Friday, October 23, 2026

கங்கைகொண்டசோழபுரத்து சோழ அரசதிகாரம் -The Chola State: Shaiva–Vedic Sacralisation and Central Management of Segmentary Authority

 

                               கங்கைகொண்டசோழபுரத்து சோழ அரசதிகாரம்

(The Chola State: Shaiva–Vedic Sacralisation and Central Management of Segmentary state)

சோழ அரசின் இயல்பை மையப்படுத்தப்பட்ட பேரரசு அல்லது கூறாக்க அரசு என இரு எதிரெதிர் துருவங்களாக மட்டும் பார்க்கத் தேவையில்லை. மாறாக, காலப் போக்கில் உள்ளூர் அதிகார அமைப்புகளை மறுசீரமைத்து, பேரரசனின் நேரடி அதிகாரத்தை விரிவுபடுத்திய ஒரு தொடர்ச்சியான அரச உருவாக்கச் செயல் முறையாக அணுகலாம்.

இப்பார்வையில், இராசராசசோழன் காலத்தில் வளநாடுகள் உருவாக்கப்பட்டது வெறும் நிர்வாகச் சீரமைப்பு மட்டுமல்ல; அது ஏற்கெனவே இருந்த நாடுகள், உள்ளூர் அதிகார மையங்கள் மற்றும் அவற்றின் எல்லைகளைப் புதிய பேரரசு நிர்வாக எல்லைக்குள் தொகுத்த அமைத்த ஒரு நிலவியல் மறுசீரமைப்பாகும்.

இதன் மூலம் குறுநில மன்னர்கள் மற்றும் மரபுவழி உள்ளூர் அதிகாரக் குழுக்களின் தனித்த எல்லைகள் பேரரசின் புதிய நிர்வாகப் பரப்பிற்குள் கொண்டுவரப்பட்டன. சுருக்கமாகச் சொன்னால், வளநாடு உருவாக்கம் என்பது உள்ளூர் அதிகாரத்தை அழித்த செயல் அல்ல; மாறாக, அதன் செயல்பாட்டு எல்லைகளை மறுவரையறை செய்து, பேரரசின் மேல்நிலை அதிகாரத்தின்கீழ் புதிய அதிகார மையங்களை உருவாக்கிய ஒரு அரசியல் நிலவியல் உத்தியாகும்.

‘கூறாக்க அரசு’ (Segmentary State) என்பது, மையத்தில் ஒரு மன்னன் இருந்தாலும், பல உள்ளூர் அதிகார அமைப்புகள் தங்களது சொந்தப் பகுதிகளில் சுயாட்சியுடன் நிர்வாகம் செய்யும் ஒரு அரசமைப்பாகும். வரலாற்றாசிரியர் பர்ட்டன் ஸ்டெயின், சோழர் ஆட்சிக் காலத்தை விளக்க இக்கோட்பாட்டினைப் பயன்படுத்தினார். இக்கருத்துப்படி, நாட்டார் மற்றும் வேளிர் எனப்படும் குறுநில மன்னர்கள் தத்தம் பிராந்தியங்களில் வரி வசூல், நீதி வழங்கல் போன்ற அன்றாட நடைமுறை நிர்வாகத்தை நேரடியாகக் கவனித்து வந்தனர். அவர்கள் குடித்தலைவர்களான வேளிர்கள். அவர்கள் கீழ் நாட்டார்கள் இயங்கினர். மலையமான், மிலாடுடையார், இருங்கோவேள், வண்ணாடுடையார், பழுவேட்டரையர், வாணவர், சம்புவர், காடவர்,விழுப்பரையர், இருக்குவேள் போன்றோரை சான்று காட்டலாம்.

நாட்டின் மையப் பகுதியில் மட்டுமே மன்னனின் நேரடிக் கட்டுப்பாடு வலுவாக இருந்தது. எல்லைப் பகுதிகளிலோ அல்லது தொலைதூரப் பகுதிகளிலோ மன்னனின் ஆட்சி என்பது சடங்கு, சமயம் மற்றும் பெயரளவிலான மேலாதிக்கமாகவே திகழ்ந்தது. இங்கு ‘கூறு’ என்பது தன்னாட்சி அதிகாரம் கொண்ட உள்ளூர் அமைப்புகளைக் குறிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், உள்ளூர் அமைப்புகளின் சுயாதீன நிர்வாகமும், மன்னனின் உயர்நிலை இறையாண்மையும் இணைந்து செயல்பட்ட ஒரு நெகிழ்வான அமைப்பே ‘கூறாக்க அரசு’ ஆகும்.

உத்தமசோழனது அதிகாரமாற்றத்திற்குப் பிறகு கூறாக்க அதிகாரத்தை மட்டுப்படுத்த வேண்டிய அல்லது அழிக்க வேண்டிய சூழலை இராசராசன் உணர்ந்திருந்தார் எனலாம். இராசராசசோழன் காலத்தில் வளநாடுகள் உருவாக்கப் பட்டமை ஒரு எளிய நிர்வாகச் சீரமைப்பு என அறிவிக்கப்பட்ட நிலவியல் மறுசீரமைப்பாகும். ஏற்கெனவே நிலவிய நாடுகள் மற்றும் உள்ளூர் அதிகார மையங்களை ஒரு புதிய பேரரசு நிர்வாக எல்லைக்குள் அடைக்கும் சூழ்ச்சியாகும்.

இந்நிலவியல் மறுசீரமைப்புடன் அரச அதிகாரத்தைப் புனிதப்படுத்தும் செயலும் இணைந்து செயல்பட்டது. சதுர்வேதிமங்கலங்கள், பிரமதேயங்கள் மற்றும் சைவக் கோயில்கள் விரிவடைந்தமை நிலம், வேளாண்மை, சமயம் மற்றும் அரச அதிகாரத்தை ஒன்றாக இணைக்கும் புதிய நிறுவனங்களை உருவாக்கின. சதுர்வேதிமங்கலங்களை வெறும் பிராமணக் குடியிருப்புகளாக மட்டும் பார்க்காமல், வேளாண் நிலங்களை உற்பத்திக்குள் கொண்டுவருதல், புதிய சமூக அதிகாரக் குழுக்களை உருவாக்குதல் மற்றும் அரச ஆதரவை வைதீக நெறியுடன் இணைத்தல் போன்ற பல செயல்பாடுகள் நிகழும் இடங்களாக திகழ்ந்தன. இதன் மூலம் அரசனின் ஆட்சிக்கு அறம் மற்றும் புனிதம் சார்ந்த ஏற்புடைமை கிடைத்தது. இவ்வகையில், அரச அதிகாரத்தின் மையப்படுத்தலும் அதன் புனிதப்படுத்தலும் தனித்தனியான செயல்களாக இல்லாமல், ஒன்றுக்கொன்று வலுசேர்த்து அரசை உருவாக்கும் நடவடிக்கைகளாக அமைந்தன.

நிலவுடைமை சார்ந்த வேளாண் உற்பத்திப் பெருக்கம் உபரி உற்பத்தியை அதிகரித்தது. இந்த உபரி பொருள்களே கோயில்கள், சந்தைகள், நகரங்கள், வணிகக் குழுக்கள் மற்றும் தொலைதூர வணிக வலையமைப்புகளோடு இணைவதற்கான பொருளியல் அடித்தளமாக அமைந்தன. எனவே, வேளாண் விரிவாக்கம், நிலவுடைமை மாற்றம், கோயில் பொருளியல் மற்றும் வணிக வளர்ச்சி ஆகியவற்றைத் தனித்தனி நிகழ்வுகளாகப் பார்க்காமல், சோழ அரசின் ஒருங்கிணைந்த கூறுகளாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இராசராசசோழன் காலத்தில் தீவிரமடைந்த வளநாட்டு மறுசீரமைப்பு, கோயில் மையப்பட்ட புனிதப்படுத்துதல் மற்றும் பொருளியல் ஒருங்கிணைப்பு ஆகிய நடவடிக்கைகள், பழைய கூறாக்க அதிகார அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தின. இதன் விளைவாக, உள்ளூர் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு, பேரரசின் அதிகாரம் நேரடியாகத் தலையிடக்கூடிய புதிய நிலவியல் சூழல் உருவானது.

இராசேந்திரசோழன் காலத்தில் இந்த மாற்றம் அடுத்த கட்டத்தை எட்டியது. பரந்த நிலப்பரப்பையும் கடல்வழி வணிகத் தொடர்புகளையும் கொண்ட ஒரு பேரரசிற்கு நிலையான படைவலிமை, படையணிகளின் நேரடிக் கட்டுப்பாடு, பாதுகாப்பான அரசு மையம் மற்றும் முக்கியப் பெருவழிகளைக் கட்டுப்படுத்தும் திறன் ஆகியவை தேவையாக இருந்தன.

இதன் பின்னணியில் படைவீடுகள், உட்படைவீடுகள், இராணுவக் குடியிருப்புகள் மற்றும் தலைநகரைச் சுற்றிய பாதுகாப்பு அமைப்புகளின் மீது கூடுதல் கவனம் கொள்ள வேண்டியத் தேவை உருவானது. இவ்வாறு இராசராசன் காலத்தில் நிர்வாக நிலவியல் மறுசீரமைப்பாகத் தொடங்கிய மையப்படுத்தல், இராசேந்திரன் காலத்தில் இராணுவ அதிகாரத்தையும் தலைநகர அமைப்பையும் நேரடியாகப் பேரரசுடன் இணைக்கும் மிக வலுவான கட்டத்தை எட்டியது.

இதனுடன் கடல் வணிகத்தின் அரசியல் பரிமாணத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டும். பதினொன்றாம் நூற்றாண்டில் வங்காள விரிகுடா மற்றும் தென் கிழக்காசியக் கடல் பகுதியில், சைவ, வைதீக, பௌத்த அரசுகளும் பல்வேறு வணிகக்குழுக்களும் துறைமுகங்களும் ஒரு சிக்கலான வலையமைப்பாகச் செயல்பட்டன.

இந்நிலையில், இராசேந்திர சோழனின் கடல் கடந்த படையெடுப்புகளைப் பாதுகாப்பான வணிக வழித்தடங்கள், அரசியல் மேலாதிக்கம், துறைமுகங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பேரரசின் கடல்சார் செல்வாக்கு ஆகியவற்றின் பின்னணியில் நோக்க வேண்டும். இராசேந்திரசோழனின் சோழரசு தனது கடற்படை எடுப்புகளின் மூலம் பௌத்த ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கடல் வணிகப் பாதைகளில் தனது அரசியல் மற்றும் இராணுவ அதிகாரத்தை நிறுவியது. இதை சைவ-வைதீக புனிதப்படுத்தப் பட்ட ஆட்சியதிகாரத்தின் நீட்சியாக கருதலாம். இதனைச் சமயம் சார்ந்த மோதலாக மட்டும் பார்க்காமல், கடல் வணிகத்தின் மீதான அரசியல் கட்டுப்பாடும், சைவ-வைதீக அரசப் புனிதப்படுத்துதலும் ஒரே கால கட்டத்தில் இணைந்து செயல்பட்டன எனலாம்.

இந்தப் பின்னணியில்தான் கங்கைகொண்டசோழபுரத்தின் தோற்றம் தனித்த முக்கியத்துவம் பெறுகிறது. அது தஞ்சாவூரிலிருந்து தலைநகரை மாற்றிய ஒரு புவியியல் நிகழ்வு மட்டுமல்ல; இராசராசன் காலத்தில் தொடங்கிய நிர்வாக மையப்படுத்தல், வளநாட்டு நிலவியல் மறுசீரமைப்பு, சதுர்வேதிமங்கலங்களின் விரிவாக்கம், சைவ-வைதீக அரசப் புனிதப்படுத்துதல், வேளாண் உற்பத்திப் பெருக்கம், வணிக வளர்ச்சி மற்றும் பேரரசின் படைவலிமை ஆகிய அனைத்தையும் ஒரு புதிய தலைநகர அமைப்பில் ஒருங்கிணைத்த அடுத்தகட்ட அரச உருவாக்கமாகும்.

கங்கைகொண்டசோழபுரத்தின் திருமாளிகைகள், திருமதில்கள், திருவாசல்கள், பெருங்கோயில், பெருந்தெருக்கள், அங்காடி-பேரங்காடிகள், மாளிகைகள், வேளங்கள், படைவீடுகள், பெருவழிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள நீரியல்-வேளாண் அமைப்புகள் ஆகியவை வெறும் கட்டிடங்கள் அல்ல. அவை அரசியல், இராணுவ, சமய, பொருளியல் மற்றும் சமூக அதிகாரங்களைத் தனித்தனி நிலவியல் இடங்களில் நிறுவனமயமாக்கி, மீண்டும் பேரரசு மையத்தோடு இணைத்த ஒரு மிகச்சிறந்த திட்டமிடப்பட்ட அதிகார நிலவியலின் கூறுகளாகும்.

கங்கைகொண்டசோழபுரத்தின் உருவாக்கத்தை வெறும் “புதிய தலைநகரம் அமைத்தல்” என்று மட்டும் சுருக்கிவிட முடியாது. இதனை “புனிதப்படுத்தப்பட்ட பேரரசு அதிகாரத்தின் இடவியல் மறுகட்டமைப்பு” என்று கூறலாம்.

இராசராசசோழன் காலத்தில் வளநாடுகள் மூலம் நிலவியல் எல்லைகள் மறுசீரமைக் கப்பட்டு, உள்ளூர் அதிகாரங்கள் பேரரசு அமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டன. சதுர்வேதி மங்கலங்களும் கோயில் நிறுவனங்களும் அரச அதிகாரத்தின் புனிதத் தன்மையை நிலப்பரப்பில் நிலைநிறுத்தின; வேளாண் உற்பத்திப் பெருக்கமும் வணிக வளர்ச்சியும் அதற்குத் தேவையான பொருளியல் அடித்தளத்தை வலுப் படுத்தின. இதன் தொடர்ச்சியாக, இராசேந்திரன் காலத்தில் படைவலிமையும் கடல்சார் அதிகாரமும் விரிவுபடுத்தப்பட்டன. இறுதியில், இந்த அனைத்து அதிகாரக் கூறுகளும் கங்கைகொண்டசோழபுரம் என்னும் புதிய பேரரசுத் தலைநகரத்தின் இடவியலில் ஒன்றாக ஒருங்கிணைக்கப்பட்டன

தஞ்சாவூரிலிருந்து கங்கைகொண்டசோழபுரத்திற்கு நிகழ்ந்த மாற்றம் வெறும் தலைநகர இடமாற்றம் அல்ல. இது, கூறாக்க அதிகார அமைப்பிலிருந்து மறுசீரமைக் கப்பட்ட பேரரசு அதிகாரத்திற்கும், வெறும் நிர்வாக மேலாண் மையிலிருந்து புனிதப்படுத்தப்பட்ட இடவியல் அதிகாரத்திற்கும் மாறிய வரலாற்று மாற்றத்தின் மிகச்சிறந்த நகர வடிவமாகக் கருதப்பட வேண்டும்.

No comments:

Post a Comment