கோயில் சாசனங்களில், சோழர் ஆட்சிக் காலத்தில் (10 முதல் 12-ஆம் நூற்றாண்டு வரை) குறுநில மன்னர்களாக விளங்கிய மிலாடுடையார் /
மலையமான்கள் (சேதிராயர்கள்) மற்றும் அவர்களின் கீழ் இயங்கிய போர்க்குடிகள்
புரிந்த சேவைகள், நிலம் மற்றும் நந்தா விளக்கு தானங்கள்
பதிவாகியுள்ளன.
சோழ அரசர்களான முதலாம் இராஜராஜன், முதலாம்
இராஜேந்திர சோழன், விக்கிரம சோழன் மற்றும் முதலாம்
குலோத்துங்கன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில், திருக்கோவிலூர்
வீரட்டேஸ்வர மகாதேவருக்கு மிலாடுடையார் களாலும் போர்க்குடிகளாலும் நந்தா
விளக்குகள் அளிக்கப்பட்டன.
இக்கொடைச் சாசனங்களில் நிலக்கிழார்களும் குறுநில மன்னர்களும் சோழ
மன்னனின் பெயரைத் தங்கள் பெயருக்கு முன்னொட்டாக இணைத்துக்கொண்டனர் (எ.கா. இராஜேந்திர
சோழ மிலாடுடையான், குலோத்துங்க சோழ சேதியராயன்).
நடுவில்
நாட்டின் (சேதிநாடு/மலாடு) போர்க்குடிகள் சோழர் இராணுவத்தில் பிரதானமாகச் செயல்பட்டனர்.
போர்க்களத்தில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்கு, அவர்கள் வாழ்வாதாரத்திற்காகத் திருக்கோவிலூர்ச் சூழலில் வழங்கப்பட்ட
வரியில்லா நிலமானியமே 'இரத்தக் காணி' அல்லது 'உதிரப்பட்டி' எனச் சாசனங்களில் குறிப்பிடப்படுகிறது. இராணுவப் படைகள்
குடியிருப்பதற்கும், போருக்குப் பின் வீரர்கள் விவசாயம்
செய்து வாழ்வதற்கும் ஒதுக்கப்பட்ட கிராமங்கள் அல்லது நிலப்பகுதிகள் 'படைப்பற்று' எனக் குறிக்கப்பட்டன.
சோழர் கல்வெட்டுகளில் சேவை மானிய நிலங்கள் பொதுவாக 'படைப்பற்று', 'படையிலக்கம்', 'படை மான்யம்', அல்லது 'காவற்காணி' என்ற சொற்களாலேயே அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இராணுவ முகாம்கள் மற்றும் படை குடியிருப்புகள் 'படைவீடு', 'படைப்பற்று', 'படைக்கடகம்', அல்லது 'படைக்கண்டம்' என்றே பொறிக்கப்பட்டுள்ளன.
சோழமண்டலக்
கல்வெட்டுகள் பெரும்பாலும் கோயில்களுக்கு நிலம், தங்கம் அளிப்பது பற்றியதாக இருக்கும் வேளையில், நடுவில் நாட்டுச் சாசனங்களில் (திருக்கோவிலூர், எண்ணாயிரம், பெண்ணாகடம், கிராமம் போன்றவை) இராணுவ வீரர்கள், படைப்பற்று
நிலங்கள், உதிரப்பட்டி (இரத்தக் காணி) பற்றிய குறிப்புகளும் இராணுவ முகாம்களும் ஒப்பீட்டளவில் மிக அதிக
அடர்த்தியுடன் காணப் படுகின்றன.
நடுநாடு (திருக்கோவிலூர், விருத்தாசலம், பெண்ணாகடம்)
மற்றும் தொண்டை மண்டலக் கல்வெட்டுகளில் 'படைப்பற்று' என்ற சொல் பரவலாகக் காணப்படுகிறது. இராணுவச் சேவை செய்த வீரர்களுக்கு
வரிவிலக்குடன் வழங்கப்பட்ட காணி/நிலங்களை இது குறிக்கிறது.
14 முதல் 16-ஆம்
நூற்றாண்டுகளில் (குறிப்பாக விஜயநகர மற்றும் நாயக்கர் காலத்தில்) நடுநாடு மற்றும்
தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த பள்ளி/வன்னிய சமூகத்தினர் தங்களை ஒருங்கிணைத்துக்
கொள்ள 'பன்னாட்டார்' (அல்லது பன்னாட்டவர்) என்ற
சமூக-இராணுவ சபையை/அமைப்பை அமைத்துக் கொண்டனர். இவர்கள் தங்களின் 'படைப்பற்று' நிலங்கள் மீதான வரிகளைத் தீர்மானிக்கவும், கோயில் நிவந்தங்களை நிர்வகிக்கவும் கூட்டாகச் செயல்பட்டனர்.
கல்வெட்டுகளில் 'பள்ளி' என்ற சொல் போர்க்குடியைக் குறிக்கும் சமூகப் பெயராகவும், சமண/பௌத்த/சைவ மடங்கள் அல்லது வழிபாட்டு இடங்களைக்
குறிக்கும் சொல்லாகவும் பயின்று வருகிறது. சோழர்கள் ஆட்சிக் காலத்தில், தொண்டை மண்டலம்,
நடுநாடு (திருக்கோவிலூர், விருத்தாசலம்,
பெண்ணாகடம் பகுதிகள்) மற்றும் வனாந்தர எல்லைப் பகுதிகளில் 'பள்ளி' / 'வன்னியர்' / 'படையாட்சி'
சமூகத்தினர் காடுகளை அழித்து விவசாய நிலங்களாக மாற்றுவதிலும் (காடழித்து
நாடாக்கல்), எல்லைப் பாதுகாப்புப் பணிகளிலும் (எல்லைக்காவல்)
முதன்மையான போர்க்குடிகளாகச் செயல்பட்டனர்
நடுநாட்டின்
18
பகுதிகளைச் சேர்ந்த 'பள்ளி/படைப்பள்ளி'
வீரர்களின் கூட்டமைப்பான பன்னாட்டார் சபை, சுய அதிகாரமிக்க அமைப்பாகச் செயல்பட்டு அரசாணைகள் மற்றும் கோயில்
தானங்களை வெளியிட்டுள்ளது. நடுவில் மண்டலத்தில் 'படைப்பள்ளி'
என்ற சொல்லோடு 'பன்னாட்டார்' என்ற சொல் இணைந்து வருவதிலிருந்து, 15 மற்றும்
16-ஆம் நூற்றாண்டுகளில் பள்ளிகள் (படையாட்சிகள்) தங்களின்
படைப்பற்று நிலங்களின் மீது கூட்டு அதிகாரமும், உள்ளூர்
வரிகளைத் தள்ளுபடி செய்யும் உரிமையும் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த சமூக-இராணுவக்
கூட்டமைப்பாக (Corporate Body) இயங்கினர் என்பது தெளிவாகிறது
என்கிறார் முனைவர் நோபோரு கரஷிமா (Noboru
Karashima) அவர்கள் தமது "Towards a New
Formation: South Indian Society under Vijayanagar Rule" (1992) நூலின் 3-ஆம் அத்தியாயத்தில் ("The
Right and Left Hand Castes and the Padiyatchis"), 'பன்னாட்டார்'
மற்றும் 'பள்ளிகள்' சார்ந்த கல்வெட்டு வரிகளை நேரடியாக விளக்கியுள்ளார்.
வட
மாவட்டங்களின் (தொண்டை மண்டலம் மற்றும் நடுவில் நாடு) பள்ளி அல்லது படையாட்சி
சமூகத்தினர் பதினொன்றாம் நூற்றாண்டு முதல் சோழ இராணுவத்தின் முக்கிய அங்கமாக
விளங்கினர். சோழர் கல்வெட்டுகளில், அவர்கள் ஆட்சிக்
காலத்தில், இச்சமூக உறுப்பினர்கள் பல்வேறு இராணுவப்
பிரிவுகளை (படைகள்) உருவாக்கியதாகப் அடிக்கடி
குறிப்பிடப்படுகின்றனர். படைப்பள்ளி என்ற சொல் பல சாசனங்களில் இராணுவக்
முகாம் அல்லது இந்த உழவு-போர்க்குடி வீரர்களின் குடியிருப்புகளைக் குறிக்கப்
பயின்று வருகிறது. முதலாம் இராஜராஜனும்
இராசேந்திரச்சோழனும் தங்கள் பேரரசை ஈழத்தை (இலங்கை) நோக்கி விரிவுபடுத்தியபோது,
இந்த போர்க்குடிக் குழுவினர் முதன்மை வலங்கை மற்றும் வேளைக்காரப்
படைகளில் பெருமளவில் திரட்டப்பட்டனர் எனலாம்.
சோழர்
சாசனத் தரவுத்தளத்தைப் பகுப்பாய்வு செய்யும்போது, தொண்டை
மண்டலம் மற்றும் நடுவில் நாட்டிலிருந்து உருவான வலங்கை இராணுவப் பிரிவுகள் அதிக
அளவில் செறிந்து காணப்படுவதைக் காட்டுகிறது. பள்ளி உழவு-போர் வீரர்களை
முதன்மையாகக் கொண்ட இக்குழுவினர், சோழ மன்னர்களால்
உள்நாட்டு வேளாண் விரிவாக்கம் மற்றும் இலங்கையிலான கடல்கடந்த இராணுவப்
படையெடுப்புகள் ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப்பட்டனர்
சோழர்
கால இராணுவக் குடியமர்வு மற்றும் ஈழத்து வன்னிமையின் தோற்றம் குறித்து ஆராய்ச்சி
செய்த முதன்மைச் சாசனவியல் மற்றும் வரலாற்று அறிஞர்களின் கூற்றுகள் பகுப்பாய்வு
செய்யப்படுவது
இதை சரியாக விளங்கிக் கொள்ள உதவும்.
பதினொன்றாம்
நூற்றாண்டில் இலங்கையில் சோழர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, வேளைக்காரர் மற்றும் வலங்கைப் படைகள் உள்ளிட்ட தென்னிந்திய இராணுவப்
பிரிவினர் தீவை விட்டு வெளியேறாமல் அங்கேயே தங்கினர். அவர்கள் வடக்கே அமைந்த
யாழ்ப்பாண தீபகற்பத்திற்கும் தெற்கே இருந்த சிங்கள அரசாங்களுக்கும்
(இராச்சியங்களுக்கும்) இடைப்பட்ட அடர்ந்த வனப்பகுதிகளில் ('அடவி' எனும் வன்னிப் காடுகள்) படிப்படியாகக்
குடியேறினர். இக்குடி யேற்றங்களே இடைக்கால வன்னியமை (வன்னி சிற்றரசுகள்)
ஆட்சியதிகாரம் உருவாவதற்கான அரசியல் அடிப்படையாக அமைந்தன
(Pathmanathan,
1979, pp. 58–64 The Kingdom of Jaffna: Part 1 (circa A.D.
1250–1450).).
மகாவம்சமும்
பொலன்னறுவை வேளைக்காரர் கல்வெட்டு உள்ளிட்ட அக்காலத் தமிழ் கல்வெட்டுகளும் 'சிறுதனத்து வேளைக்காரர்', 'வலங்கை வேளைக்காரர்'
போன்ற சோழர்களின் சிறப்புமிக்க படைப்பிரிவினர் இலங்கையில்
இருந்ததை உறுதி செய்கின்றன. பொலன்னறுவையின் மத்திய அரசு வீழ்ச்சியடைந்தபோது,
இப்படைத் தலைவர்கள் நிலவுடமையாளர்களாகவும் உள்ளூர்
தலைவர்களாகவும் உருவெடுத்தனர். அவர்கள் அடர்ந்த வனப்பகுதிகளில் தன்னாதிக்கத்தை
நிலைநாட்டி, உள்ளூர் பிரபுத்துவக் குழுக்களுடன் திருமண
உறவு கொண்டு, 'வன்னியர்' எனும்
நிலப்பிரபுத்துவப் பட்டத்தைச் சூடிக்கொண்டனர். இதுவே வன்னியமை சிற்றரசு முறைமை
உருவாவதற்குக் காரணமானது.( Pathmanathan, S. (1978). The
Kingdom of Jaffna: Part 1 (circa A.D. 1250–1450). Arul M. Rajendran. (pp.
122–135).
சோழ
ஆட்சியாளர்களால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டவர்களும், பின்னர் சிங்கள மன்னர்களால் பணியமர்த்தப்பட்டவர்களுமான வேளைக்காரர்
உள்ளிட்ட படையினர், திராவிடக் குடியேற்றங்கள்
விரிவடைவதில் மிக முக்கியப் பங்காற்றினர். மத்திய அதிகாரம் வீழ்ச்சியடைந்தபோது,
இப் படையினர் மீண்டும் தங்களின் தாய்நாட்டிற்குத் திருப்பி
அனுப்பப்படவில்லை; மாறாக, அவர்கள்
விவசாயத்திலும் உள்ளூர் நிர்வாகத்திலும் கவனம் செலுத்தி, தீவின்
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிரந்தரக் குடியேறிகளாக மாறினர்.( Indrapala,
K. (1965). Dravidian settlements in Ceylon and the beginnings of the Kingdom
of Jaffna [Unpublished doctoral dissertation]. University of London. (p.
154).
சோழர்
ஆட்சியின் போது இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட தென்னிந்திய இராணுவத்தினரும், முதலாம் விஜயபாகு மற்றும் அவனுக்குப் பின்வந்த மன்னர்களின்
ஆட்சிக்காலத்தில் படையாக வந்தவர்களும், அங்கு உருவான
நிரந்தரத் தமிழ் குடியேற்றங்களின் மிக முக்கியப் பகுதியாக அமைந்தனர். இந்த
இராணுவக் குழுக்களுள், வேளைக்காரர்களே மிகவும்
குறிப்பிடத்தக்கவர்களாக இருந்தனர்.சோழர்களின் அதிகாரம் வீழ்ச்சியடைந்ததைத்
தொடர்ந்து வந்த காலத்தில், இப்படையினருள்
பலர் தீவின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக வடக்கு
மற்றும் தெற்கு இராச்சியங்களுக்கு இடைப்பட்ட எல்லைப் பகுதிகளில் நிரந்தர மாகக்
குடியேறினர்.( Indrapala, K. (2005). The Evolution of an Ethnic
Identity: The Tamils in Sri Lanka C. 300 BCE to C. 1200 CE. Vijitha Yapa Publications
/ Kumaran Book House. p. 212)
இலங்கையிலிருந்த வேளைக்காரப் படைகள் தங்களை 'மகாசென்னையார்' என்றும் 'மகாதந்திரம்' என்றும் அழைத்துக்கொண்டனர். இச்சேனைகளின் உட்பிரிவுகளாக 'வலங்கை' அமைப்புகள்
செயற்பட்டதை இலங்கைத் தொல்லியல் பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா மற்றும்
பேராசிரியர் சி. பத்மநாதன் ஆகியோர் தங்களது ஆய்வுகளில் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டின் பிற மண்டலங்களான சோழமண்டலம் (காவிரிப் படுகை), பாண்டிமண்டலம், கொங்குமண்டலம் ஆகியவற்றோடு ஒப்பிடும்போது, 'பள்ளி’, 'படையாட்சி', 'வன்னியர்' / 'வன்னியநாயக்கன்' ‘பன்னாட்டார்’ ஆகிய சொற்களும், அவை சார்ந்த நிலமானியக் கொடைகளும் மிக அதிக அடர்த்தியுடன் (High
Density) பதிவாகியுள்ள
சாசனப் புவியியல் மண்டலங்கள் நடுவில் நாடும் தொண்டை மண்டலமும் மட்டுமே.
இப்பகுதிகளில் 'படைப்பற்று' (இராணுவக் குடியிருப்பு
நிலங்கள்), 'பள்ளி'
மற்றும் 'பன்னாட்டார்' (18 நாட்டுப் படைப்பள்ளி கூட்டமைப்பு) ஆகிய சொற்கள் சோழர் காலம்
தொட்டு விஜயநகர/நாயக்கர் காலம் வரை தொடர்ச்சியாக அதிக அடர்த்தியில் கிடைக்கின்றன. 'வன்னியர்', 'வன்னிய
நாயக்கன்',
'படைப்பற்றுத் தலைவர்கள்', 'பள்ளி' மற்றும் 'சம்புவரையர்' ‘காடவராயர்’ ‘சேதியராயர்’ (வன்னியக் குறுநில மன்னர்கள்) குறித்த சாசனங்கள் மிகச்
செறிவாகப் பதிவாகியுள்ளன.
எல்லைப்புற இராணுவ அரணாக நடுவில் நாடும் தொண்டை மண்டலமும் பல்லவர் காலம் தொட்டே
வடக்கிலிருந்து வரும் படையெடுப்புகளைத் தடுக்கும் முதன்மை அரணாக இருந்தன. இதனால், சோழ அரசர்களும் விஜயநகர அரசர்களும் இப்பகுதிகளில் 'பள்ளி' சமூகப் போர்க்குடிகளை அதிகளவில் குடியமர்த்தி, அவர்களுக்குக் காணியாட்சியாகக் கொடுத்துப் 'படைப்பற்று' நிலங்களை உருவாக்கினர்.
பிற்காலச் சோழர் காலத்தில் நடுவில் நாட்டையும் தொண்டை
மண்டலத்தையும் சுய அதிகாரத்துடன் ஆட்சி செய்த காடவராயர்கள் மற்றும் சம்புவரையர்கள் தங்களை 'வன்னியர்' மற்றும் 'பள்ளி'க் குடிகளின் தலைவர்களாகக் கல்வெட்டுகளில் பறைசாற்றிக்
கொண்டனர் (எ.கா: திருவண்ணாமலைக் கல்வெட்டுகளில் சம்புவரையர் சாசனங்கள்). 15-16-ஆம் நூற்றாண்டுகளில் விஜயநகர ஆட்சிக்கு எதிராக நடுவில்
நாட்டின் 18 நாடுகளைச் சேர்ந்த
படைப்பள்ளி வீரர்கள் ஒன்றிணைந்து 'பன்னாட்டார்' என்ற அமைப்பை
உருவாக்கியது இப்பகுதியில் மட்டுமே நிகழ்ந்தது என முனைவர் நோபோரு கரஷிமா தனது ஆய்வில் நிறுவியுள்ளார்
தமிழ்நாட்டுக்
கல்வெட்டுகளின் பரவலையும், சாசனப் புவியியலையும்
அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில்
காணப்படும் 'படைப்பற்று' நிலக்கொடைகள்,
'வலங்கை 98' படைத்திரட்சி பகுதிகள்
மற்றும் 'பள்ளி' குடியிருப்புப் பகுதிகளைக்
கணினியில் தரவுத் தளமாகப் பதிவு செய்து, அவற்றை இலங்கைக்
கல்வெட்டுகளோடு ஒப்பிட்டு நோக்கும் பொழுது, அவ்வொப்பீட்டின்
வழியே, இலங்கைக்கு அனுப்பப்பட்ட வேளைக்காரப்படை களின்
தாய்வீடு நடுவில் நாடு மற்றும் தொண்டை மண்டலம் எனலாம். அவ்வீரர்கள் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி போர்க்குடிகள் எனத் துணியலாம்.
பேராசிரியர்கள்
இந்திரபாலா மற்றும் பத்மநாபன் ஆகியோரின் ஆய்வுகள் இலங்கைக் கல்வெட்டுகளை
மட்டுமே முதன்மைச் சான்றுகளாகக் கொண்டு அமைக்கப்பட்டவை. இலங்கையின் பொலன்னறுவை
மற்றும் திருகோணமலைக் கல்வெட்டுகளில் "தெரிந்த
வலங்கை வேளைக்காரர்" என்ற படைப் பெயர் நேரடியாக
வருகிறதே தவிர, அச்சாசன வரிகளில் அவர்தம் சொந்த ஊர்களோ அல்லது
இனக்குழுப்பெயர்களோ முழுமையாக இடம்பெறவில்லை. எனவே,
அவர்கள் இவர்களை "தென்னிந்திய சோழப் படைகள்" என்ற
பொதுவான சொல்லாட்சியோடு நிறுத்திக் கொண்டனர். அவை எங்கிருந்து திரட்டப்பட்டவை
என்பது அவர்களின் ஆய்வு எல்லையைக் கடந்தது ஆகும்.
தமிழ்நாட்டு
தரவுகள் அதன் மீதான ஆய்வு கருத்துக்கள் நடுநாட்டின் பள்ளிகள், படைப்பங்கேற்பு, பன்னாட்டார்
எனும் அவர்களின் நடுநாட்டு அமைப்பு பற்றியச் செய்திகளைத் தருகிறது. இலங்கைக்கு அனுப்பப்பட்ட வலங்கை வேளைக்காரப் படைகளின் தாய்வீடு நடுவில்
நாடு மற்றும் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த பள்ளி போர்க்குடிகள் என்பதை சான்றுகளின் அடிப்படையில் உணரமுடிகிறது.
இலங்கைக்
கல்வெட்டுகளை மட்டும் நோக்கிய ஆய்வாளர்கள் (இந்திரபாலா, பத்மநாபன்) அப்படைகள் வன்னியர்களாக மாறிய "இலங்கை முனை" வரலாற்றைக் கூற,
தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளோடு ஒப்பிட்டு
சாசங்கள் அப்படைகளின் தாயகப் பின்னணியை வெளிப்படுத்திய "தென்னிந்திய முனை" வரலாற்றை எடுத்தியம்பும்
பொழுது, இலங்கைக்குச் சென்ற படைவீரர்கள் தமிழ்நாட்டின் நடுவில்
நாட்டுப் போர்க்குடிகளான “பள்ளிபோர்க்குடிகள்" என்று
கூறுவதும், அவர்கள் தமிழ்நாட்டில் வன்னியர் எனத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதும்
பத்மநாபன் "அவர்கள் இலங்கையில் வன்னி நிலப்பரப்பைக்
கைப்பற்றி வன்னியர் என்ற குறுநில அதிபர்களாக மாறினார்கள்" என்று கூறுவதும் ஒன்றோடொன்று
இயல்பாக இணையும் ஒரு வரலாற்றுக் சங்கிலியின் இரு முனைகளே ஆகும்.
இலங்கையின் வரலாற்றுப் சூழலில் 'வன்னி' என்ற சொல் உருவானதற்கு 'வனம்' (காடு/அடவி சார்ந்த நிலமும் அதன் தன்னாட்சி ஆட்சியாளர்களும்)
என்பதே முதன்மையான புவியியல் காரணியாகும்.அதேநேரத்தில், அச்சொல்லிற்கு
ஒலியியல் ரீதியாகவும், அக்காலகட்ட அரச உருவாக்கச்
குறியீடாகவும் 'வஹ்னி' (அக்னி) என்ற
வடமொழித் தற்பவத் தொடர்பும் இணையான ஒரு சான்றாகக் கல்விப்புலத்தில் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
சமஸ்கிருதத்தில் 'வஹ்னி' (தீ/அக்னி) என்றும், தமிழில் 'வன' (காடு/அடவி) என்றும் குறிப்பிடப்படும் சொற்களிலிருந்து 'வன்னி' உருவானது. இலங்கையில் பொலன்னறுவை பேரரசின் வீழ்ச்சிக்கு பின் (13-ஆம் நூற்றாண்டு), யாழ்ப்பாண அரசிற்கும் தெற்கே இருந்த சிங்கள அரசுகளுக்கும் இடைப்பட்ட அடர்ந்த
காட்டுப் பகுதியை 'வன்னி நிலம்'என்று
அழைத்தனர். சோழர் மற்றும்
பாண்டியர் ஆட்சிக்காலத்தில், எல்லையோரக்
காடுகளையும் படைகளையும் நிர்வகித்த அதிகாரிகளுக்கு 'வன்னியனார்' / 'வன்னியர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது. பின்னாளில் இதுவே குறுநில ஆட்சியாளர்களைக் குறிக்கும் அதிகாரப் பட்டமாக (Title of
Feudal Chiefs) மாறியது. தென்னிந்தியாவிலிருந்து
(குறிப்பாகத் தமிழகத்தின் வட மற்றும் நடுப் பகுதிகளிலிருந்து) இலங்கைக்குச் சென்று
குடியேறிய போர்க்குடிகளும் அவர்களின் அதிகார அமைப்புகளுமே 'வன்னி' என்ற சொல்லின் வரலாற்று முகவரியாக இலங்கையில் உருவெடுத்தன
எனக்
கூறலாம்.
பிற்காலச் சோழர், விஜயநகர மற்றும் நாயக்கர் காலகட்டங்களில் (12 - 16-ஆம்
நூற்றாண்டுகள்), காடவராயர்கள் மற்றும் சம்புவரையர்கள் தங்களை
'வன்னிய குலத்தவர்' (அக்னி குலத்தவர் /
அக்னி வம்சத்தவர்) என வடமொழி-தமிழ் கலப்பு மெய்க்கீர்த்திகளிலும் சாசனங்களிலும்
பொறித்துக் கொண்டனர். இது ஒலியியல் அடிப்படையில் பிராகிருதத் தற்பவ விதிகளுக்குப் பொருந்தினாலும், இது பிற்காலத்தில் மன்னர்களும் போர்க்குடிகளும் தங்களுக்கு
வழங்கிக்கொண்ட புராண/அரசியல் குறியீட்டுத் தோற்றக் கதையாடலாக (Origin
Myth) கல்விப்புலத்தில் பார்க்கப்படுகிறது
சோழர்
பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு (கி.பி. 13-ஆம்
நூற்றாண்டு), இலங்கையின் வன்னி வனப்பகுதியில் (தற்போதைய
வவுனியா, முல்லைத்தீவு, மன்னார்,
கிளிநொச்சி மற்றும் திரிகோணமலையின் சில பகுதிகள்) அமைந்த வன்னியமை
குறுநில ஆட்சிகள் ஒரு தனித்துவமான நிலமானிய அமைப்பாகப் பரிணமித்தன.
இலங்கைச்
சூழலில் 'வன்னியர்' என்பது தொடக்கத்தில் ஒரு சாதியைக்
குறிக்கும் சொல்லாக உருவெடுக்கவில்லை. 'அடவி' (காடு) சார்ந்த நிலப்பரப்பை ஆட்சி செய்த
குறுநில அதிபர்களுக்கு வழங்கப்பட்ட நிலமானியப் பட்டப் பெயராகவே இது
அமைந்தது.
நடுவில்
நாட்டிலிருந்து சோழர்களின் வேளைக்காரப் படைகளாகச் சென்ற பள்ளி போர்க்குடியினர்
அடர்ந்த வன்னி வனப்பகுதிகளைக் கைப்பற்றித் தங்களது இராணுவக் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்தனர். நிலத்தைக் கட்டுப்படுத்திய இப் போர்க்குடித் தலைவர்கள் 'வன்னியர்' என்ற குறுநிலப் பிரபுத்துவப்
பட்டத்தைச் சூட்டிக்கொண்டனர். காலப்போக்கில், இவர்கள்
இலங்கையின் உள்ளூர் ஈழத் தமிழ் சமூகக் குழுக்களான வெள்ளாளர், முக்கவர் மற்றும் பிற போர்க்குடிகளோடு திருமண உறவுகளை மேற்கொண்டு,
இலங்கையின் வட மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிலைபெற்ற தமிழ்
சமூகக் குழுக்களாக மாறினர்.
இவ்வாய்வுக்
கட்டுரையின் மூலம் பெறப்பட்ட முதன்மை வரலாற்றுச் சான்றுகளும் முடிவுகளும்
பின்வருமாறு சுருக்கிக் தொகுக்கப்படுகின்றன:
1.
ஈழத்து
நாகநாட்டிலிருந்து தொண்டைக் கொடி சுற்றி மிதந்துவந்த குழந்தை மூலம் தொண்டை மண்டலம்
உருவானதாகக் கூறும் காப்பிய மரபும் (சிலப்பதிகாரம்/மணிமேகலை), பிற்காலத்தில் அத்தொண்டை மண்டலப் போர்க்குடிகள் இலங்கைக்குச் சென்று
வன்னியர்களாக மாறின எனும் கூற்றும் இரு நிலப்பரப்புகளுக்குமிடையிலான நீண்டகால
வரலாற்றைத் தொடர்ச்சியாகக் காட்டுகின்றன.
2.
கி.பி. 10–11-ஆம் நூற்றாண்டுகளில் முதலாம் இராஜராஜன்
மற்றும் இராசேந்திரச்சோழனின் ஈழப் படையெடுப்புகளின் போது, இலங்கையின் பாதுகாப்பு அரண்களிலும் தலைநகரான பொலன்னறுவையிலும் 'வலங்கை வேளைக்காரர்' மற்றும் 'சிறுதனத்து வேளைக்காரர்' படைகளாகப்
பெருமளவிலான தமிழர் வீரர்கள் குடியமர்த்தப்பட்டனர்.
3.
தென்னிந்தியச்
சாசனவியல் ஆய்வாளர் ய. சுப்பராயலு மற்றும் நோபோரு கரஷிமா ஆகியோரின் சாசன ஒப்பீட்டு
ஆய்வுகள்,
இலங்கையில் குடியமர்த்தப்பட்ட இவ்வலங்கைப் படைகளின் முதன்மைத்
தாயகம் தமிழ்நாட்டின் நடுவில் நாடு மற்றும் தொண்டை மண்டலம் என்பதையும்,
அப்படைகளின் முதன்மை உறுப்பினர்கள் 'பள்ளி'
(படையாட்சி) சமூக
உழவு-போர்க்குடிகளே என்பதாக் கருதமுடிகிறது.
4.
சோழர்
ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர் தாய்நாடு திரும்பாத இப்போர்க்குடி வீரர்கள், இலங்கையின் 'அடவிப் பற்றுகளில்' (வன்னிக்காடுகள்) தங்கி நிலக்கிழார்களாகவும், 'வன்னியர்' என்ற குறுநில அதிபர்களாகவும்
பரிணமித்து இலங்கையின் 'வன்னிமை' ஆட்சி முறைக்கு வித்திட்டனர்.
5.
இச்செயல்முறையானது, தமிழ்நாட்டின் சமூகப் போர்க்குடி அடையாளமும் இலங்கையின் புவியியல்-நிலமானியப்
பட்டமும் இணைந்து உருவான ஒரு தனித்துவமான வரலாற்றுப் பரிணாம வளர்ச்சியாகும்.
பண்டார
வன்னியனின் முதன்மை ஆட்சிப் பீடமாகத் திகழ்ந்த 'பனங்காமம்'
கருநாவல்பற்று, முள்ளியவளை ஆகிய வன்னிப்
பற்றுகள் யாழ்ப்பாண அரசிற்கு ஆண்டுக் கப்பம் செலுத்தும் தன்னாட்சிப் பிரதேசங்களாக
இருந்தன என்பதைப் பேராசிரியர் பத்மநாபன் சான்றுகளுடன் பதிவு செய்துள்ளார். திருகோணமலைக் கோயிலின் வரலாற்றுச் சுவடியான 'கோணேசர்
கல்வெட்டு' நூல், சோழ
வம்சத்துடன் தொடர்புடைய 'குளக்கோட்டன்' மன்னன் திருகோணமலைக் கோயிலையும் காந்தளாய்க் குளத்தையும் புனரமைத்த
பிறகு, அப்பகுதியின் நிர்வாகத்தையும் நிவந்தங்களையும்
பராமரிக்க 'தனியுண்ண பூபாலன்' என்பவனின்
தலைமையில் வன்னியத் தலைவர்களைச் (Vannipam) சுழற்சி முறை
நிருவாகிகளாக நியமித்தான் என்ற பாரம்பரியப் பதிவை ஆவணப்படுத்துகிறது.
மயில்வாகனப்
புலவரின் 'யாழ்ப்பாண வைபவ மாலை' (1736) வரலாற்று நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் இணைத்து எழுதப்பட்ட
நூலாயினும், சோழநாட்டிலிருந்து வந்த இராணுவத் தலைவர்களும்
வன்னியர்களும் வன்னிப் பகுதியைப் பனங்காமம், முள்ளியவளை,
மேல்பட்டு, கருநாவல்பற்று எனப் பிரித்து
தன்னாட்சி பெற்ற சிற்றரசர்களாக ('வன்னியமை') ஆட்சி செய்தனர் என்ற இதன் கூற்று, பொலன்னறுவைக்
காலத்திற்குப் பிந்தைய நிலமானிய சமூக மாற்றத்தோடும் போர்த்துகீசிய/டச்சுக்கால
வரிக் பதிவேடுகளோடும் ஒத்துப் போகிறது" (Pathmanathan, 1978, pp.
128–132; Brito, 1879, pp. 50–55.The Kingdom of Jaffna: Part 1 (circa A.D.
1250–1450). Arul M. Rajendran. (Chapter V: "The Chieftaincies of the
Vanni", pp. 122–140).).
1697-ஆம் ஆண்டின் டச்சு அதிகாரப்பூர்வ ஆவணமான ஹென்ட்ரிக் ஸ்வார்டெக்ரூனின்
நினைவுக் குறிப்பில் (Memoir of Hendrick Zwaardecroon, 1697), பனங்காமத்தின் வன்னியத் தலைவரான 'கயிலாய
வன்னியன்' (Cailaya Wannia) டச்சுக் கிழக்கிந்தியக்
கம்பெனிக்கு ஆண்டுதோறும் யானைகளை திறையாக அளிக்கும் ஒப்பந்தம் செய்திருந்ததும்,
கண்டி அரசனுக்கும் டச்சுக் கம்பெனிக்கும் இடையே நிலவிய அரசியல்
சூழலைப் பயன்படுத்தி வன்னிப் பகுதியைத் தன்னாட்சியுடன் ஆண்டுவந்ததும் தெளிவாகப்
பதிவாகியுள்ளது (Zwaardecroon, 1697/1911, pp. 16–22; Arasaratnam, 1958,
pp. 112–115. Dutch Power in Ceylon, 1658–1687. J. B. Wolters. (pp.
110–118). Pathmanathan, S. (1979). The Kingdom of Jaffna: Part 1 (circa A.D.
1250–1450). Arul M. Rajendran. (pp. 135–138).
இலங்கை வரலாற்றில்
1803-இல் கண்டி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனுடன் கைக்கோர்த்த
பண்டார வன்னியன், ஆகஸ்ட் 25 அன்று
முல்லைத்தீவு ஆங்கிலேயக் கோட்டையைக் கைப்பற்றித் தனது தன்னாதிக்கத்தைப்
பறைசாற்றினான். இருப்பினும், 1803 அக்டோபர் 31-இல் கற்சிலைமடுவில் கேப்டன் வொன் ட்ரிபெர்க் தலைமையிலான ஆங்கிலேயப்
படையுடன் ஏற்பட்ட போரில் பண்டார வன்னியன் வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, சோழர் காலம் தொட்டு நிலவி வந்த தன்னாட்சி பெற்ற 'வன்னியமை' குறுநில முறைமை முற்றாக
ஒடுக்கப்பட்டு, வன்னிப் பகுதி பிரித்தானிய இலங்கையுடன்
இணைக்கப்பட்டது" (Lewis, 1895, pp. 18–21; Pathmanathan, 1979, pp.
138–140.The Kingdom of Jaffna: Part 1 (circa A.D. 1250–1450). Arul M.
Rajendran. (pp. 138–142). Somasundaram, D. (2014). Scarred Communities:
Psychosocial Impact of War and Trauma in Sri Lanka. SAGE Publications; pp.
42–45).
துணைநூல்கள்:
- rasaratnam, S.
(1958). Dutch power in Ceylon, 1658–1687. J. B. Wolters.
- Brito, C.
(Trans.). (1879). The Yalpana-Vaipava-Malai; Or, the history of the
kingdom of Jaffna. Asian Educational Services.
- Indrapala, K.
(1965). Dravidian settlements in Ceylon and the beginnings of the
Kingdom of Jaffna [Unpublished doctoral dissertation]. University of
London.
- Indrapala, K.
(2005). The evolution of an ethnic identity: The Tamils in Sri Lanka C.
300 BCE to C. 1200 CE. Vijitha Yapa Publications / Kumaran Book House.
- Karashima, N.
(1992). Towards a new formation: South Indian society under Vijayanagar
rule. Oxford University Press.
- Karashima, N. (1984).
South Indian history and society: Studies from inscriptions A.D. 850–1800.
Oxford University Press.
- Karashima, N. (Ed.).
(2002). A concordance of the names in the Chola inscriptions (Vols. 1–3).
Sarvodaya High Tech.
- Karashima, N. (2014).
A concise history of South India: Issues and interpretations. Oxford
University Press.
- Karashima, N., &
Subbarayalu, Y. (2004). The emergence of the Periyanadu assembly in South
India during the Chola and Pandyan periods. International Journal of Asian
Studies, 1(1), 87–103. https://doi.org/10.1017/S147959140400005X
- Subbarayalu, Y.
(2012). South India under the Cholas. Oxford University Press.
- Lewis, J. P.
(1895). Manual of the Vanni districts, Ceylon. H. C. Cottle, Acting
Government Printer.
- Pathmanathan, S.
(1978). The kingdom of Jaffna: Part 1 (circa A.D. 1250–1450). Arul
M. Rajendran.
- Somasundaram, D.
(2014). Scarred communities: Psychosocial impact of war and trauma in
Sri Lanka. SAGE Publications.
- Zwaardecroon, H.
(1911). Memoir of Hendrick Zwaardecroon, Commandeur of Jaffnapatnam
(Afterwards Governor-General of Netherlands India) 1697 (S. Pieters,
Trans.). H. C. Cottle, Government Printer, Ceylon. (Original work
published 1697).
கல்வெட்டு
மற்றும் அரசு அறிக்கைப் பதிவுகள் (Epigraphical Reports & Primary
Inscriptions)
- Annual Report on South
Indian Epigraphy (A.R.E.).
- A.R.E.
No. 92 of 1918 (Vriddhachalam - Tax remissions by
Padiyatchi/Palli corporate bodies).
- A.R.E.
No. 259 of 1928–29 (Pennadam - Naduvil-mandalam
Padai-parru records).
- South Indian
Inscriptions (S.I.I.).
- S.I.I.
Vol. VIII, No. 698 (Tirukkovilur - Palli military
contingents and land grants).
- Polonnaruwa
Tamil Inscription of the Velaikkarar (Epigraphia
Zeylanica, Vol. II, No. 40).