குற்றமும் தண்டனையும் –
ஒரு நந்தா விளக்கு
‘ குற்றமும் தண்டனையும்’Crime and
Punishment என்பது ரஷ்ய எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி (Fyodor Dostoevsky) எழுதிய புகழ்பெற்ற நாவல். இது 1866ஆம் ஆண்டு வெளியானது. அது பற்றி நாம் பார்க்கப்
போவதில்லை. ஆனால் சோழர்காலத்திய குற்றமும் தண்டனையும் எனபதில் தணடனையாக நந்தா விளக்கு
எரிக்க வேண்டும் அல்லது நெந்தா விளக்கு வைக்க வேண்டும் என கூறப்படுவது பற்றிக் காணலாம்.
சோழர்காலத்தில் இன்று உள்ளது போல் இந்திய தண்டனைச் சட்டங்கள் இல்லை.மாறாக பாவம்-புண்ணியம்
என்ற அடிப்படையில் தர்மம் எனும் வைப்பட்ட ஆட்சி நிர்வ்வாக இருந்தது. இதை சமயசார் இறையாண்மை எனலாம். சோழர்
காலத்தில் அரசியல் இறையாண்மை சமய அறத்தோடு இணைத்து நியாயப்படுத்தப்பட்டது; அதன் வெளிப்பாடுகளில் ஒன்றாக, சில குற்றங்களுக்கான பொருளாதாரத் தண்டம் நந்தா விளக்குக்
கொடை என்னும் சமயப் பரிகார வடிவில் விதிக்கப்பட்டது.
நந்தா
விளக்கு என்பது அணையாமல் தொடர்ந்து எரியச் செய்யப்படும் திருவிளக்காகும். இதற்குத்
தேவையான நெய்யை நிரந்தரமாகப் பெறுவதற்குத் தஞ்சைப் பெரியகோயிலின் இராசராச சோழன்
கல்வெட்டில் ஒரு விளக்குக்கு 96 ஆடுகள்
அல்லது 48
பசுக்கள் அல்லது 16 பெண் எருமைகள் ஒதுக்கப்பட்டதாகப் பதிவாகியுள்ளது. இக்கால்நடைகளைப் பெற்ற
இடையர்கள், நாள்தோறும் ஒரு
விளக்குக்கு ஓர் உழக்கு நெய் வழங்க வேண்டியிருந்தது (Hultzsch,
1895, pp. 249–252, inscriptions 63–64: தென்னிந்தியக்
கல்வெட்டுகள், தொகுதி II, பகுதி
III, எண் 63, பக். 249–251).“சாவா மூவாப் பேராடு” என்ற தொடர், தனிப்பட்ட ஆடுகள் இறப்பதில்லை அல்லது மூப்படைவதில்லை
என்பதைக் குறிக்காமல், இறப்பு
மற்றும் முதுமையால் ஏற்படும் இழப்புகளைப் புதிய கால்நடைகளால் ஈடுசெய்து மந்தையின்
எண்ணிக்கையைத் தொடர்ந்து பேணும் நிபந்தனையைக் குறிக்கிறது.
இவ்வேற்பாடு
நிலைத்திருக்கக் கால்நடைகளின் ஆயுட்காலம், இனப்பெருக்கத் திறன், குட்டிகள்
மற்றும் கன்றுகளின் உயிர்வாழ்வு, பால்
உற்பத்தித்திறன் ஆகியவற்றைக் கவனிப்பது அவசியமாகிறது. இதன் பொருளியல் அளவையும்
கல்வெட்டுச் செய்திகள் வழியாக மதிப்பிடலாம்: கல்வெட்டு எண் 64-இல் ஒன்பது காசுகளுக்கு 27 ஆடுகள் வாங்கப்பட்டதாகப் பதிவாகியுள்ளதால், அந்த விலை விகிதத்தில் 96 ஆடுகளின்
முதலீட்டு மதிப்பு 32 காசுகளாகிறது.
மேலும், பெரியகோயிலில் குடை பிடிக்கும் பணியாளருக்கு ஆண்டுக்கு 40 கலம் நெல் வழங்கப்பட்டதும், ஒரு காசுக்கு இரண்டு கலம் நெல் என்ற விலையும்
பதிவாகியுள்ளன; இவ்விகிதப்படி அவரது
ஆண்டு ஊதியத்தின் மதிப்பு 20 காசுகளாகிறது.
ஆகவே,
ஒரு நந்தா விளக்குக்கான கால்நடை முதலீடு, அப்பணியாளரின் சுமார் ஒன்றரை ஆண்டுக்கும் மேலான
ஊதியத்துக்கு இணையானதாக மதிப்பிடலாம்.
இந்த
ஒப்பீடு பதிவான விலைகளின் அடிப்படையிலான கணக்கீடே தவிர, அக்காலப் பொதுத் தொழிலாளரின் தினக்கூலியையோ விளக்கின்
முழுப் பராமரிப்புச் செலவையோ குறிக்காது. இவ்வாறு நந்தா விளக்குக் கொடை, குறிப் பிடத்தக்க தொடக்க முதலீட்டையும் மந்தையின்
தொடர்ச்சியான பராமரிப் பையும் சார்ந்த நிலையான நெய் வழங்கல் ஏற்பாடாக விளங்கியது. சோழர் காலத்தில் உயிரிழப்புகளைத் தொடர்ந்து கோயில்களில்
விளக்கு எரிப்பதற்குக் கொடைகள் வழங்கப்பட்டமை, நினைவுகூரல், சமயப்
பரிகாரம்,
நீதித் தீர்ப்பு, சமூகச் சமரசம் ஆகிய வெவ்வேறு நோக்கங்களோடு தொடர்புடையதாக இருந்தது.
கீழப்பழுவூர்
ஆலந்துறையார் கோயிலில், மல்லூரைச்
சேர்ந்த வெள்ளாளரான நம்பன் என்பவரைக் கைக்கோளன் பலதேவன் வையிரி கொன்றதையொட்டி, பழுவேட்டரையர் கண்டன் மறவன் 90 ஆடுகள் வழங்கிய பதிவும், மாதேவடிகள் என்பவரால் மோதலில் கொல்லப்பட்ட வீரகலி அரங்கனுக்காகப்
பழுவேட்டரை யர் குமரன் மதுராந்தகன் நந்தா விளக்கு எரிக்க 90 ஆடுகள் வழங்கிய பதிவும் காணப்படுகின்றன.
மேலும், விக்கிரம சோழன் காலமான கி.பி. 1127 (NDI. No. 160) சென்னிவலக் கூற்றத்துச் சுருதிமான்களுக்கு
இடையே நடந்த சண்டையின் போது, எதிர்பாராத விதமாக ஒரு அம்பு
பாய்ந்து பள்ளி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இதனால் சுருதிமான்
நாட்டாரும், பள்ளி நாட்டாரும் பகைமை கொண்டனர். இறுதியில்
இப்பிரச்சினையைத் தீர்க்க, சுருதிமான் நாட்டார்
உயிரிழந்தவரின் ஆன்மா சாந்தியடையக் கீழப்பழுவூர் சிவன் கோவிலில் நந்தாவிளக்கு ஒன்றை அமைத்தனர்.( அரியலூர் மாவட்டக் கல்வெட்டுகள்.இல.தியாகராசன்.க.எண்;164)
இதேபோன்று, கே. எஸ். இராமச்சந்திரன், சி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் “Criminal Justice under the Colas” கட்டுரையில், உலக்கையூரில் வேட்டையின்போது ஏற்பட்ட உயிரிழப்புக்காக விளக்கு எரிக்க 32 பசுக்களும் ஒரு காளையும் வழங்கப்பட்ட செய்தி (ARE
352/1909; பக். 205–206), பிரம்மதேசத்தில் தவறுதலாக ஒருவரைக் கொன்ற பாவத்தை நீக்க
நான்கு நந்தா விளக்குகளுக்கு 128 பசுக்கள்
வழங்கப்பட்ட செய்தி (ARE 159/1918; பக். 206), புள்ளமங்கையில்
காவலர்களிடையேயான மோதலில் உயிரிழந்த குப்பைப் பெருமாளுக்காக முக்கால் நந்தா
விளக்கு எரிக்க 72 ஆடுகள்
வழங்கப்பட்ட செய்தி (பக். 208) ஆகியவை
எடுத்துரைக்கப்படுகின்றன.
இச்சான்றுகளை
ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, விளக்குக்
கொடை என்பது ஒரு தண்டனையாக கருதலாம், தொடர்ந்து நெய் அல்லது எண்ணெய் வழங்கு வதற்கான
பொருளாதார ஏற்பாடாகவும், உயிரிழப்பைச்
சமய அறத்தின் வழி யாக எதிர் கொள்ளும்
செயலாகவும் விளங்கியது எனலாம்.பொருள் வகை
அபரதம் தண்டம் எனலாம். ஆயினும், இறந்தவரின் நினைவாக மற்றொருவர் வழங்கிய கொடை, குற்றத்துக்குப் பொறுப்பானவர்மீது விதிக்கப்பட்ட தண்டம், சமூகக் குழுக்கள் ஏற்றுக்கொண்ட சமரச ஏற்பாடு ஆகியவற்றைத்
தனித்தனியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
நந்தா விளக்குக் கொடைகள்
நீதித் தீர்ப்பின் வழியாக விதிக்கப்பட்ட தண்டங்களாக மட்டுமன்றி, தனிநபர்கள் தாமாக முன்வந்து அளித்த கோயில் கொடைகளாகவும் அமைந்துள்ளன.
இத்தகைய கொடைகளின் பின்னணியில் பக்தி, அறச்செயல், நினைவுகூரல் ஆகிய நோக்கங்களுடன், பாவத்திற்குப்
பரிகாரம் தேடும் மனநிலையும் இருந்திருக்கலாம். ஒருவர் தாம் செய்த ஏதோ ஒரு செயலைப்
பாவமாகக் கருதி, அதனால் மனத்தில் நிலைத்த
குற்றவுணர்விலிருந்து விடுபடுவதற்காக நந்தா விளக்கு எரிக்கும் கொடையை
அளித்திருக்கவும் வாய்ப்புள்ளது. எனினும், கொடைக்கான
காரணத்தைக் கல்வெட்டு வெளிப்படையாகக் குறிப்பிடாத நிலையில், அதனைப்
பாவப் பரிகாரக் கொடை என்று உறுதியாக வகைப்படுத்த முடியாது; தனிநபரின்
சமய நம்பிக்கையும் மனச்சாட்சியும் இத்தகைய கொடைக்குத் தூண்டுதலாக இருந்திருக்கலாம்
என்ற ஆய்வுச் சாத்தியமாகவே கொள்ள வேண்டும்.
பொருளியல் அடிப்படையில் இது
குறிப்பிடத்தக்க சுமை ஆகும் “விளக்கு எரிக்க வேண்டும்”
என்ற சொற்றொடர் எளிதாகத் தோன்றினாலும், அதன் பின்னால் ஆடுகள்
அல்லது பசுக்களைக் கொடையாக வழங்கும் முதலீடும், தொடர்ந்து
நெய் வழங்கும் பொறுப்பும் இருந்தன. தஞ்சைக் கல்வெட்டின் விலைவிகிதத்தில், 96 ஆடுகளின்
மதிப்பு 32 காசுகள்; அது குடை
பிடிக்கும் கோயில் பணியாளரின் 1.6 ஆண்டு ஊதிய மதிப்புக்கு இணையானது.
இதனால் ஒரு விளக்குக்கான கொடையே கணிசமான பொருளாதார மதிப்புடையதாக இருந்ததை
உணரலாம். 32 பசுக்களும் ஒரு
காளையும், 72 ஆடுகள், அல்லது 128
பசுக்கள் போன்ற கொடைகளைத் தனிநபர் வழங்க வேண்டியிருந்தது என்றால்,
அது கணிசமான சொத்திழப்பை ஏற்படுத்தும் பொருளாதாரத் தண்டமாகும். சுமையின்
தீவிரம் அவரது செல்வநிலையைப் பொறுத்திருந்தாலும், “விளக்கு
எரிக்கச் சொன்னார்கள்” என்பதால் அதை எளிய தண்டனையாகக் கருத முடியாது.
எனவே, “தனிநபர்மீது விதிக்கப்பட்ட பெரும் பொருளாதாரத் தண்டம், நந்தா விளக்குக் கொடை என்னும் சமயப் பரிகார வடிவில்
நடைமுறைப்படுத்தப்பட்டது” என்று கூறலாம்.
நூல் உதவி:
Ramachandran, K. S., &
Krishnamurthi, C. (1958). Criminal justice under the Colas. The Indian
Historical Quarterly, 34(3–4), 205–214.
Hultzsch, E. (Ed. & Trans.).
(1895). South-Indian inscriptions: Tamil inscriptions of Rajaraja,
Rajendra-Chola, and others in the Rajarajesvara temple at Tanjavur (Vol. 2,
Part 3: Supplement to the first and second volumes). Government Pres
இல.தியாகராசன்.2017.அரியலூர் மாவட்டக்
கல்வெட்டுகள்.தொகுதி.2.வெளியீடு; மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனம்,தத்தனூர். ISBN:
978-93-5001-547-6.
இரா.கோமகன்.2025.சோழர்கால நடுநாட்டு (அரியலூர் மாவட்ட) பள்ளிகள் கல் வெட்டுகள்.
No comments:
Post a Comment