முடிவில்லாத துகிலும்
சுதர்சனச் சக்கரமும்……
இரா.கோமகன்
கதை வழிச் செய்தியைக் கேட்பதும் செய்தியைக்
கதையாக்குவதும் நமக்கு பிடித்துப் போனவை. பூமராகத் தொடங்கி சூமராக
மாறும் தலைமுறைச் சுவாரசியத்தில், மகாபாரதத்தில் பிடுங்கப்பட்ட சில பக்கங்களின் கதையோடு தொடரும் அல்கரிதம்
இது. கண்ணனால் கொல்லப்பட்ட சிசுபாலனின் மரணத்திற்குப் பழிவாங்க அவனது நண்பன்
சால்வன் துடித்தான்; அதற்காக சிவனை நோக்கித் தவம் இருந்து,
யாராலும் அழிக்க முடியாத "சௌப விமானம்" என்ற மாயாவி
பறக்கும் கோட்டையை வரமாகப் பெற்றான்.
சௌப விமானம் ஒரு மாயாவி
வாகனம். அது ஒரே நேரத்தில் பல வடிவங்களை எடுக்கும் உலோகத்தாலான பறக்கும் கோட்டை, திடீரென மறைந்துவிடும், ஆகாயத்தில் மேகங்களுக்கு
நடுவே ஒளிந்து கொள்ளும், விசில் சத்தம் பறக்க ஒரே நேரத்தில்
பல வடிவங்களை எடுக்கும் ஆற்றல் கொண்ட அந்த விண்கலத்தைக் கொண்டு சால்வன்
துவாரகை நகரைத் தாக்கி நாசப்படுத்தினான். சால்வனின் நண்பன் சிசுபாலனைக் கொள்வதற்கு
முன் அவன் தாயிடம் கண்ணன் சொன்னார், ‘அத்தை உன் மகனின் 100 தவறுகள்
பொறுப்பேன் 101-ஆனால் அவன் காலி" என்ற வாக்குறுதி அவனது
மரணத்தோடு முடிந்துவிட்டதால், கண்ணன் சால்வன் மீது
தடையின்றிப் போரிட்டார். இறுதியில், சால்வனின் வான்வழி
மாயாஜாலங்களை எல்லாம் முறியடித்த கண்ணனின் சுதர்சன சக்கரம், சிவனின்
வரப் பெற்ற சௌப விமானத்தை நடுவானில் இரண்டு துண்டுகளாகப் பிளந்து அழித்ததுடன்,
சால்வனின் தலையையும் கொய்து தர்மத்தை நிலைநாட்டியது.
வளரும் துகிலின் ரகசியத்தைத்
தொடர்ந்து அவிழ்ப்போமா! ஹஸ்தினாபுரத்து ராஜசபையில் பாஞ்சாலி
துகிலுறியப்படும் பொழுது கண்ணன் துவாரகையில் இந்த சால்வனுடன் தான் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். உடலால் துவாரகையில் சால்வனுடன் போரிட்டுக் கொண்டிருந்த
கண்ணன்,
திரௌபதியின் சரணாகதியால் தன் அருளால் அஸ்தினாபுரத்து அவையில் ஆடையாக
உருவெடுத்து அவளைக் காத்தார். கண்ணனின் இந்த துள்ளலில் எம்.ஜி.ஆர். உங்கள் நினைவுக்கு
வந்தால் நீங்கள் பூமர் அங்கிள் தான். கண்ணன்கள் வந்து கொண்டே தான் இருப்பார்கள்.
பாஞ்சாலியின் புடவை முடிவில்லா துகிலானது, துச்சாதனன் தன் பலத்தால் ஆடையை
உருவிடலாம் என்று நினைத்தான். அது மனித ஆற்றலால் வெல்ல முடியாத ஒரு எல்லையற்ற ‘நெட்வொர்க்’ என்பதை அவன் அறியவில்லை. இறுதியில் அவன் களைத்துப்போய் விழுந்தான். துச்சாதனன் ஆடையின் முடிவைக் காண முடியாமல் தோற்றது
போல,
மனித அறிவால் இந்த எல்லையற்ற டிஜிட்டல் உலகத்தை முழுமையாக அள்ளிவிட
முடியாது என்பதே நிதர்சனம்.
செளப விமானம், சுதர்சனச் சக்கரம்,
100-தவறுகள், கண்ணபிரானின் முடிவில்லா துகில் என்பதெல்லாம் நடைமுறை டிஜிட்டல் உலக அரசியலோடு
ஓட்ட வைக்கும் ‘அல்கரிதம்’ நடைமுறையாக்கப்படுகிறது.
செளப விமானம் எனும் டிஜிட்டல் உலகின் நெறிமுறை (அல்காரிதம்) என்பது ஒரு நவீனக் 'கண்ணுக்குத் தெரியாத கரம்'.
இன்றைய டிஜிட்டல் அரசியல் உலகிலும் இதே 'சௌப
விமான' உத்திதான் பயன்படுத்தப்படுகிறது. அதுதான் "தகவல் மாயம்" (Information Warfare). போலிச்
செய்திகள், டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பங்கள்,
புனையப்பட்ட பிம்பங்கள் யாவும் சௌப விமானத்தைப் போலத்தான். அவை ஒரே
நேரத்தில் பல வடிவங்களில் நமக்கு முன்னால் தோன்றும், உண்மையை
மேகங்களைப் போல மூடி மறைக்கும், பிடிபடாமல் காற்றில்
கரையும்.
நாம் 100 நகர்வுகளைச் செய்து முடிப்பதற்குள், நமது விருப்பு,
வெறுப்பு, பலவீனம் அனைத்தையும் அல்கரிதம்
படித்துவிடுகிறது. அதன் பிறகு, நாம் என்ன நினைக்க வேண்டும்,
அடுத்து எதை பார்க்க வேண்டும் என்ற 101-ஆவது
நகர்வை நாமாக எடுப்பதில்லை; அல்கரிதம் தான் அதைத்
தீர்மானித்து நம்மை நோக்கித் தள்ளுகிறது அன்று 101-ஆவது
நகர்வில் சிசுபாலனின் தலை கொய்யப்பட்டது. இன்று 101-ஆவது
நகர்வில் நமது சிந்தனைத் திறனும், சுயமான முடிவெடுக்கும்
அதிகாரமும் அல்கரிதத்தால் மிக நயமாகக் கொய்யப்படுகிறது.
நாம் நினைப்பது நம் சொந்த எண்ணம் அல்ல; அல்கரிதம் நமக்கு ஊட்டிய எண்ணம்! சமூக
ஊடகங்களின் டிஜிட்டல் அல்கரிதம் நம்மைத் தண்டிப்பதற்காகக் காத்திருப்பதில்லை; மாறாக, நம்மைத் தன்வசப்படுத்துவதற்காகக் காத்திருக்கிறது.
நம் கதாநாயகர்களைத் தயாரிக்கும் பணியில்
ஓய்வறியா உழைப்பாளியாக டிஜிட்டல் உலகம் மாற்றப்பட்டு பாஞ்சாலியின் முடிவில்லா துகிலாக
நீண்டுகிடக்கிறது. அரசியல், வசீகரம், மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகிய
மூன்றின் சங்கமம் என்பது சமகால ஜனநாயகத்தின் ஆகப்பெரும் சக்தியாகவும், அதே சமயம் ஒரு ஆபத்தான ஆயுதமாகவும் உருவெடுத்துள்ளது.
மிக விந்தையாக, ஒரு தலைவனின் வசீகரப் பண்புகளைப் பாடி மக்கள் மத்தியில் அவனுக்கான
பிம்பத்தை எப்படிக் கட்டமைக்க வேண்டும் என்பதற்கான இலக்கண வேர், இரண்டாயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் தொல்காப்பியத்தின்
புறத்திணை (பாடண்திணை) இலக்கணத்தில் ஊன்றப்பட்டிருக்கிறது. அன்று புலவர்கள் செய்த
அந்தப் பிம்பக் கட்டுமான வேலையைத்தான், இன்று டிஜிட்டல்
அல்கரிதம் மிகத் துல்லியமாகச் செய்து வருகிறது.
தொல்காபியர் கதாநாயகர்களைப் பதிவு செய்தார்.
நடுகல் பண்பாடு கதாநாயர் களுக்கானதே! பசுக்களைக் காப்பவர் வீரர் அதைக் கவர்ந்து அரசுக்கு அச்சமூட்டுபவர் மறவர்.
இவர்களின் மோதலில் யார் இறந்தாலும் நடுகல் உண்டு. அன்றைய
காலகட்டத்தில் ஆநிரை (கால்நடைகள்) தான் ஒரு சமூகத்தின் ஆகப்பெரும் சொத்து. அண்டை
நாட்டினர் அல்லது கள்வர்கள் அந்த ஆநிரைகளைக் கவர வரும்போது (ஆநிரை கவர்தல் -
வெட்சித் திணை), தன் ஊரையும் மாடுகளையும் காப்பதற்காக நின்று
போரிட்டு மடியும் வீரன் தான் அந்த ஊரின் "முதல் ஹீரோ".
தொல்காப்பியம் இந்த வீரனை
நடுகல்லாக நட்டு, அதற்குப் பெயரும் அவனது வீரச்
செயல்களையும் செதுக்கி, 'காட்சி, கால்கோள்,
நீர்ப்படை, நடுதல், பெரும்படை,
வாழ்த்தல்' என ஆறு நிலைகளில் தெய்வமாக
வழிபட்டதை விவரிக்கிறது. அன்றைக்கே கதாநாயகர்கள் தமிழகத்து வந்துவிட்டனர்.
இன்றும் கூட நம் வணிகச்
சினிமாவில் இந்த இரு கதாநாயக பிம்பங்களும் அப்படியே தொடர்வதைக் காணலாம்; சட்டத்தை மதிக்காமல், தனக்கென ஒரு தனி நீதி வழுவாமல்
எதிரிகளை அதிரடியாகத் தாக்கும் 'ஆக்ஷன்/கேங்க்ஸ்டர்' கதாபாத்திரங்கள் — மறவன் (The Outlaw) பிம்பம்.
சட்டம் மற்றும் சமூகக் கடமையின் எல்லையிலிருந்து கொண்டு, மக்களைக்
காக்கத் தன்னுயிரைத் தியாகம் செய்யத் துணியும் 'போலீஸ்/தேசபக்த'
கதாபாத்திரங்கள் — வீரன் (The Guardian) பிம்பம்.
எனவே,இருவருமே கதாநாயக பிம்பங்கள் தான். ஒருவன் தாக்குதலின்
உச்சம்; இன்னொருவன் தற்காப்பின் உச்சம்.
தமிழ்ச் சமூகத்தின் முதல்
கதாநாயகன் எந்தவொரு தனிப்பட்ட அரசனோ அல்லது புராணப் பாத்திரமோ அல்ல; அவன் தன் சமூகத்தைக் காக்க உயிர்நீத்த ஒரு சாதாரண வீரன் ஆவான். அன்று
நிஜம் இன்று நிழல். இன்று அல்ல அன்றும் கதாநயகர்கள் காலம் தான்.
தமிழர்களின் குறிஞ்சி நிலத்
தலைவனாகக் கருதப்படும் சேயோன் (முருகன்) தமிழ்ச் சமூகத்தின் முதல் தொல்வடிவக்
கதாநாயகனாக (Proto-Hero) அறியப்படுகிறான். முருகன் வெறும்
வழிபாட்டுத் தெய்வம் மட்டுமல்ல; அவன் தமிழ் இலக்கியங்களில்
அழகன், அறிஞன், வீரன், மற்றும் வேடன் எனப் பன்முகத்தன்மை கொண்ட ஒரு தலைவனாக/நாயகனாகவே சித்தரிக்கப்பட்டான்.
இயற்கையின் சீற்றங்களிலிருந்து மக்களைக் காத்த 'நாயகன்'
பிம்பம் அவனுக்கு வழங்கப்பட்டது.
கடவுள் பிம்பம் மிகத்
தொலைவில் இருந்ததால், மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையே ஒரு
'பாலம்' தேவைப்பட்டது. அப்படி
உருவானவர்களே புராணக் கதாநாயகர்கள். இவர்கள் பெரும்பாலும் கடவுளின் அவதாரங்களாகவோ
அல்லது மனிதனுக்கும் கடவுளுக்கும் பிறந்த அரைகடவுள்களாகவோ சித்தரிக்கப்பட்டனர் .
இவர்களுக்கு மனிதர்களைப் போலப் பசி, கோபம், காதல், மற்றும் துரோகங்கள் போன்ற உணர்ச்சிகள்
இருக்கும். ஆனால், இவர்களின் வலிமையும் ஆற்றலும் அதிமானுடத்
தன்மை கொண்டதாக இருக்கும். மனிதன் இவர்களிடம் தன் உணர்வுகளைப் பிரதிபலிக்கச்
செய்து பார்க்க முடிகிறது. இராமனின் பொறுமையையோ, அர்ச்சுனனின்
இலக்கையோ நோக்கி மனிதன் தன்னை உயர்த்திக் கொள்ள முயலும் ஒரு உன்னதப் புள்ளியாக
புராண நாயகர்கள் திகழ்ந்தனர்.
20 மற்றும் 21-ஆம் நூற்றாண்டுகளில் அறிவியல் வளர்ச்சியாலும், மதச்சார்பற்ற
சமூக அமைப்புகளாலும் மனிதன் தன் 'இரட்சகனை' தியேட்டர்களில் தேடத் தொடங்கினான். கடவுளும் புராணங்களும் செய்யாத ஒரு
விஷயத்தைச் சினிமா ஹீரோக்கள் செய்கிறார்கள் — அது, நம்
பக்கத்து வீட்டுக்காரனைப் போன்ற தோற்றம்.
ஒரு சாமானியன் உழைப்பாலோ, அதிரடித் துணிச்சலாலோ அநீதியான அமைப்பை (System) ஒற்றை
ஆளாக எதிர்த்து வெல்லும் போது, தியேட்டரில் இருக்கும் ரசிகன்
தன் நிஜ வாழ்க்கைத் தோல்விகளுக்கான வடிகாலாக அதை உணர்கிறான். "அவனால்
முடிகிறது, எனவே எனக்காக அவன் செய்கிறான்" அல்லது
"நானும் அவனைப் போல வெல்ல முடியும்" என்ற போலி-அதிகார உணர்வை இப்பிம்பம்
தருகிறது.
மனிதன் கடவுளிடம் காட்டிய
அதே 'குருட்டுப் பக்தி' மற்றும் 'சரணாகதி'
மனப்பான்மையைத்தான் இன்று சினிமா ஹீரோக்களிடமும் காட்டுகிறான். கட்-அவுட்டுகளுக்குப்
பாலாபிஷேகம் செய்வதும், தியேட்டரை வழிபாட்டுத் தலமாக
மாற்றுவதும் இதன் வெளிப்பாடுதான்.
அன்று "கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்" என்ற நம்பிய
மனிதன், இன்று "என் ஹீரோ
தியேட்டர் திரையிலும் இருப்பார், நிஜ அரசியல் மேடையிலும்
வந்து என் குறைகளைத் தீர்ப்பார்" என்று நம்புகிறான். பிம்பங்களின் வடிவங்கள்
மாறிவிட்டன, ஆனால் தங்களுக்குப் புறம்பே ஒரு 'இரட்சகனைத்' தேடும் மனிதனின் அடிப்படை உளவியல் மாறவே
இல்லை. இந்த உளவியல் நகர்வு என்பது உண்மையில் "நிழலில்
இருந்து நிஜத்தைத் தேடும்" ஒரு ஏமாற்று வேலை தான்.
தத்துவ ஞானி பிளேட்டோவின்
புகழ்பெற்ற "குகை உவமை" (Allegory of the
Cave) கோட்பாடு இதற்கு மிகக் கச்சிதமாகப் பொருந்தும். குகைக்குள்
சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும் மனிதர்கள், தங்களுக்குப்
பின்னால் எரியும் நெருப்பினால் சுவரில் விழும் நிழல்களைப் பார்த்து, அதுதான் உண்மையான உலகம் என்று நம்புவார்கள். நவீன தியேட்டர் இருட்டில்
அமர்ந்து திரையில் விழும் ஒளிக் கற்றைகளையும் (நிழல்களையும்) நிஜமென்று நம்பும்
ரசிகனின் நிலையும் இதுதான்.
நவீன நுகர்வோர்
கலாச்சாரத்தில், நாம் ஒரு பொருளின் அல்லது மனிதனின் நிஜத் தன்மையை
நுகர்வதில்லை; அதற்குப் பின்னால் இருக்கும் 'பிம்பத்தை' மட்டுமே நுகர்கிறோம். திரையில் ஒரு ஹீரோ
ஏழைகளுக்காகப் போராடுவதைப் பார்த்து உணர்ச்சிவசப்படும் ஒரு ரசிகன், தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் நிஜ வாழ்க்கையில் தன் கண்முன்னே
நடக்கும் அநீதியைக் கண்டு கொள்ளாமல் கடந்து விடுவான். திரையில் அந்த ஹீரோவின்
வழியாக அவனுக்குக் கிடைக்க வேண்டிய "போராட்ட திருப்தி" ஏற்கெனவே
கிடைத்துவிட்டது. நிழலிலேயே அவனது சமூகக் கடமை தீர்ந்துவிடுவதால், நிஜத்தில் அவன் செயலற்றவனாக மாறுகிறான்.
பிரெஞ்சு தத்துவஞானி ஜீன்
பாட்ரிலார்ட் (Jean Baudrillard) இதை 'ஹைப்பர்ரியாலிட்டி'
என்கிறார். அதாவது, நிஜத்தை விட நிஜத்தின்
பிரதிபலிப்பு (நகல்) மக்களுக்குக் கூடுதல் கவர்ச்சியாகத் தெரிவது.
சினிமாவில் ஒரு நடிகர் 100 பேரை ஒற்றை ஆளாக அடித்து வீழ்த்தும் 'நிழல் வீரத்தை'ப் பார்த்து பழகிய கண்களுக்கு, நிஜ வாழ்க்கையில்
சமூக மாற்றத்திற்காகக் களத்தில் இறங்கி, வெயிலிலும்
மழையிலும் நின்று போராடும் ஒரு சாதாரணச் சமூக ஆர்வலரின் 'நிஜ
வீரம்' சாதாரணமாகத் தோன்றும். மக்கள் நிஜத் தலைவர்களிடம்
சினிமா ஹீரோக்களைப் போன்ற 'வசனங்களையும்', 'அதிமானுடத் தனத்தையும்' எதிர்பார்க்கத் தொடங்குவது
இந்த நிழல் தேடலின் விளைவுதான்.
எனக்காகப் போராட, என் குறைகளைத் தீர்க்க ஒரு பிம்பம் (ஹீரோ/கடவுள்) வரும்" என்று
திரையை நோக்கிக் காத்திருக்கும் மனிதன், தன் சொந்த ஆற்றலை,
உரிமையை, மற்றும் சுயசிந்தனையை இழக்கிறான்.
நிழல் தரும் தற்காலிக போதையில் மூழ்கி, தன் நிஜ வாழ்க்கைப்
பிரச்சினைகளுக்கான தீர்வைத் தன்னிடம் தேடாமல், புறத்தே
இருக்கும் ஒரு பிம்பத்திடம் தேடி ஏமாறுகிறான்
முழுமையான வெளிப்படைத்தன்மை
இருக்கும் இடத்தில் வசீகரம் இருக்காது. ஒரு பிம்பத்தை வசீகரமானதாக மாற்ற, அந்த நபர் பற்றிய சில பகுதிகள் எப்போதும் சாமானியர்களுக்கு எட்டாத
மர்மமாகவே வைக்கப்பட வேண்டும். மனித மனம் தனக்கு முழுமையாகத் தெரியாத ஒன்றைப்
பற்றித் தன் கற்பனைக்கேற்ப பிரம்மாண்டமாகக் கட்டமைத்துக் கொள்ளும் நவீன சினிமாவில்
கதாநாயகர்கள் தங்களை அத்தனை எளிதாக நேர்காணல்களிலோ அல்லது பொதுவெளியிலோ
வெளிப்படுத்திக் கொள்ளாததற்கு இதுவே காரணம். அந்த "விலகியிருக்கும்
தன்மை" அவர்களின் பிம்பத்தின் மீதான ஈர்ப்பைக் கூட்டுகிறது
சினிமாவில் ஈட்டிய 'நிழல் வசீகரத்தை' அப்படியே நிஜ அரசியலுக்கான 'வாக்கு வங்கியாக' மாற்றுவது தமிழ்ச் சமூகத்தில் பல
தசாப்தங்களாக நடக்கும் ஒரு வெற்றிகரமான சூத்திரம். பிம்பக் கட்டுமானத்தின் வசீகரம்
என்பது, மக்களுக்கு என்ன தேவையோ அதை ஒரு மனித வடிவில்
பேக்கேஜ் செய்து தருவதுதான். அந்த வசீகரம் ஒரு வண்ணமயமான முகமூடி. அதை
வடிவமைப்பவர்கள் அதன் வணிக மதிப்பை அறிவார்கள்; அதை நுகரும்
ரசிகர்களோ அந்த முகமூடியையே நிஜ முகம் என்று நம்பித் தன் அடையாளத்தைத்
தொலைக்கிறார்கள்.
அச்சு ஊடகத்திலும், சினிமாவிலும் "எட்டாத உயரத்தில்" இருந்த பிம்பங்களின் வசீகரம்,
இன்று ஸ்மார்ட்போன் திரைக்குள் "நம்
விரல் நுனியில் அடங்கும்" ஒன்றாகச் சுருங்கிவிட்ட அதே வேளையில், அதன் உளவியல் தாக்கம் பன்மடங்கு தீவிரமடைந்துள்ளது.
பழைய மாடலில் வசீகரம் என்பது
"மர்மத்தில்" இருந்தது. ஆனால் டிஜிட்டல் உலகில், வசீகரம் என்பது "நெருக்கத்தில்" இருக்கிறது. ஒரு இன்ஃப்ளூயன்ஸர் அல்லது டிஜிட்டல் ஸ்டார், தன் படுக்கையறையில் இருந்தோ, சமைக்கும்
இடத்திலிருந்தோ பேசும் 'வ்லாக்' (Vlog) மற்றும் 'லைவ்' (Live) வீடியோக்கள்
மக்களுக்கு அவர் தங்களில் ஒருவர் போன்ற பிம்பத்தைத் தருகின்றன. "அவர் என்னைப்போலவே சாதாரண ஆள், ஆனால் எவ்வளவு
பிரபலம்!" என்ற எண்ணம் ரசிகர்களுக்கு ஒரு போலித் தோழமையை ஏற்படுத்துகிறது.
பாராசோஷியல் உறவு என்பது இன்று இருதரப்புத் தொடர்பு போல இன்ஸ்டாகிராம்
கமெண்ட்டுகள் மற்றும் லைக்ஸ் மூலம் வேரூன்றியுள்ளது.
டிஜிட்டல் உலகில் வசீகரத்தை
உருவாக்குவது மனிதர்கள் மட்டுமல்ல, அதற்குப் பின்னால்
இருக்கும் அல்காரிதம்கள் (Algorithms) தான் முக்கியக் காரணி.
நீங்கள் எதைப் பார்க்க விரும்புகிறீர்களோ, அதைத்
துல்லியமாகக் கணித்து, அதே போன்ற பிம்பங்களை அல்காரிதம்
உங்கள் திரையில் தள்ளிக்கொண்டே இருக்கும் (Echo Chamber).உங்கள்
உலகக் பார்வையை ஒத்த ஒரு பிம்பத்தை நீங்கள் தொடர்ந்து பார்க்கும்போது, அந்தப் பிம்பத்தின் மீதான வசீகரம் மற்றும் நம்பகத்தன்மை மிக வேகமாக
அதிகரிக்கிறது. இங்கு வசீகரம் என்பது திட்டமிட்டு "ஊட்டப்படும்" ஒரு
பழக்கமாக மாறிவிடுகிறது.
கேமிங் விமர்சனம் அல்லது
அரசியல் பேசும் நுண்-கதாநாயகர்கள் (Micro-Influencers) லட்சக்கணக்கான
இளைஞர்களின் தனிப்பட்ட ஹீரோக்களாக இருக்கிறார்கள். தியேட்டரில் ஒட்டுமொத்தக்
கூட்டமாக ரசித்த ரசிகன், இன்று நள்ளிரவில் தன் அறையில்
ஹெட்போன் மாட்டிக்கொண்டு தனிமையில் இந்த நுண்-கதாநாயகர்களின் பிம்பங்களை
நுகர்கிறான். இது ஈர்ப்பை இன்னும் ஆழமாக்குகிறது.
இணையத்தில் ஒரு பிம்பத்தின்
ஆயுள் மிகக் குறைவு. எனவே, தன் வசீகரத்தைத் தக்கவைத்துக் கொள்ள
அந்தப் பிம்பம் தொடர்ந்து ஏதேனும் ஒரு பரபரப்பையோ அல்லது தீவிரத்தன்மையையோ
வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது சமூகத்தில் தேவையற்ற வெறுப்பையும்
உணர்ச்சிவசப்படுதலையும் தூண்டுகிறது.
தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பங்கள் மூலம் நிஜத்தில் இல்லாத மனிதர்களைக்
கூட அசாத்திய வசீகரத்துடன் உருவாக்க முடிகிறது. நிழலில் இருந்து நிஜத்தைத் தேடிய
மனிதன், இனி "முற்றிலும்
கற்பனையான மெய்நிகர் (Virtual) பிம்பங்களில்" தன்
நாயகர்களைத் தேடும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
திரையரங்கின் பிரம்மாண்டத்
திரையில் இருந்து நம் கைபேசியின் சிறிய திரைக்குப் பிம்பங்கள்
இடம்பெயர்ந்திருக்கலாம். ஆனால், மனிதன் தன்னுள் இருக்கும் ஏதோ
ஒரு வெற்றிடத்தை நிரப்பப் புறத்தே ஒரு வசீகரப் பிம்பத்தைத் தேடி ஓடும் அந்த
"அடிமை மனோபாவத்தின் உளவியல்" 2K கிட்ஸ்களிடமும்,
டிஜிட்டல் உலகிலும் துளிகூட மாறாமல் அப்படியேதான் தொடர்கிறது.
அரசியல், வசீகரம், மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆகிய
மூன்றின் சங்கமம் என்பது சமகால ஜனநாயகத்தின் ஆகப்பெரும் சக்தியாகவும், அதே சமயம் ஒரு ஆபத்தான ஆயுதமாகவும் உருவெடுத்துள்ளது. இதனை நாம் "டிஜிட்டல் ஜனநாயகம்" அல்லது "அல்காரிதமிக் அரசியல்" (Algorithmic
Politics) என்று அழைக்கலாம். முந்தைய தசாப்தங்களில் மேடைப்
பேச்சிலும், சினிமா கட்-அவுட்டுகளிலும் இருந்த அரசியல்
வசீகரம், இன்று ஸ்மார்ட்போன் திரைகளுக்குள் எப்படி
உருமாறியிருக்கிறது.
டிஜிட்டல் அரசியல் வசீகரம்
என்பது "எட்டாத தூரத்தில் இருக்கும் கம்பீரம்" அல்ல; அது "நம்முடன் வாழும் அணுக்கம்" போன்ற
மாயையை உருவாக்குகிறது. தலைவர்கள் தங்களின் அன்றாட உடற்பயிற்சி வீடியோக்கள்,
குடும்பத்துடன் உணவு உண்ணும் புகைப்படங்கள், அல்லது
சாதாரண மக்களுடன் இயல்பாகப் பேசும் 'Unfiltered' காட்சிகளைப்
பகிர்வதன் மூலம் தங்களை 'அனைவருக்குமான எளிய மனிதராக'
காட்டிக் கொள்கிறார்கள்.
டிஜிட்டல் அரசியலில்
கொள்கைகள், பொருளாதாரத் திட்டங்கள், அல்லது
தேர்தல் அறிக்கைகளை விட "30 வினாடி ரீல்ஸ், பஞ்ச் வசனங்கள், மற்றும் வைரல் ஆடியோக்கள்" தான்
ஒரு தலைவரின் வசீகரத்தைத் தீர்மானிக்கின்றன. இதனால், ஆழமான
அறிவுசார் அரசியல் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பொழுதுபோக்கு
பாணி அரசியல் முன்னிலைக்கு வருகிறது.
டிஜிட்டல் அல்காரிதம்கள்
நேர்மறை உணர்வுகளை விட, கோபம் மற்றும் வெறுப்புணர்வு சார்ந்த
பதிவுகளையே அதிக மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன. இதனால்,
சமகால அரசியல் தலைவர்கள் தங்களின் வசீகரத்தை "எதிரியை எவ்வளவு
ஆக்ரோஷமாகத் தாக்குகிறார்கள்" என்ற பிம்பத்தின் மூலமே கட்டமைக்க
வேண்டியுள்ளது. இது சமூகத்தை 'நாமும் அவர்களும்' என்று இரு துருவங்களாகப் பிரிக்கிறது.
இந்த மாயத்துகில் பாஞ்சாலியிடமிருந்து
மட்டுமல்ல நம்மிடம் இருந்தும் இன்னும் அவிழ்க்கப்படவில்லை.
No comments:
Post a Comment