Saturday, October 10, 2026

உருவான தொழில் நுட்பமும் உருக்குலையும் (GEN-Z) தலைமுலையும்…

 உருவான தொழில் நுட்பமும் உருக்குலையும் (GEN-Z) தலைமுறையும்…

இரா.கோமகன், தகைசால் பேராசிரியர், கடல்சார் தொல்லியல் & வரலாறு துறை.தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்.

பசுமைப்புரட்சியின் உளவியல் செயல்பாடுகளின் அதீத அறுவடையை நாம் இன்று இளையதலைமுறைச் செயல்பாடுகளாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது. முதல் குற்றவாளிகளாக முந்தையத் தலைமுறை (Gen-X) தான் நிற்கிறது. தென்னம்பிள்ளை என நம் தமிழ்சமூகம் தென்னையை அதன் பண்போடு ஒப்பிட்டு ‘பிள்ளை’ என்ற பதத்தை இணைத்தனர். அந்தப் பிள்ளையைக் குறுகியகால உடனடிப் பலன் பொருட்டு குட்டைத் தென்னை ஆக்கினர்.இது மாமரத்துக்கும் நிகழ்ந்தது.1960-களின் பசுமைப் புரட்சியில், அந்த ஏழரைசனித் தொட்டுத் தொடர்ந்து இன்னும் விட்டபாடில்லை. “நாட்டைக் காப்பது படைவீரன் (ஜவான்)”, “நாட்டை ஊட்டுவது விவசாயி (கிசான்)” என்ற கருத்தை மிக எளிமையாக, 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இந்தியா–பாகிஸ்தான் போர் நடந்துகொண்டிருந்தபோது லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் தெரிவித்தார். இது உளவியல் ரீதியாகப் படை வீரர்களையும் விவசாயியையும் இணைத்தது. நிலம்,புலத்தோடு ஊன்றி நின்ற விவசாயின் நிலவுடமைச் சிந்தனைத் தூண்டப்பட்டுப் பெருமித உணர்வுக்  கட்ட மைக்கப்பட்டது. இதன் நீட்சியாக 1970-களின் ஆரம்பத்தில் (1971–72) இந்திரா காந்தி, பசுமைப் புரட்சி (Green Revolution) திட்டங்களை விரிவுபடுத்தும்போது “ஜெய் ஜவான் – ஜெய் கிசான் திட்டம்” எனும் சமூகப் பொருளாதார திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

 இதன் பின் 1966–67ல் பசுமைப் புரட்சி திட்டங்கள் (HYV விதைகள், உரங்கள், பாசனத் திட்டங்கள்) அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன. குறுகியக் காலத்தில் பலனை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை விவசாயிகளின் மனதில் வேரூன்றியது.இது பாரம்பரிய பொறுமை, தற்பெருமை மனப்பான்மையை உடைத்துக் கொண்டு, வணிக நோக்கமுடைய, உடனடிப் பலனை நாடும் உளவியல் நிலையை உருவாக்கியது. பாரம்பரிய விவசாயிகள் சுயமாக விதைகள் வைத்துக் கொண்டிருந்தால் அரசு அல்லது சந்தை கட்டுப்படுத்த முடியாது. புதிய விதை–உரம்–பூச்சிமருந்து சுழற்சியின் மூலம் விவசாயியை முறையாகக் கட்டுப்படுத்தி, வரி, விலை, ஏற்றுமதி போன்றவற்றை வழிநடத்தும் உளவியல் அரசின் பின்புலமாக இருந்தது.

இதனால் பாரம்பரிய தற்பெருமை விவசாயம் (subsistence farming) மெல்ல மாறி, சந்தைக்கு உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வணிக நோக்குடைய விவசாயமாக (commercial agriculture) மாற்றப்பட்டது. விவசாயி தனது குடும்பத் தேவைக்காக மட்டுமே அல்லாமல், சந்தை விலையை நோக்கி அதிக உற்பத்திச் செய்து விற்பனை செய்யத் தூண்டப்பட்டார். இவ்வாறு, விதைகள்–உரம்–பூச்சிமருந்துகள் என்ற மூன்று அடுக்குகள் வெளிநாட்டு அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்களின் தாக்கத்தில் உருவாகி, விவசாயியை சந்தைச் சார்பாக்கி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளித்துவ வளர்ச்சிக்கு வழிவகுத்தன. இது உணவுத் தன்னிறைவை உறுதிசெய்தாலும், விவசாயியின் தற்சார்பைக் குறைத்து, உலகளாவிய மூலதனப் பிணைப்புகளில் இந்திய விவசாயத்தைச் சிக்கவைத்த ஒரு அடிப்படை மாற்றமாகக் கருதப்படுகிறது.

பசுமைப் புரட்சிக்குப் பின் இந்திய விவசாயம் ஒரு “மூக்கோண வணிகச் சக்கரம்” — விதைகள், உரங்கள், பூச்சிமருந்துகள் — மீது முழுமையாக சார்ந்துவிட்டது. பாரம்பரிய காலத்தில் விவசாயிகள் தாமே விதைகளை சேமித்து அடுத்த பருவத்திற்குப் பயன்படுத்திக்கொண்டார்கள்; ஆனால் உயர்விளைச்சல் தரும் குட்டை, கலப்பினவிதை மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட விதைகள் வந்தபின், அவற்றை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்தே வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. குறிப்பாக HYV (High Yielding Variety) கோதுமை மற்றும் நெல் வகைகள் Norman Borlaug தலைமையிலான மெக்சிகோவிலிருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன.இது ஒருவகைப் பொருளியல் பண்பாட்டுச் சிதைவாக கூறலாம்.

 இன்றையத் தொழிற்நுட்ப இளையத்தலைமுறை (Gen -Z)யின் சிக்கல்களை இதோடுப் பொருத்திப் பார்க்கலாம். இந்த பன்னாட்டு மூலதனப் பெருக்கத்திற்கான தொழிநுட்ப பெருக்கம், ஒரு புறம் வரமாகவும் மறுபுறம் சாபமாகவும் அமைந்து போனதற்கு அடிப்படை மூலதனத்தின் பேராசை ஆகும். எழுபதுகளில் வேட்டையாடப்பட்ட விவசாயிகள் போலவே இன்றைய இளையதலைமுறை வேட்டையாடப்படுகிறது.இரண்டிலும் சந்தைப்படுத்தும் பொருளியல் சார்ந்த தொழிநுட்ப வளர்ச்சியையும் காரணமாகச் சுட்டலாம்.

தமிழ்நாட்டின் இன்றைய பேசுபொருள் கரூர் மாநகரத்தின் கூட்டநெரிசல் உயிரிழப்புகள்.இதை மற்றைய நிகழவுகளில் ஏற்பட்ட நெரிசல் உயிரிழப்புகளாகக் கடந்து போக இயலாது அதை வெறும் சினிமா ரசிகர் கூட்டத்தின் சங்கடமாகவும் விட்டுவிட முடியாது.கட்டுக்கடங்காதாத கூட்டமல்ல கட்டுப்பாடு அற்றக் கூட்டம் எனும் விமர்சனங்களோடு இந்த நிகழவிலிருந்து கடந்துபோனால் அது கரிசனமற்றச் சொல்லாடலாகவே அமைந்துவிடும். நமது புதிய தலைமுறையைப் பொறுப்புடன் அணுகி அதன் போக்கை அறிந்து அதோடு ஊடாட வேண்டும்.

இன்றையக் கல்விப்புலன் சார்ந்த ஆவுகள் (Population studies) மாந்தரினத்தைச் சந்தைக்காவும், மனநிலை ஆய்வுக்காகவும் படிநிலைப்படுத்தியுள்ளன. இந்த படிநிலைப்படுத்துதல் கூட ஒருவகை அதிகாரச்செயலாக பொருளாதரச் சுரண்டலுக்கான அமைப்புருவாக்கமாகக் கருதலாம். தலைமுறைகளைப் படிநிலைப்படுத்தும் முறை (Generation Labelling/Categorization) என்பது ஒரு தனிப்பட்ட முடிவு அல்ல; இது சமூக ஆய்வாளர்கள், மக்கள்தொகை நிபுணர்கள் (Demographers), மற்றும் சந்தை ஆய்வாளர்கள் (Market Researchers) ஆகியோரால் குறிப்பிட்ட சமூக, பொருளாதார, மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களைப் புரிந்து கொள்வதற்காகக் காலப்போக்கில் உருவாக்கப்பட்ட ஒரு கருத்தாக புரிந்து கொள்ளலாம்.

இந்தத் தலைமுறைப் பிரிவுகளை முதன்முதலில் வரையறுத்து பிரபலப்படுத்திய முக்கிய ஆய்வாளர்கள், குறிப்பாக அமெரிக்காவில் உள்ள பெவ் ஆய்வு மையம் (Pew Research Centre) மற்றும் எழுத்தாளர்கள் வில்லியம் ஸ்ட்ராஸ் & நீல் ஹோவ் (William Strauss & Neil Howe) ஆகியோர் ஆவர்.

தலைமுறை (Generation)

தோராயமான பிறப்புக் காலம் (Approximate Birth Years)

உருவாக்கியவர்கள்/பிரபலப்படுத்தியவர்கள் (Key Originators/Popularizers)

முக்கிய நோக்கம் (Primary Purpose)

Gen X

1965 – 1980

வில்லியம் ஸ்ட்ராஸ் & நீல் ஹோவ் (இவர்கள் 1991-ல் 'Generations' என்ற நூலை எழுதினர்). மக்கள்தொகை நிபுணர்கள்.

பேபி பூமர்ஸ் (Boomers) தலைமுறைக்குப் பின்னால் உள்ள சிறு குழுவின் (Smaller Cohort) தனித்துவத்தைப் பிரித்துக் காட்டுதல்.

Gen Y (Millennials)

1981 – 1996

வில்லியம் ஸ்ட்ராஸ் & நீல் ஹோவ் (இவர்கள் 1990-களில் இந்தப் பெயரைக் கொடுத்தனர்). மேலும் சந்தை ஆய்வாளர்களால் பரவலானது.

2000-ஆம் ஆண்டு மில்லினியம் (Millennium) சூழலில் வளர்ந்த தலைமுறை என்பதைக் குறிக்க. தொழில்நுட்பம் மற்றும் கடனில் (Technology & Debt) வளரும் முதல் தலைமுறை.

Gen Z

1997 – 2012

பெவ் ஆய்வு மையம் (Pew Research Center), மக்கள்தொகை நிபுணர்கள் மற்றும் சந்தை ஆய்வாளர்கள். (பல பெயர்கள் முன்மொழியப்பட்டன, இறுதியாக Gen Z நிலைபெற்றது).

டிஜிட்டல் பூர்வீகமாக (Digital Natives) வளர்ந்த முதல் தலைமுறை. செப்டம்பர் 11 தாக்குதல் மற்றும் 2008 நிதி நெருக்கடியின் விளைவுகளுக்கு மத்தியில் வளர்ந்த தலை முறையைப் பிரித்துக் காட்டுதல்.

 

இவ்வகையான வகைப்படுத்தல் தமிழ்ச்சமூகத்தில் உண்டு அது அகப்பொருள் புறப்பொருள் எனும் புரிதலுக்காக நிகழ்த்தப்பட்டது. தொல்காப்பியத்தில் மாந்தர்களை ஆண், பெண் எனும் பிரிவில், அகவையைக் கணக்கிலெடுத்து வகைப்படுத்தியுள்ளார். முன்னது தலைமுறை படிநிலைப்படுத்துதல் பின்னது (தொல்காப்பியம்) வகைப்படித்துதல், முன்னதில் உள்ள நோக்கம் பொருளாதரச் சுரண்டல் பின்னதில் உள்ளது சமூக இயக்க வரையறை நிறுவுவது..

எண்

நூற்பா (தொகுப்பு)

ஆண் வயது நிலை

பெண் வயது நிலை

குறிப்பு / விளக்கம்

1

பொருளதிகாரம் – 90

குழந்தை

சிசு

பிறந்த பின் சிறுவயது

2

பொருளதிகாரம் – 91

அம்பல் வயது (வாலிபம்)

கன்னி

இளமைக்குள் நுழையும் பருவம்

3

பொருளதிகாரம் – 92

வாலிபன் / இளவன்

மங்கை

சமூக மற்றும் காதல் பொறுப்புகளுக்குத் தகுந்த வயது

4

பொருளதிகாரம் – 93

முதிர்ந்தவர்

பெண் (திருமணித்தவர்)

குடும்ப, சமூகப் பொறுப்புகளை ஏற்கும் நிலை

5

பொருளதிகாரம் – 94

முதுமை

முதுமைத் தாய்

உடல் சோர்வு, வாழ்வின் இறுதிக்காலம்

 

இன்றையச் சிக்கல் இப்பொழுதுள்ள பொருளியல் சுரண்டலுக்கு ஆட்படும் படிநிலைப் படுத்தப்பட்டச் சமூகத்தை அறிவது பயன்தரும். டிஜிட்டல் தொழிற்நுட்ப சமூக அகநிலையை அந்த நுட்பத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் உருவாக்குகின்றன.

Gen- Z (Generation-Z) எனும் இளைய தலைமுறை  டிஜிட்டல் உலகக் குழந்தைகள். இவர்கள் இத் தொழில் நுட்பத்தால் மற்ற தலைமுறையினரை விட அதிக அளவில் மன அழுத்தம், பதட்டம் (Anxiety) மற்றும் மனச்சோர்வு (Depression) ஆகியவற்றை கொணடவர்களாகின்றனர்.விரைவான, காட்சி அடிப்படையிலான உள்ளடக்கத்தை (வீடியோக்கள், ரீல்ஸ்) அதிகம் விரும்புவதால், இவர்களின் கவனக் காலம் சற்று குறுகியதாக (Short Attention Span)இருக்கலாம் . இவர்களின் குறுகிய கால கவனம் (Short-term focus) மற்றும் உடனடி முடிவுகளுக்கான எதிர்பார்ப்பு (Expectation of immediate results) ஆகியவை இவர்களை உடனடி திருப்திக்கான பலி (Victims of Instant Gratification) ஆக ஆக்குகிறது. இதைக் கைக்கொண்டு பல்வேறு நிறுவங்களால் (அரசியல், மதம் உள்ளிட்ட) பல்வேறு நிலைகளில் சுரண்டப் படுகின்றன.

 அரசியல், மத அமைப்புகள்  இவர்களின்  ஆன்லைன் செயல்பாட்டால் (Online Activism) கிடைக்கும் 'லைக்ஸ்' (Likes) மற்றும் 'ரீட்வீட்' (Retweets) மூலம் ஒரு வகை 'மெய்நிகர் அதிகாரத்தை' (Virtual Authority) உணர வைக்கப்படுகிறார்கள். இதை அரசியல், சமூக, மத அமைப்புகள் சாதமாக்கிக்கொண்டு வெறும் 'சமூக ஊடகப் போராளிகளாக' (Social Media Warriors) மட்டுமே பயன்படுத்திக் கொள்கின்றனரே தவிர, அவர்களுக்குக் கொள்கை வகுக்கும் அதிகாரத்தையோ, நிஜமான அரசியல் வளர்ச்சியையோ கொடுப்பதில்லை.

இந்த Gen Z தலைமுறை நீண்டகாலக் கட்சி விசுவாசத்தைக் (Party Loyalty) காட்டாமல், பிரச்சினை சார்ந்த (Issue-based) செயல்பாட்டையே விரும்புகிறது. கட்சிகள் இதைப் பயன்படுத்தி,  தங்களுக்குச் சாதகமான ஒரு பிரச்சினை எழும் போது மட்டும் இளைஞர்களை விரைவாகத் திரட்டிப்  (Rapidly mobilize) பயன் படுத்தி விட்டு, தேவை முடிந்ததும் அவர்களைக் கைவிடுகின்றன. சமூக  ஊடகங்களில் உண்மைச் செய்திகளை விட உணர்ச்சிவசப்பட்டப் போலியான தகவல்கள் (Misinformation/Fake News) விரைவாகப் பரவுகின்றன. இது பொதுவெளியில் ஆழமான, பகுத்தறிவு விவாதங்கள்  நடப்பதைத்தடுத்து, குழப்பத்தையும், அவ்வகை அணிச்சேர்க்கை யையும் (Polarization) துரிதப்படுத்துகிறது.

இந்த தலைமுறையினர் இயல்பான குறுகிய காலக் கவனம் காரணமாக, அவர்கள் ஒரு பிரச்சினையின் மீது விரைவான கோபத்தை (Quick Outburst of Anger) மட்டுமே காட்டிவிட்டு, நீண்டகால உறுதியான சீர்திருத்தங்கள் தேவைப்படும் போது அமைப் பிலிருந்து விலகிவிடுகிறார்கள். இது ஆக்கபூர்வமான மாற்றத்தைக் (Constructive Change) கொடுக்காமல், வெறும் சமூகக் கொந்தளிப்பை (Social Unrest) மட்டுமே காட்டுபவர்களாக உருவாகின்றனர்.

போதைப் பழக்கம் மற்றும் உடனடித் திருப்திக்கான நாட்டம் ஆகியவை, இளைஞர்களின் தனிப்பட்ட சுதந்திரமாக உருவாக்கப்படுகிறது. இதன் விளைவாக, சமூகப் பொறுப்புகள் (Social Responsibilities), ஒழுக்கம் மற்றும் சமூகக் கட்டுப்பாடுகள் (Societal Norms) ஆகியவை பலவீனமடைந்து, குழப்பமான தனிமனிதவாதத்தை (Chaotic Individualism) உருவாக்குகின்றன. புதிய ஒழுங்கமைவுக்கான வாய்ப்புகள் (Opportunities for a New Order) இருந்தாலும் அவற்றுக்கு அவர்கள் ஆட்படுவதில்லை.

ஒரு பெரிய நடிகரின் தீவிர ரசிகராகத் தங்களை முன்னிறுத்துவதன் மூலம், குறுகிய காலத்தில் மற்றவர்களின் கவனத்தையும் மரியாதையையும் பெற முயற்சிக்கிறார்கள். நடிகர்கள் திரையில் தீர்க்கும் சிக்கலான பிரச்சினைகள், நிஜ உலக அரசியலில் உள்ள சவாலான கோட்பாடுகள் மற்றும் நீண்ட காலச் சீர்திருத்தங்களைப் பற்றிச் சிந்திக்கவிடாமல், எளிமையான ஹீரோ சார்ந்த தீர்வுகளை (Simple Hero-based Solutions) நம்ப இளைஞர்களைத் தூண்டுகிறது.
அவர்களின் இயல்பு ஒருமைப்பாட்டிற்கு (Unity) மாறாக, உடனடி திரட்சி (Rapid Mobilization) மற்றும் விரைவான பிளவு (Quick Fragmentation) ஆகியவற்றின் கலவையாக,உள்ளது.

ஒரு புறம் வேலையின்மை, பொருளாதார நிலையாமை (அதாவது, 'எனது தனிப்பட்ட கவலை') என்ற பிரச்சனை உள்ளது. மறுபுறம், சாதி, மதம், சமூக நீதி, சுற்றுச்சூழல் (அதாவது, 'சமூகக் கவலை') போன்ற பெரிய இலக்குகளும் உள்ளன. இந்த இரண்டு கவலைகளுக்கு இடையே உள்ள முன்னுரிமைப் போராட்டம், அவர்களின் ஓர்மையைக் குலைக்கிறது.

முந்தைய தலைமுறையினர் ஒரு மையமான எதிரி அல்லது ஒரே ஒரு இலக்கு மீது கவனம் செலுத்த முடிந்தது. ஆனால், இன்றைய இளைத்தலைமுறை சமூக ஊடகங்கள் வழியாக ஒரே நேரத்தில் உலகளாவிய காலநிலை மாற்றம் முதல் உள்ளூர்ச்சாலைப் பிரச்சினை வரைப் பல பிரச்சனைகள் மீது கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்தப் பரவலாக்கப்பட்ட கவனம், ஓர்மையைக் குறைக்கிறது.
குழுக்களாகச் சமூக ஊடகங்களில் ஒன்றுபடுவதைப் போலத் தோன்றினாலும், அவர்களது பிணைப்புகள் பெரும்பாலும் திரைக்குப் பின்னால் இருக்கும் தனிநபர்களின் மெய்நிகர் பிணைப்புகள் (Virtual Bonds) மட்டுமே.

இது நிஜ உலகப் போராட்டங்கள் மற்றும் ஓர்மைக்குத் தேவையான ஆழமான தனிப்பட்ட அர்ப்பணிப்பையும் தியாக உணர்வையும் (Personal Sacrifice) கொடுக்க முடிவதில்லை. ஒரு குழு அல்லது அமைப்பிலிருந்து விலகுவது மிகவும் எளிது. ஓர்மையாக இருக்க வேண்டியதன் அழுத்தம் அல்லது தேவை இல்லை. ஒரு குழுவின் கருத்து ஒத்துப்போகவில்லை என்றால், அவர்கள் உடனடியாக 'அன்ஃபாலோ' (Unfollow) செய்துவிட்டு, வேறு ஒரு 'எக்கோ சேம்பர்' (Echo Chamber) எனப்படும் ஒத்த கருத்துடைய குழுவிற்குச் சென்று விடுகிறார்கள்.
அரசியல் மற்றும் கொள்கை ரீதியான நிலையாமை (Political and Ideological Instability) மனோநிலை நீடித்த உறுதியான தலைமையை ஏற்கும் மனநிலையிலிருந்து விலகும் பண்பால், ஓர்மையைத் தக்கவைக்க உதவும் ஒரு பொதுவான, ஏற்றுக்கொள்ளப் பட்ட தலைமை Gen Z-ன் இயக்கங்களில் இல்லை.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் போன்ற சில தன்னிச்சையான இயக்கங்களில் திரள முடிந்தாலும், அந்த ஓர்மை நீடிக்க ஒரு நிலையான தலைமை அமைப்பு இல்லாவிட்டால், இயக்கம் விரைவாகச் சிதைந்து விடுகிறது. கருத்தியல் அடிப்படையில் அணிதிரளுதல் (Ideological Polarization) என்பதில் இத்தலைமுறை சமூக நீதி மற்றும் பகுத்தறிவைப் பற்றிப் பேசினாலும், அதே சமயம் மதவாதக் குழுக்கள் மற்றும் கலாச்சார மோதல்கள் ஆகியவற்றால் தூண்டப்படும் உள் பிளவுகளுக்கு ஆளாகிறது. தமிழ்நாட்டில் அவர்களின் சமூகநீதிப் பார்வைகள், மொழிக் கருத்துக்கள் மற்றும் சாதி ரீதியான குழுக்களின் தாக்கத்தால் பிளவுபடுகின்றன.

ஒரு குறிப்பிட்ட அதிகாரம் அல்லது அமைப்பு தங்கள் வாழ்க்கை முறையை நேரடியாக அச்சுறுத்துகிறது என்று அவர்கள் உணரும்போது (உதாரணமாக, ஒரு பொதுவான தேர்வு முறையை எதிர்ப்பது அல்லது ஒரு அநீதிக்கு எதிராகப் போராடுவது), சமூக ஊடகங்களில் உணர்ச்சிவசப்பட்ட ஒரு நிகழ்வு அல்லது அநீதி குறித்த தகவல் வைரலாகும்போது பொது எதிரிகள் இவர்களுக்கு உருவாகுகின்றனர். ஒரு போராட்டத்தின் மூலம் தாங்கள் உடனடியாக ஒரு வெற்றியை (Immediate, Measurable Result) அடைய முடியும் என்று நம்பும் வகையான மனோநிலையில் சிக்கியுள்ளனர். அவர்கள் பிரச்சினை சார்ந்த, சூழலுக்கு ஏற்றாற்போல் திரளும் (Issue-based, Contextual Mobilizers) தலைமுறையினராக ஆக்கப்பட்டுள்ளனர். இவர்களின் ஓர்மை ஒரு நெகிழ்ச்சியான தன்மையைக் (Fluidity) கொண்டிருக்கிறது, இது போராட்டங்களில் மிக வேகமாக உருவாகி, இலக்கை அடைந்தவுடன் அதே வேகத்தில் மறைந்துவிடுமாறு உருவாகியுள்ளது.

இவ்வகையில் தான் நடிகர் விஜயின் பின்னால் இளையத் தலைமுறையினர் திரட்டப் படுகின்றனர். ஊழல் தான் ஒட்டுமொத்தப் பிரச்சனைக்கு காரணம் அதற்கு எதிரான அரசியல் தான் இளையத் தலைமுறையனரின் பிரச்சனைக்கு உடனடித் தீர்வை வழங்கும் என்பதாக நம்பவைக்கப்பட்டு உலகமயம், தாராளமயம், தனியார்மயம் போன்றவற்றை எதிர்த்தோ அல்லது உடன்பட்டோ பேசும் கோட்பாட்டு அரசிலை முன்னிலைப் படுத்துவதில்லை.

கோட்பாட்டு அரசியல், நீண்டகால அரசியல் இயக்கங்கள் என்பது அனலாக் உலகில் பிறந்து, பிறகு டிஜிட்டல் உலகிற்கு "குடியேறியவர்கள்" (Digital Immigrants) எனத்  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறவர்களாகிய ”பூமர்களின்” செயல்படாக உணர வைக்கப்படுகிறது. இன்னும் தனிப்பட்ட உரையாடல் (Face-to-face interaction), மின்னஞ்சல் மற்றும் முறையான தகவல் தொடர்பு முறைகளையே விரும்பும் சுயசார்பானவர்கள் (Self-Reliant) ஆகவும் மற்றும் தனிமையில் வேலை செய்வதை விரும்புவர்களான முந்தைய தலைமுறையை மறுதலிக்கும் போக்கு ஊக்கு வைக்கப்படுவதன் மூலம் கட்டுபாடு அற்றவர்களாக ஆக்கப்பட்டு பெரும் கூட்டம் கூட்டப்படுகிறது.

இது பன்னாட்டு நிறுவன பொருள்சார் நலனுக்கு உகந்த சூழலை உருவாக்குகிறது. நடிகர் விஜயால் திரட்டப்படும் இந்த ஜென் – இசட் தலைமுறையினர் இதற்கான அரசியல் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றனர். எந்த கூட்டத்திலும் விஜயின் பேச்சில் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் பற்றியோ அதன் பொருளாதார சுரண்டல் பற்றியோ பேசப்படவில்லை. இதுபற்றிப் பேசுபவர்கள் எதிரிகளாக உணரவைக்கப் படுகின்றனர்.

முரண்பாட்டுப் புள்ளி

Gen X (1965-1980)

Gen Z (1997-2012)

வெற்றிக்கான வழி

நிரந்தர வேலை, நிறுவன விசுவாசம், படிநிலை உயர்வு.

கிக் பொருளாதாரம், பக்கவாட்டு வருமானம், விரைவான தொழில் மாற்றம்.

மரியாதைக்கான அடிப்படை

பதவி, வயது மற்றும் அனுபவம்.

திறமை, நிபுணத்துவம், வெளிப்படைத்தன்மை.

தகவல் தொடர்பு

அனலாக் சிந்தனை, முறையான மின்னஞ்சல், தனிப்பட்ட சந்திப்பு.

டிஜிட்டல் மொழி, மீம்கள், குறுகிய வடிவ வீடியோக்கள்.

சமூகப் பிணைப்பு

நிஜ உலகின் அமைப்புகள் (சங்கம், அலுவலகம்).

மெய்நிகர் குழுக்கள், ஆன்லைன் சமூகம், 'எக்கோ சேம்பர்'.

 

இதனால் முந்தைய தலைமுறையினர் நிரம்பியக் கட்சிகள் இவர்களுக்கு கசப்பானதாக மாறுகிறது. அவர்களுக்குக் கோபம் வரும்போது, அதை விரைவான, உணர்ச்சிப்பூர்வமான மற்றும் பெரும்பாலும் வன்முறை வடிவிலான செயல்களின் மூலமே வெளிப்படுத்தத் தூண்டப்படுகிறார்கள். எனவே, அவர்களை "வன்முறையாளர்கள்" என்று சொல்வதை விட, "வன்முறை அபாயங்களுக்கு ஆளாகும் திறன் கொண்டவர்கள்" என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.இது தான் நாம் சந்திக்கப்போகும் பிரச்சனை.

விஜய் ஊழல் பற்றிப் பேசும் பொழுதும் அல்லது பாரம்பரிய கட்சிகளை விமர்சிக்கும் பொழுது இளைஞர்கள் அதை ஒரு கட்டளையாக அல்லாமல், தாங்கள் ஏற்கனவே நம்பும் ஒரு விஷயத்தைச் செய்யக் கிடைத்த உற்சாக அழைப்பாக  (Rallying Cry)  பார்க்கிறார்கள். இந்த கூட்டுக் குரல் கொடுப்பது என்பது, தங்களின் தனிப்பட்ட ஏமாற்றத்தை ஒரு பொதுவெளியில் பாதுகாப்பான வழியில் வெளிப் படுத்துவதற்கான ஒரு வழியாகவே அமைகிறது. இது அவர்களின் அடிப்படை அமைப்புசாரா மனநிலைக்கு எதிரானதல்ல; அது, தங்கள் கோபத்தை வெளிப்படுத்த அவர்கள் தேர்ந்தெடுத்த ஒரு கருவி (A Tool) மட்டுமே.

நீங்களே தொழில்முனைவோர்” என்ற கனவை விற்பனை செய்து, சந்தை அமைப்பு அவர்களை consumer–entrepreneur சுழற்சிக்குள் இழுக்கிறது. வேலைவாய்ப்பு நிச்சயமின்மை, உலக வெப்பமயமாதல், போர்/மோதல்கள் – இவை Gen Z மனதில் நிலையாமை (uncertainty) உணர்ச்சியை நிலைநிறுத்தி, புதிய யுக்திகளுக்குச் சுலபமாகச் சம்மதிக்க வைக்கிறது. “நான் யார்?” என்ற கேள்விக்கு பதில் தேடும்போது, சந்தை அவர்களுக்கு “இந்த பாணி (style), இந்த வகை(brand), இந்த செயலி (app) தான் உன் அடையாளம்” எனத் தருகிறது. அடிக்கடி புதிதாக வரும் போன், உடை, சாதனங்கள் – Gen Z-யை “சமீபத்தியதை வாங்க வேண்டும்” என்று தூண்டுகிறது.இது போல் தான் விஜய் எனும் சினிமா பிம்பத்தின் வழி தொடரும் அரசியல்.

இதை அக்கரையோடு சமூகப் பண்பாட்டுப் பிரச்சனையாக அணுகவேண்டும். அவர்கள்  சார்ந்த புவிப்பரப்போடு ஊன்றும் உணர்வுக்கு அவர்கள் மீட்டெடுக்கப் படவேண்டும். சமூகத்தின் உறுப்பாக கூட்டுப்பொறுப்பு உணரக்கூடிய கல்வியை தரவேண்டும். லூசுப்பயலுகள் என கடந்து போகக் கூடாது. இதை அறிவார்ந்த இயக்கங்கள் தான் முன்னெடுக்க முடியும். பண்பாட்டை மதச் சடங்கு அரசியலில் இணைக்கும் சிக்கலை உணர்ந்து இது கையாளப்பட வேண்டும். அரசியல் கட்சிகளுக்கான திட்டவரையறக்குள் இதை கொண்டுவரவேண்டும். மார்க்சிய சிந்தையாளர்களும் இயக்களும் இதை பண்பாட்டு தளத்திலும் அணுகவேண்டும்

No comments:

Post a Comment