Tuesday, October 20, 2026

சோழர்கால மெய்க்காப்பும் மெய்க்காவலும் இடவியல் வரலாற்றில் கங்கைகொண்டசோழபுரத்து மெய்க்காவல்புத்தூர் .

 

சோழர்கால மெய்க்காப்பும் மெய்க்காவலும்  இடவியல் வரலாற்றில்  கங்கைகொண்டசோழ புரத்து  மெய்க்காவல்புத்தூர்.

இன்று (21.10.2026-புதன்) காலை 5 மணியிலிருந்து தொடங்கப்பட்ட தேடல். ஓரிரு நாடகளாக சிந்தையை ஆட்கொண்ட செய்தி ‘மெய்க்காவல்புத்தூர்’ இடவியல் வரலாறு தொடர் பானது. கங்கைகொண்டசோழபுரத்திற்கு அருகில் உள்ள ஊர், இவ்வூர் எப்படி தலைநகரோடு தொடர்பு கொண்டிருந்தது என்பதே ஆய்வு. கல்வெட்டு சொற்களின் பொருட்பு அடைவு, தமிழக்கல்வெட்டு சொல்லகராதி தொடங்கி தொடர்ந்த ஆய்வில் கிட்டிய செய்திகளைத் தொகுத்துள்ளேன்.

சோழர்காலக் கல்வெட்டுகளில் காணப்படும் மெய்க்காப்பு, மெய்க்காப்பான், மெய்க்காப்பார், திருமெய்க்காப்பார் மற்றும் மெய்க்காவல் ஆகிய சொற்கள், அந்நாளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டவர்களையும் அப்பணியின் பல்வேறு நிலைகளையும் தெளிவாக உணர்த்துகின்றன. இச்சொல்லாட்சிகள் அரசரின் தனிப்பட்ட உடற்பாதுகாப்போடு மட்டும் முடிந்துவிடவில்லை; மாறாகக் கோயில்கள், அவற்றின் சொத்துகள், இறைவனின் திருவுருவங்கள் மற்றும் பண்டாரங்கள் (கருவூலங்கள்) போன்றவற்றைச் சார்ந்த பாதுகாப்புப் பணிகளுடனும் நெருங்கிய தொடர்புடைய நிறுவன அமைப்பாக விளங்கியுள்ளன.

இதற்குச் சான்றாக, முதலாம் பராந்தக சோழனின் 30-ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்த திருவொற்றியூர் கல்வெட்டு (SII, Vol. III, No. 105; ARE 164/1912) அமைகிறது. இக்கல்வெட்டில் ‘எச்சப்பெருமான் மெய்க்காப்பான்’ என்ற தனிநபரின் பெயர் குறிப்பிடப்படுவதோடு, திருவொற்றியூர் மகாதேவர் கோயிலில் நந்தா விளக்குகள் எரிப்பதற்காக அளிக்கப்பட்ட பொற்கொடை பற்றிய செய்தியும் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ‘மெய்க்காப்பான்’ எனும் சொல் ஒரு பாதுகாப்புப் பணியாளரின் முறையான அடையாளமாகப் பயன்பாட்டில் இருந்ததை அறிய முடிகிறது. இருப்பினும், இங்கு குறிப்பிடப்படும் மெய்க்காப்பான் அரசரின் தனிப்பட்ட உடற்காவலரா அல்லது கோயில் நிருவாகத்தைச் சார்ந்த மெய்க்காவலரா என்பது தெரியவில்லை.

முதலாம் இராசராச சோழனின் 16-ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்த திருக்கோவலூர் திருவீரட்டானமுடையார் கோயில் கல்வெட்டில் (SII, Vol. VII, No. 858; ARE 231/1902) இடம்பெறும் ‘புதுப்பேரூர் ஒரு மெய்க்காப்பு, மருதூர் ஒரு மெய்க்காப்பு’ என்ற சொல்லாட்சி மிகுந்த கவனத்திற்குரியது. இத்தொடரில் ஒவ்வோர் ஊருடனும் ‘ஒரு மெய்க்காப்பு’ என்னும் எண்ணிக்கை இணைக்கப்பட்டிருப்பது, அந்தந்த ஊர்களிலிருந்து கோயிலின் பாதுகாப்புப் பணிக்காகத் தலா ஒரு மெய்க்காப்பாளர் முறைப்படியாக ஒதுக்கப்பட்டிருந்ததைக் குறிப்பதாகக் கருத இடமளிக்கிறது.

இதே காலக்கட்டத்தில், அதாவது முதலாம் இராசராச சோழன் காலத்தில் தஞ்சைப் பெரியகோயிலின் பாதுகாப்புப் பணிகளுக்காகப் பல்வேறு ஊர்களுக்குக் காவலர்களை அனுப்பும் பொறுப்பும், அதற்கான ஊதிய வழங்கும் முறையும் வழங்கப்பட்டிருந்தன என்ற வரலாற்றுச் செய்திகளுடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த விளக்கம் மேலும் வலுவடைகிறது. எனவே, திருக்கோவலூர் கல்வெட்டில் குறிப்பிடப்படும் ‘மெய்க்காப்பு’ என்பது ஏதோ ஒரு தனிப்பட்ட பாதுகாப்புச் செயலைக் குறிக்காமல், ஊர்ச் சமூகங்களின் கூட்டுப் பொறுப்பின் கீழ் கோயிலுக்காக நியமிக்கப்பட்ட காவல் பணியாரகாக அறிய முடிகிறது.

தஞ்சைப் பெரியகோயிலின் மெய்க்காப்பு அமைப்பு சோழர்கால நிறுவனப் பாதுகாப்பின் ஒழுங்கமைக்கப்பட்ட தன்மையை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த சான்றாகும். முதலாம் இராசராச சோழனின் ஆணைப்படி, சோழமண்டலத்திலுள்ள பிரம்மதேய ஊர்களிலிருந்து பெரியகோயிலின் பாதுகாப்பிற்காக மெய்க்காப்பாளர்கள் முறைப்படியாக நியமிக்கப்பட்டனர். South Indian Inscriptions (SII) தொகுதி II-இன் 57 மற்றும் 70-ஆம் கல்வெட்டுகளின்படி, 131 ஊர்களிலிருந்து மொத்தம் 143 மெய்க்காப்பாளர்கள் வழங்கப்பட்டனர்; இதில் பெரும்பாலான ஊர்கள் தலா ஒருவரையும், சில ஊர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட காவலர்களையும் வழங்கியுள்ளன.

ஒவ்வொரு மெய்க்காப்பாளருக்கும் ஆண்டுக்கு 100 கலம் நெல் ஊதியமாக வழங்கப்பட வேண்டுமென்றும், அந்த ஊதியத்தை அக்கோயிலுக்குக் காவலர்களை வழங்கிய ஊர்களின் குடிகளே வரிக்கடமையின் ஒரு பகுதியாகச் செலுத்த வேண்டுமென்றும் உறுதியான ஏற்பாடுகள் செய்யப் பெற்றிருந்தன. மேலும், SII தொகுதி II-இன் 11-ஆம் கல்வெட்டுச் செய்தியின்படி, கேரளாந்தகன் திருவாயிலும் அணுக்கன் திருவாயிலும் மெய்க்காப்புப் பிரிவுகள் சிறப்புடன் பணியற்றியுள்ளன. இத்தகவல்கள் கோயில் பாதுகாப்பு என்பது வெறும் தனிப்பட்ட காவலர்களின் சேவையாக மட்டுமன்றி, ஊர்வாரியான பணியாளர் நியமனம், ஊதிய நிர்ணயம், வருவாய் ஒதுக்கீடு மற்றும் பாதுகாப்புப் பணியிடங்களின் பகிர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான நிர்வாக அமைப்பாக விளங்கியதை ஐயமின்றி உணர்த்துகின்றன.

கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயிலில் அமைந்துள்ள உத்தமசோழன் காலக் கல்வெட்டுகளில் (SII, Vol. III, No. 151, 151A), கோயில் பணியாளர்களின் உணவு, உடை உள்ளிட்ட வாழ்வாதாரத் தேவைகளுக்காக நிலவருவாய் ஒதுக்கப்பட்ட செய்திகள் விரிவாகப் பதிவாகியுள்ளன. குறிப்பாக, நந்தவனப் பணியாளர்கள் நால்வருக்குக் ‘கொற்றுக்கும் (உணவுச் செலவு) புடவை முதலுக்கும்’ (ஆடைச் செலவு) நிலவருவாய் அளிக்கப்பட்ட விபரம், சோழர்காலக் கோயில் பணியாளர்களின் ஊதிய முறையையும் வாழ்வியல் பராமரிப்பையும் தெளிவாக விளக்குகிறது.

இச்செய்தியோடு, ஆய்வுகளில் குறிப்பிடப்படும் ‘திருமெய்க்காப்பார் மூவருக்குப் புடவை’ என்னும் குறிப்பையும் இணைத்து நோக்க வேண்டியுள்ளது. அதேபோன்று, கி.பி. 905-ஆம் ஆண்டு காலக்கட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் நெடுங்குடி மெய்க்காப்பு தொடர்பான செய்தியும் (TASSI, 1962–65, பக். 1–31; PNDCP, பக். 95–115). இவ்விரு பதிவுகளுக்குமான வரலாற்றுச் சான்றுகளையும் மூல வரிகளையும் முழுமையாக உறுதிப்படுத்தும்போது, ‘மெய்க்காப்பு’ என்ற சொல்லின் தொடக்க காலப் பயன்பாட்டையும், ‘திருமெய்க்காப்பார்’ என்னும் பாதுகாப்புப் பணியாளர் பிரிவினரின் பொருளியல் வாழ்நிலையையும் மேலும் துல்லியமாகத் தெரிய வருகிறது.

சோழர்கால சமூக, பொருளியல் மற்றும் நிர்வாக அமைப்புகளை விரிவாக ஆராய்ந்த ஒய். சுப்பராயலு, நொபொரு கரஷிமா, பர்ட்டன் ஸ்டெயின் மற்றும் ஆர். சண்பகலட்சுமி ஆகிய அறிஞர்களின் வரலாற்று ஆய்வுகளை இக்கல்வெட்டுச் சான்றுகளுடன் இணைத்துப் பார்ப்பது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. குறிப்பாக, சுப்பராயலு மற்றும் கரஷிமா ஆகியோரின் கல்வெட்டு அடிப்படையிலான ஊராட்சி, நிலவுடைமை, வருவாய் மற்றும் பணியாளர் அமைப்புகள் பற்றிய ஆய்வுகள், மெய்க்காப்புப் பணியின் பொருளியல் அடித்தளத்தைத் தெளிவுபடுத்த உதவுகின்றன. மேலும், கரஷிமா அவர்களின் சோழர்காலப் படைப்பிரிவுகள் தொடர்பான விவாதங்களில் ‘திருமெய்க்காப்பார்’ என்ற பெயரும் இடம்பெறுவது, இச்சொல்லிற்குப் பின்னால் உள்ள இராணுவப் பின்னணியையும் சேர்த்தே ஆராய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

அதேவேளையில், பர்ட்டன் ஸ்டெயினின் சோழர்கால அரசியல் கட்டமைப்பு மற்றும் உள்ளூர் நிறுவனங்களின் பங்கு பற்றிய கோட்பாட்டு அணுகுமுறையும், ஆர். சண்பகலட்சுமி அவர்களின் கோயில்கள், நகரக் குடியிருப்புகள் மற்றும் சமூக-பொருளியல் நிறுவனங்களின் பரஸ்பரத் தொடர்பு குறித்த ஆய்வுகளும், மெய்க்காப்பு அமைப்பைப் பரந்த வரலாற்றுச் சூழலில் புரிந்து கொள்ளப் பெரிதும் துணைபுரிகின்றன. இருப்பினும், இவ்வறிஞர்கள் அனைவரும் ‘மெய்க்காப்பு’ என்ற குறிப்பிட்ட சொல்லுக்கு ஒரே மாதிரியான விளக்கத்தையே அளித்துள்ளனர் என்று எடுத்துக்கொள்ள முடியாது. மாறாக, அவர்களின் ஆய்வுக் கருத்துகள் இக்கல்வெட்டுச் செய்திகளை ஆழமாக விளக்குவதற்கும், முறையான வரலாற்று நோக்கில் அணுகுவதற்கும் பயன்படும் முக்கிய வழிகாட்டிகளாகவே கருத வேண்டியுள்ளது.

இச்சான்றுகளை ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, 'மெய்க்காப்பு' என்பது பாதுகாப்புப் பணியையும், 'மெய்க்காப்பான்' அல்லது 'மெய்க்காப்பார்' என்பது அப்பணியில் ஈடுபட்ட நபர்களையும், 'மெய்க்காவல் காணி' மற்றும் 'மெய்க்காவல் கூலி' என்பவை அப்பணிக்காக அளிக்கப்பட்ட நில உரிமையையோ அல்லது பொருளியல் ஊதியத்தையோ குறித்திருக்கிறது எனலாம். குறிப்பாக, திருக்கோவலூர் கல்வெட்டில் காணப்படும் ஊர்வாரியான மெய்க்காப்பு ஒதுக்கீடும், தஞ்சைப் பெரியகோயிலில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊர்வாரியான காவலர் நியமனமும், பாதுகாப்புப் பொறுப்பானது உள்ளூர் கிராமச் சமூகங்களின் பொருளியல் பங்களிப்போடு நேரடியாக இணைக்கப்பட்டிருந்ததைத் தெளிவாகக் காட்டுகின்றன.

இதன் அடிப்படையில் சோழர்கால மெய்க்காப்பு முறையை அரச மெய்க்காவல், கோயில் நிறுவனப் பாதுகாப்பு மற்றும் ஊர்ச் சமூகங்களின் காவல் பொறுப்பு ஆகிய மூன்று முக்கிய பரிமாணங்களில் பகுப்பாய்வு செய்ய முடிகிறது. எனவே, சோழர் ஆட்சியில் மெய்க்காப்பு என்பது வெறும் தனிப்பட்ட உடற்காவல் நடவடிக்கையாக மட்டும் சுருங்கிவிடாமல், நிலவருவாய், ஊதிய நிர்ணயம், ஊராட்சி நிர்வாகம் மற்றும் கோயில் நிறுவனப் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்ட ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட நிர்வாக அமைப்பாகத் திகழ்ந்துள்ளது என்ற வரலாற்று முடிவை முன்வைக்க முடிகிறது. இதன் மூலம் கங்கைகொண்டசோழபுரம் அருகில் உள்ள மெய்க்காவல் புத்தூர் எனும் ஊர், இதன் அடிப்படையில் அமையப்பெற்று கங்கைகொண்டசோழீசர் ஆலைய மெய்க்காப்பு மற்றும் பிற நிர்வாகங்களிலும் பங்கு பெற்றவர்கள் வாழ்விடமாக கருத இடமுண்டு. இவ்வூர் பகுதி வீரபோகமாக இருந்ததால் அரசனின் மெய்க்காவல் புரிந்தோர் வாழ்விடமாகவும் கருதலாம்.நேரடியான உறுதியான சான்றுகள் இதுவரைக் கிட்டவில்லை.

நூல் உதவி;

  1. South Indian Inscriptions, Vol. III, No. 105 (ARE 164/1912) — திருவொற்றியூர், மெய்க்காப்பான்.
  2. South Indian Inscriptions, Vol. VII, No. 858 (ARE 231/1902) — திருக்கோவலூர், ஊர்வாரியான மெய்க்காப்பு.
  3. South Indian Inscriptions, Vol. II, Nos. 57, 70 — தஞ்சைப் பெரியகோயில் மெய்க்காப்பாளர்கள் மற்றும் ஊதிய ஏற்பாடு.
  4. South Indian Inscriptions, Vol. II, No. 11 — தஞ்சைப் பெரியகோயில் வாயில்களின் மெய்க்காப்பு தொடர்பான குறிப்பு.
  5. South Indian Inscriptions, Vol. III, Nos. 151, 151A — கோனேரிராஜபுரம் கோயில் பணியாளர் பராமரிப்பு.
  6. Subbarayalu, Y. (2012). South India under the Cholas. Oxford University Press.ISBN: 9780198077350.
  7. Karashima, N. (2009). Ancient to medieval: South Indian society in transition. Oxford University Press.ISBN: 9780198063124.Champakalakshmi, R. (1996). Trade, ideology and urbanization: South India 300 BC to AD 1300. Oxford University Press.ISBN: 9780195638700.Stein, B. (1980). Peasant state and society in medieval South India. Oxford University Press.

No comments:

Post a Comment